108. மறம் பய மலைந்தவர்- பாடல் 1

இறைவனைப் பணிந்து
108. மறம் பய மலைந்தவர்- பாடல் 1

முன்னுரை:

திருவைகா சென்று கோழை மிடறாக கவி என்று தொடங்கும் பதிகம் பாடி இறைவனைப் பணிந்து வணங்கிய ஞானசம்பந்தர், அடுத்து அருகிலுள்ள புறம்பயம் தலம் சென்று இறைவனைப் பணிந்து பதிகம் பாடுகின்றார். ஞானசம்பந்தர், அப்பர் பிரான் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரப் பதிகங்கள் பெற்ற தலம். மணிவாசகரும் தனது கீர்த்தி திருவகவல் பதிகத்தில் புறம்பயம் அதனில் அறம் பல அருளியும் என்று குறிப்பிடுகின்றார். தென்முகக் கடவுளின் முக்கிய தலமாக கருதப்படுகின்றது. ஞானசம்பந்தர் புறம்பயம் சென்றதை குறிப்பிடும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் சம்பந்தரை சேக்கிழார் நீடிய அறம்தரு கொள்கையார் என்று குறிப்பிடுகின்றார். நீடிய அறம் என்று முக்தி நிலை உணர்த்தப் படுகின்றது. பிள்ளையாரின் பாடல்கள் முக்தி நெறிக்கு வழி காட்டும் தன்மையது என்பதால் இந்த பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது. இந்த தன்மை பற்றியே சிவம் பெருக்கும் பிள்ளையார் என்றும் அவர் அழைக்கப்படுகின்றார்.   

    புறம்பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய்
    திறம்புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ்
    நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய
    அறம் தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்   
 

கும்பகோணத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவில் உள்ள தலம் இன்னம்பருக்கு மிகவும் அருகில் உள்ளது. கும்பகோணம் மற்றும் சுவாமிமலை ஆகிய இரண்டு இடங்களிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. பிரளயத்திற்கு புறம்பாக இருந்து பிரளயத்தை கடந்து அழியாமல் இருந்ததால் புறம்பயம் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இந்த பெயர் புறம்பியம் என்று மருவி விட்டது. இறைவன் பெயர் சாட்சிநாதர்; இறைவியின் பெயர் கரும்படுசொல்லம்மை. இங்குள்ள விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இவருக்கு விநாயக சதுர்த்தி அன்று தேன் அபிஷேகம் செய்யப்படும். எவ்வளவு தேன் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் இந்த சிலையால் உரிஞ்சப்படும் விந்தையை நாம் காணலாம். மேலும் ஒரு எறும்பு கூட சன்னதியில் காண முடியாது. 

பாடல் 1: 

    மறம் பயம் மலைந்தவர் மதில் பரிசு அறுத்தனை
    நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை
    திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரு நால்வர்க்கு
    அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்

விளக்கம்:

மலைப்பு என்ற சொல்லுக்கு போர் என்ற பொருளும் உள்ளது. மறம்=பாவச் செயல்கள்; அறம் என்பதற்கு எதிர்ச்சொல் மறம். அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி என்று மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் கூறுகின்றார். தங்களது பறக்கும் கோட்டைகளில் அமர்ந்தவாறு போர் புரிந்து உலகத்தவர் அனைவரையும் துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்கள் இந்த போர்களால் அடைந்தது பாவச் செயல்கள் தானே. அதனை உணர்த்தும் வண்ணம் பாவச் செயல்களை பயனாகப் பெற்றுத் தந்த போர்கள் புரிந்த அரக்கர்கள் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். 

பரிசு=தன்மை; மதில்களை தன்மையை அறுத்தவன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மூன்று மதில்களும் ஒரே நேர்க்கொட்டினில் வரும் நேரத்தில் மட்டுமே இந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வலிமையான வரம். மூன்று மதில்களும் எப்போதும் வானில் பறந்து கொண்டே இருப்பதால், அவைகள் இருக்கும் இடம் மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு மாறிக்கொண்டே இருந்தாலும் இரண்டு மதில்களை ஒரு கோட்டினால் இணைக்க முடியும் என்றாலும் மூன்றாவது மதிலும் அந்த நேர்கோட்டினில் வருவது என்பது எப்போதாவது ஒரு முறை நிகழக்கூடிய சம்பவம். மேலும் மதில்கள் நகர்ந்து கொண்டே இருப்பதால் அவ்வாறு ஒரே நேர்கோட்டில் இருக்கும் நேரமும் மிகவும் குறைந்தது. இந்த தன்மையே மிகவும் வலிமையான அரணாக இருந்ததால், எவராலும் அழிக்க முடியாத மதில்களாக அவை விளங்கின. ஆனால் இந்த தன்மையை மாற்றி, மூன்று மதில்களும் ஒரே நேர்க்கோட்டினில் இருந்த குறைந்த நேரத்தில், ஒரே அம்பினால் அவை மூன்றையும் வீழ்த்தி எரியச் செய்தவர் பெருமான், என்பதை குறிப்பிடும் வண்ணம் மதில் பரிசு அறுத்தவன் என்று பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பரிசு என்ற சொல்லுக்கு பெயர்ந்து பல இடங்களும் பறந்து சென்று, அழிக்கும் தன்மை என்று பொருள் கொண்டு. திரிபுரத்தவர்கள் செய்து கொண்டிருந்த தீச்செயல்களை, அவர்களை அழிப்பதன் மூலம் நிறுத்தியவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.      

நிறம் பசுமை என்று அம்மையின் உடல் நிறத்தினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அம்மையின் நிறத்தினை கருமை என்றும் கருநீலம் என்றும் பச்சை என்று திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. திருமாலின் நிறத்தையும் அவ்வாறே பச்சை என்று பல பிரபந்த பாடல்கள் குறிப்பிடுகின்றன. நிறம் பசுமை செம்மையோடு என்று குறிப்பிடுவதன் மூலம் அம்மையப்பரின் திருக்கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. 

பிராட்டியின் நிறம் பச்சை என்பதை உணர்த்தும் திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பெருமானின் உடலில் பல விதமான வண்ணங்களும் உள்ளதால் இன்ன நிறம் என்று நாம் பெருமானை குறிப்பிட முடியாது என்று அப்பர் பிரான் குடந்தை கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.5) குறிப்பிடுகின்றார். அவரது கழுத்து விடத்தினை தேய்க்கியதால் கருநீல நிறத்துடனும், செம்பொன் நிறத்தில் உள்ள மேனியில் பூசப்பட்ட திருநீறு வைரத்தைப் போன்று வெண்மை நிறத்துடனும், அன்னையை உடலின் ஒரு கூறாக ஏற்றுக்கொண்ட இடது பாகத்து மேனி பச்சை நிறத்துடனும் நெடிதுயர்ந்த பளிங்கின் உருவமாக காணப்படும் பெருமானின் திருவுருவ நிறத்தினை என்னவென்று சொல்ல முடியும் என்ற கேள்வியை நம்மிடம் அப்பர் பிரான் கேட்கின்றார். கோலமணி=அழகிய மணிகள்; கொழித்து=அடித்துக் கொண்டு வரப்படும், மேடான மேற்கு பகுதியிலிருந்து தாழ்வான கிழக்கு சமவெளிக்கு பாயும் காவிரி நதியை கீழே இறங்கின நதி என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமான் ஆண் என்றும் பெண் என்றும் அலி என்றும் சொல்ல முடியாத வண்ணம் இருப்பதால் அவரது உருவம் இன்ன தன்மை என்று சொல்ல முடியாது என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். 

    காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில்
        அழல் விழுங்கக்  கண்டார் போலும்
    ஆலதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு
        பெண் அலி அல்லர் ஆனார் போலும்
    நீல உரு வயிர நிரை பச்சைச் செம்பொன் நெடும் பளிங்கு
        ஒன்று அறிவரிய நிறத்தார் போலும்  
    கோலமணி கொழித்து இழியும் பொன்னி நன்னீர்க்
       குடந்தை கீழ்க்கோட்டத்து எம்   கூத்தனாரே

பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல் ஒன்றினில் (3.112.6) பெருமானின் திருமேனி நிறம் பச்சை என்று சம்பந்தர் கூறுகின்றார். பிராட்டியைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டதால், அவரது திருமேனியின் நிறம் இடது பாகத்தில் பச்சையாக காணப்படுகின்றது என்பதை நாம் உணருகின்றோம். தனது மனைவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றதாலும், பிச்சை ஏற்பதாலும் வித்தியாசமாக காணப்படும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், இவ்வாறு பெருமான் இருப்பதன் காரணத்தை நாம் அறியமுடியாது என்று கூறுகின்றார். எனவே தான் இவர் தன்மை அறிவார் ஆர் என்று இந்த பாடலை முடிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானின் பண்பும், அருட் செய்கைகளும் குறிப்பிடப்பட்டு அவரது தன்மையை நம்மால் அறிய முடியாது என்று சம்பந்தர் உணர்த்துகின்றார்.   

    பச்சைமேனியர் பிச்சைகொள்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

இடைமருது தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்திலும் (6.17.7) அப்பர் பிரான் இறைவனை பச்சை நிறம் உடையர் என்று குறிப்பிடுகின்றார். பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்று பல்லாண்டு பதிகத்தில் கூறுவது போன்று அப்பர் பிரான் என்றும் உள்ளார் என்று இந்த பாடலில் இறைவனின் அழியாத தன்மையை குறிப்பிடுகின்றார். பல இல்லங்கள் தேடிச் சென்று பிச்சை எடுத்தாலும், பெருமை குறையாதவர் பெருமான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

    பச்சை நிறம் உடையர் பாலர் சாலப் பழையர் பிழை
        எலாம் நீக்கி ஆள்வர்
    கச்சைக் கதநாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று
        கையேந்தி இல்லம் தோறும்
    பிச்சை கொள நுகர்வர் பெரியார் சாலப் பிறங்கு
         சடைமுடியர் பேணும் தொண்டர்
    இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது
         மேவி இடம் கொண்டாரே  

நீத்தல் விண்ணப்பத்தின் பாடல் ஒன்றினில் மணிவாசகர் பச்சையன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பொதுவாக கனல் போன்று சிவந்த திருமேனியை உடையவன் பெருமான் என்று திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. என்றாலும் அவனது திருமேனி பல்வேறு வண்ணங்கள் உடையதாக உள்ள தன்மை திருமுறைப் பாடல்களில் கூறப் படுகின்றன. திருமேனி முழுவதும் திருநீற்றினை பூசிக் கொள்வதால் வெண்மை நிறத்துடனும், ஆலகால விடத்தை தேக்கியதால் கழுத்தின் ஒரு பாகம் கருமை நிறத்துடனும். அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதால் இடது பாகம் பச்சை நிறத்துடனும் அவரது சிவந்த திருமேனி காணப்படுவதை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சச்சையன்=இளமையாக இருப்பவன்; கால்=காற்று; தடம் தாள=பருத்த காலினை உடைய; விச்சை=வித்தை, வியத்தகு தன்மை; ஐந்து பூதங்களிலும் கலந்து நின்று பெருமான் அவற்றை இயக்கும் தன்மையை வியத்தகு தன்மை என்று அடிகளார் கூறுகின்றார். ஒண் படம்=அழகிய படம்; அடல் கரி=வலிமை உடைய யானை; 

    சச்சையனே மிக்க தண்புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம்
    விச்சையனே விட்டு இடுதி கண்டாய் வெளியாய் கரியாய்
    பச்சையனே செய்ய மேனியனே ஒண் பட அரவக் 
    கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே

திருமூலர் சக்திபேதம் எனப்படும் பகுதியில் இறைவியின் தன்மையை உணர்த்தும் பொழுது நீங்காத பச்சை நிறத்தை உடையவள் என்று குறிப்பிடுகின்றார். ஓங்காரியாக இருக்கும் அன்னை சதாசிவன் மகேசுரன் உருத்திரன் மால் அயன் ஆகிய ஐவரையும் பெற்றெடுத்தாள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஹ்ரீம் என்ற எழுத்தினில் அம்மை இடம் கொண்டு இருப்பது இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. ஹ்ரீம் என்ற எழுத்து இரீங்காரம் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது.  

    ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை
    நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
    ஆங்காரியாகியே ஐவரைப் பெற்றிட்டு
    இரீங்காரத்துள்ளே இனிது இருந்தானே  

நான்காம் தந்திரம் நவாக்கரி சக்கரம் அதிகாரத்தில் பல இடங்களில் அம்மையின் நிறம் பச்சை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அத்தகைய பாடல் ஒன்றினை நாம் இங்கே காண்போம். பச்சையம்மன் கோயில் என்று பல கிராமங்களிலும் வீரசக்தியின் கோயில் இருப்பதை நாம் காணலாம்.   

    உகந்தநாள் பொன்முடி முத்தாரமாக
    பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
    மலர்ந்தெழு கொங்கை மணிக் கச்சு அணிந்து
    தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சையாமே 

திறம்=உறுதியானது, நிலையானது; உண்மைப் பொருளை உள்ளடக்கியது; திறம் பயனுறு பொருள்=உண்மைப் பொருளை உள்ளடக்கிய வேதங்களின் பயனையும் பொருளையும்; 
           
பொழிப்புரை:

பாவமே பயனாக வரும் வண்ணம் பல கொடிய செயல்கள் செய்து அனைவரையும் போருக்கு அழைத்து துன்புறுத்திய திருபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளின் வலிமையான தன்மையை அறுத்து, மூன்று கோட்டைகளையும் ஒருங்கே எரித்தவனும், பசுமை நிறத்துடன் செம்மை நிறமும் பொருந்துமாறு கலந்த திருமேனியை உடையவனும், உண்மைப் பொருளை உள்ளடக்கியதும் வீடுபேறாகிய பயனைத் தருவதும் ஆகிய வேதங்களின் பொருளினை உணர்ந்து தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறத்தின் பயனை விரித்து உரித்தவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com