125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 5

புராணங்களும் திருமுறை
125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 5


பாடல் 5:

    பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய்
    மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
    நும் தம் மேல்வினை ஓட வீடு செய்
    எந்தை ஆய எம் ஈசன் தானே

 

விளக்கம்:

மலிந்த=மிகுந்த; பிரளய காலத்தில் பிரமன் திருமால் உள்ளிட்ட அனைவரும் அழிந்து பட, தான் ஒருவனே நிலையானவன் என்பதை உணர்த்தும் வண்ணம், பிரமன் மற்றும் திருமாலின் எலும்புக் கூடுகளை அணிந்து கங்காள வேடத்தராக பெருமான் காட்சி அளிக்கின்றார் என்று புராணங்களும் திருமுறை பாடல்களும் உணர்த்துகின்றன. அவ்வாறு என்பு அணிந்த நிலையை குறிப்பிடும் சம்பந்தர் பொலிந்த என்பு என்று கூறுகின்றார். பெருமானை வந்தடைந்தவுடன் இறந்தவர்களின் உடலில் இருந்த எலும்பும் பொலிவுடன் விளங்குகின்றன போலும். இந்த குறிப்பு நமக்கு நாரையூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடலை (5.55.8) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் எலும்பு பூண்டு இருப்பினும் இறைவன் மிகவும் அழகாக தோன்றுகின்றார் என்று கூறுகின்றார். எலும்பினை ஆபரணமாக அணிந்து, எருதின் மீதேறி, இளம்பிறைச் சந்திரனை, மின்னல் போன்று ஒளி மிளிரும் முறுக்கான சடையின் மீது அணிந்து, நண்பகலில் பல இல்லங்கள் சென்று, பெருமான் பிச்சை கேட்கின்றார். நாரையூர் வீற்றிருக்கும் அன்பனாகிய பெருமானுக்கு இந்த செயல் எந்த விதத்திலும், இழிவினை ஏற்படுத்தாமல், அவருக்கு அழகினைச் சேர்ப்பது மிகவும் வியப்பாக உள்ளது என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. 

    என்பு பூண்டு எருது ஏறி இளம்பிறை
    மின் புரிந்த சடை மேல் விளங்கவே
    நன்பகல் பலி தேரினும் நாரையூர்
    அன்பனுக்கு அது அம்ம அழகிதே 

உயிருடன் பிணைந்துள்ள வினைகள் மொத்தத்தினையும் நாம் ஒரே பிறவியில் அனுபவித்து கழிக்க வேண்டிய நிலையினை இறைவன் நமக்கு தருவதில்லை. அந்த நிலை ஏற்படுமாயின் நமது தூல உடலுக்கும் சூக்கும உடலுக்கும் அந்த வினைகளின் தன்மையைத் தாங்கும் வலிமை இருப்பதில்லை. எனவே தான் உயிர்களின் மீது கருணை கொண்டுள்ள பெருமான், உயிரினைப் பிணித்துள்ள வினைகளின் ஒரு பகுதியையே இந்த பிறவியில் அனுபவித்து கழிக்கும் நிலையினை அளித்து அருள் புரிகின்றான். இந்த நிலையினால் எஞ்சிய வினைகளை கழிப்பதற்காக பல பிறவிகள் எடுக்க வேண்டிய நிலையில் அனைத்து உயிர்களும் உள்ளன. இவ்வாறு அடுத்து வரும் பிறவிகளுக்கு ஒதுக்கப் படும் வினைகளை சஞ்சித வினைகள் என்று கூறுவார்கள். இந்த பிறவியில் நாம் வினைகளை அனுபவித்து கழிக்கும் நிலையில் நமக்கு சேரும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். இந்த இரண்டு வகையான வினைகளும் சேர்ந்து நாம் இனி எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு வினைகளாக மாறுகின்றன. மேலை வினைகள் என்பதற்கு இனி வரவிருக்கும் வினைகள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவன் ஒருவனுக்கே இந்த மேலை வினைகளை முற்றிலும் கழிக்கும் வல்லமை உள்ளது. இவ்வாறு அனைத்து மேலை வினைகளும் கழிந்த நிலையில் உயிர் வீடுபேறு பெறுவதற்கான தகுதியை அடைகின்றது இந்த தன்மை தான் இந்த பாடலில் குறிப்படப்பட்டுள்ளது.          

பொழிப்புரை:

தனது திருமேனியில் அழகுடன் பொலியும் எலும்புகளை அணிந்துள்ள பெருமானை, பூந்தராய் தலத்தில் உறையும் இறைவனை, அவன் பால் மிகுந்த அன்பு உடையவர்களாய் வணங்குவீராயின் உங்கள் மீது பொருந்தியுள்ள வினைகள், உம்மை விட்டு நீங்கி ஓட வழிவகுத்து வீடுபேறு அடைவதற்கான தகுதியை, எமது தந்தையும் தலைவனும் ஆகிய இறைவன் உங்களுக்கு அளிப்பான்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com