125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 4

உறையும் பிரமன்
125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 4

பாடல் 4:

    பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
    ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிடச்
    சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
    இந்து வார்சடை எம் இறையே

விளக்கம்:

இந்து=சந்திரன்; பூசுரர்=அந்தணர்கள்; சுரர் என்றால் தேவர்கள் என்று பொருள்; தேவர்களைப் போன்று சிறப்பு உடையவர்களாய், நிலவுலகில் வாழும் அந்தணர்கள். பல திருமுறைப் பாடல்களில் அந்தணர்கள் பெருமானைப் போற்றி வழிபடுவது குறிப்பிடப் படுகின்றது. நாம் இங்கே பூசுரர் என்று குறிப்பிடும் சில பாடல்களையும் தேவர்களுக்கும் பிரமனுக்கும்  ஒப்பாக அந்தணர்களை தேவார முதலிகள் கருதியதையும் காண்போம்.

சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.48.8) திருஞானசம்பந்தர் பூசுரர் என்று அந்த தலத்து அந்தணர்களை குறிப்பிடுகின்றார். தாமரை மலரில் உறையும் பிரமன் போன்ற அந்தணர்கள் என்று இங்கே கூறுகின்றார். சே=இடபம்; மா=குதிரை; பொதுவாக தேர்கள் என்றால் குதிரைகளால் இழுக்கப்படும் என்பதை நாம் அறிவோம். இராவணன் பயன்படுத்திய தேர், புட்பக விமானம், வானில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தது என்பதால் குதிரைகள் தேவைப்படாத தேராக விளங்கியது. என்றாலும் தேரின் பொதுத் தன்மை கருதி மா அடைந்த தேர் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தேர்ப்படை குதிரைப்படை உடையவனாக விளங்கினான் என்று உணர்த்தும் வண்ணம் மாவடைந்த தேர் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.      

    மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன் தன்
    நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே
    பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
    சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றினில் (2.63.2) திருஞானசம்பந்தர் பூசுரர் நாள்தோறும் இறைவனை பூவும் நீரும் கொண்டு, அவனது திருநாமங்களைச் சொல்லிப் போற்றி வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். மேவா=பொருந்தாத, அறநெறியில் பொருந்தாத சிவநெறியில் பொருந்தாத என்று பொருள் கொள்ள வேண்டும்.  

    மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால்
    ஏவார் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர்
    நாவால் நாதன் நாமம் ஓதி நாடோறும்  
    பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே

தென்குடித் திட்டை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.35.9) வேதம் ஓதி அந்தணர்கள் பெருமானின் திருவடிகளைத் தொழுவதாக சம்பந்தர் கூறுகின்றார். ஆரணம்= வேத மொழிகள்; அணங்கு=தெய்வத் தன்மை உடைய; காரணன்=உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பவன். சீரணங்கு=தனது  சிறப்புகளால் தெய்வத் தன்மை உடைய இறைவன்

    நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
    காரணன் அடி முடி காணவொண்ணான் இடம் 
    ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழும்
    சீர் அணங்கும் புகழ்த் தென்குடித் திட்டையே

புறவம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.84.10) சம்பந்தர் சீர்காழியில் வாழும் அந்தணர்கள் தொடர்ந்து ஓதும் மறையின் ஒலி நகரம் எங்கும் நிறைந்து காணப்பட்டதாக கூறுகின்றார். கோ=நீர்; சரம்=அதனில் இயங்கும்; நுகர்பவர்=உண்பவர்; கோசரம்=நீரில் வளரும் மீன்கள்; சம்பந்தர் காலத்தில் சமணர்கள் மீன்களை உட்கொள்பவர்களாக இருந்தனர் போலும்; கொழுகிய=தோய்ந்த புத்தர்கள் துவராடை அணிந்த நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பாசுரம்=பாடல்கள்; பளகர்கள்=பாவிகள் 

    கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர்
    பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியிவர்
    நீசரை விடும் இனி நினைவுறு நிமலர் தம் உறை பத்தி
      பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒழி மலி புறவமே

 
திருவாரூர் தலத்தில் வாழும் அனைவரையும் அவர்களது சிறப்பினை கருதி பூசுரர் என்று அப்பர் பெருமான் திருவாரூர் பதிகத்தின் பாடலில் (4.101.4) குறிப்பிடுகின்றார். தேசன்=தேஜஸ் உடையவன்; தேஜஸ் என்றார் வடமொழிச் சொல் தேசு என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வன்கண்ணர்=கொடிய பார்வையினைக் கொண்டவர்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, சமணர்களின் உள்ளத்தில் இருந்த வஞ்சம் அவர்களது பார்வையில் வெளிப்பட்டதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார் போலும். இரக்கம் இல்லாத மனதினை உடையவர்கள்; மொண்ணரை= வழுக்கை;  ஏசறுதல்=இடைவிடாது கவலைப்பட்டு ஏங்குதல்; 

    மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு 
    ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு கொலோ
    தேசனை ஆரூர்த் திருமூலட்டானனை சிந்தை செய்து 
    பூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

பொழிப்புரை:

நிலவுலகில் வாழும் தேவர்கள் என்று சிறப்பித்து சொல்லப்படும் அந்தணர்கள் போற்றிப் புகழும் பூந்தராய் நகரத்தில் பொருந்தி உறையும் பெருமானை, சந்திரனைத் தனது சடையில் தரித்த எமது இறைவனை, புகழ்ந்து பாடினால் நமது மனதினை வருத்தும் சிந்தைனைகளும் உடலை வருத்தும் நோய்களும் முற்றிலும் அழியும் வண்ணம் இறைவன் அருள் புரிவான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com