125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 7

வாய், மனம், உடல்
125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 7


பாடல் 7:

    புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
    பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
    பாவம் ஆயின தீரப் பணிந்திடும்
    சேவது ஏறிய செல்வன் தானே  

விளக்கம்:

பரமன்=அனைவர்க்கும் மேலானவன். பெருமானின் திருமேனியில் இருக்கும் எப்போதும் அவருடனே இருந்தாலும், பாம்பின் பொதுவான தன்மை பற்றி புற்றில் வாழும் நாகம் என்று கூறுகின்றார். பாவம் ஆயின என்று கூறுவதை, மனம் மெய் மொழிகளால் நாம் செய்யும் பாவங்கள் என்று விளக்கம் அளிக்கின்றனர். இவ்வாறு கூறுவது சம்பந்தர் அருளிய திருநாரையூர் பதிகத்தின் முதல் பாடலை (2.86.1) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. 

    உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம்ம செயல் தீங்கு
         குற்றம் உலகில்
    வரையில் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
          ஏத்தி நித்தம் நினைமின்
    வரை சிலையாக அன்று மதில் மூன்று எரித்து வளர்
           கங்குல் நங்கை வெருவத்
    திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத்
            திருநாரையூர் கை தொழவே

இறைவன் உயிர்களை அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப தகுந்த உடல்களுடன் இணைக்கின்றான். அவ்வாறு இணைக்கப்படும் உடல்களில் மனித உடல் உட்பட பல்வேறு ஜீவராசிகளின் உடல்கள் அடக்கம். இவ்வாறு இருக்கையில், மனித உடலைப் பெற்று வாழும் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் மனித உடலுக்கு தான் இறைவன் முப்பத்தாறு தத்துவங்கள் எனப்படும் கருவிகள் அளித்து உயிர்கள் உய்யும் வழியினைத் தேடிக்கொள்ள வழி வகுத்துள்ளான். ஆனால் இந்த கருவிகளின் உதவியுடன் மெய்ப்பொருளை உணர்ந்து மேலும் வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து நமது பழைய வினைகளைக் கழித்து வீடு பேற்றை அடைவதை நமது குறிக்கோளாக கொண்டு வாழாமல் அதற்கு நேர்மாறாக மேலும் மேலும் வினைகளைச் சேர்த்துக்கொள்ளும் வண்ணம் நாம்  வாழ்கின்றோம். சுருக்கமாக சொல்வதானால், வாக்கினால் வேண்டாத தீமைகளைப் பேசி, மனத்தினால் தீய எண்ணங்களை நினைத்து, உடல் உறுப்புகளால் பல பாவங்களைச் செய்து வினையை பெருக்கிக்கொண்டு, பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை பெற முடியாமல் தவிக்கின்றோம். இவ்வாறு அல்லற்படும் மனிதனுக்கு சம்பந்தர் இந்த நாரையூர் பதிகத்தின் முதல் பாடலில் அறிவுரை கூறுகின்றார். நாரையூர் பெருமானை ,மனதினால் நினைத்து, வாக்கினால் துதித்து, கைகளால் தொழுது நாம் உய்யும் வகையைக் காட்டும் பாடல் இது. எந்த முக்கரணங்கள் (வாய், மனம், உடல்) தீயனவற்றைச் செய்து வினையை பெருக்கிக் கொள்கின்றதோ, அந்த மூன்று கரணங்கள் மூலமாக தங்களது செயல்களுக்கு பரிகாரம் தேடும் முகமாக என்ன செய்ய வேண்டும் என்று அழகாக கூறும் பாடல் இது. மனதினால் இறைவனை சிந்தித்தும் உடலால் அவனை வணங்கியும் வாக்கினால் அவனது புகழினைப் பாடியும் நாம் நமது குற்றங்களை பொறுத்து அருளுமாறு இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படும் அறிவுரை. .    

உரையினில் வந்த பாவம்=பொய்யான சொற்களை பேசுதல், பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் சொற்களை பேசுதல், கடுமையான சொற்களை பேசுதல், பயனற்ற சொற்களை பேசுதல் என்பன நமது மொழியால் வரும் பாவங்களாக கருதப் படுகின்றன. உணர்=உணர்தற்கு உரிய கருவியாகிய மனம்; உணர் நோய்=மனதினில் தோன்றும் தீய எண்ணங்கள்; மனதினில் தோன்றும் எண்ணங்களே நமது செயல்களாக வடிவம் பெறுகின்றன. சில தீய எண்ணங்களை செயலாக மாற்றும் திறன் இல்லாமையால் நாம் அந்த செயல்களை செய்யாத போதிலும் அத்தகைய தீய எண்ணங்கள் பாவமாக கருதப் படுகின்றன. செயல் தீங்கு குற்றம் என்பதை தீங்கு செயல் குற்றம் என்று மாற்றி வைத்து, பொருள் கொள்ள வேண்டும். உம்ம என்ற சொல்லினை இந்த மூன்று வகையான குற்றங்களுக்கும் பொதுவானதாக கருதி பொருள் கொள்ளவேண்டும்.  

பொழிப்புரை:

புற்றினில் மறைந்து வாழும் நாகத்தினைத் தனது உடலில் அணிந்துள்ள பெருமான், அனைவர்க்கும் மேலான கடவுள் ஆவான். அவன் மிகுந்த விருப்பத்துடன் பூந்தராய் நகரத்தில் உறைகின்றான். அவனது பெருமைகளை குறிப்பிட்டு அவனை நாம் புகழ்ந்து பாடினால், எருது ஏறிய செல்வனாகிய பெருமான், நாம் நமது மனம் மொழி மெய்களால் (உடல்) செய்யும் பாவங்கள் அனைத்தையும் தீரும்படி பணித்து அருளுகின்றான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com