125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 9

பெருமானின் திருநாமத்தை
125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 9


பாடல் 9:

    மத்தம் ஆன இருவர் மருவொணா
    அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
    ஆளதாக அடைந்து உய்ம்மின் நும் வினை
    மாளுமாறு அருள் செய்யும் தானே

விளக்கம்:

மத்தம்=செருக்கு, உன்மத்தம்; தங்களது ஆற்றலை மிகவும் பெரிதாக நினைத்து செருக்குடன் இருந்த பிரமன் மற்றும் திருமால்; மருவொணா=நெருங்க முடியாத வண்ணம்; அத்தன்= தந்தை; ஆளதாக=அடிமையாக; பெருமானுக்கு அடிமையாக மாறாத மனிதர்களை, அப்பர் பிரான் மனிதனாக கருதுவதில்லை. மீளா ஆள்=என்றும் மாறாத அடிமைத் திறம். மெய்ம்மை=உண்மையான பரம்பொருள். தோளாத=உட்குழி இடப்படாத சுரைக் குடுக்கை. தொழும்பர்=அடிமை, இங்கே அடிமை நிலையில் இருக்கும் இழிந்தவர் என்ற பொருளில் வருகின்றது. வாளா=பயன் அற்று, வீணாக. கழிதல்=இறத்தல். சுரைக் குடுக்கை பண்டைய நாளில் குடிப்பதற்கான நீரினைச் எடுத்துச் செல்லப் பயன்பட்டது. மேற்பாகத்தில் துளையிடப்படாத சுரைக் குடுக்கை பயன்படாதது போன்று பெருமானின் திருநாமத்தைக் கேட்காத காதுகளும் பயனற்றவை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். ஒலியலைகள் நமது காதினில் உள்ள துளை வழியே புகுந்து அதிர்வை ஏற்படுத்துவதால் நாம் அந்த ஒலிகளை உணர்கின்றோம். அவ்வாறு ஒலிகளை உணராத காது, துளையிடப்படாத காது போன்று செயல்படுவதால், பெருமானின் திருநாமத்தை கேட்டு உணராத காதினை துளையற்ற காத்து என்று இழிவாக கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடலை (5.90.3) நாம் இங்கே காண்போம்.

    ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே 

அறிவில் முழு வளர்ச்சி அடைந்து தனது காலில் நிற்கும் திறமை பெற்ற மனிதனை ஆள் என்று அழைக்கின்றோம். அப்பர் பிரான் சிவபிரானின் தொண்டர்கள் அல்லாதவரை ஆள் என்று கருதவில்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும், அதனின்று மீளாமல்  இருக்க வேண்டும். தான் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் சொல்லிக் கொள்கின்றார். சிவபிரான் ஒருவரைத் தவிர உலகத்தில் தோன்றும் அனைத்துப் பொருட்களும், மாயையின் வண்ணமே; அந்த பொருட்களைப் போல் நமது உடலும் நிலையானதன்று. சிவபிரான் ஒருவரே நிலையான, உண்மையான பொருள் என்பதால் அவரை மெய்ப்பொருள் என்று இங்கே குறிப்பிடுகின்றார். 

மானிட வாழ்க்கையின் பயன், சிவபிரானை வழிபட்டு, அவரது அருளின் உதவியால் உலக மாயைகளிலிருந்து விடுபட்டு வீடுபேற்றினை அடைவதாகும். சிவபிரானை வழிபடாவிடில் வீடுபேறு கிடைக்காது; எனவே சிவபிரானை வழிபடாதவர்களின் வாழ்க்கை பயன் ஏதும் இல்லாமல் போகின்றது. நமக்கு வாய்த்த மனிதப் பிறவியை எவ்வாறு மதித்து நாம் வாழ வேண்டும் என்று அப்பர் பிரான் கருநட்ட கண்டனை (4.81) என்று தொடங்கும் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இந்தப் பாடலில் தில்லைச் சிற்றம்பலவனுக்கு நாம் அடிமையாக வாழ்வது நமது கடமை என்றும் அவ்வாறு வாழ்வதே நமது வாழ்க்கையை நாம் மதிக்கும் விதமாகும் என்றும் கூறுகின்றார்.   

    வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
    பார்த்தர்க்குப் பாசுபதம் அன்று அருள் செய்தவன் பத்தருள்ளீர்
    கோத்தன்று முப்புரம் தீவளைத்தான் தில்லை அம்பலத்துக்
    கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமையே 

பொழிப்புரை:

தங்களது ஆற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாய், தங்களது முயற்சியால் பெருமானின் திருவடியையும் திருமுடியையும் கண்டு விடலாம் என்று எண்ணியவர்களாய், முயற்சி செய்த திருமாலும் பிரமனும் நெருங்க முடியாத வண்ணம் தோன்றியவர் சிவபெருமான். அனைத்து உயிர்களுக்கும் தந்தை போல் இருந்து காப்பாற்றும் பெருமான் உறையும் தலமாகிய பூந்தராய் நகரத்தினை அடைந்து, அவனுக்கு அடிமையாக மாறி அவனுக்கு தொண்டு செய்வீர்களாக; அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களது வினைகள் அனைத்தும் அழிந்து ஒழியும் வண்ணம் பெருமான் தானே வந்து உங்களுக்கு அருள் செய்வான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com