135. மன்னியூர் இறை  - பாடல் 6

135. மன்னியூர் இறை  - பாடல் 6

சிவபெருமானை அன்பே என்று

பாடல் 6:

    இன்பம் வேண்டுவீர்
    அன்பன் அன்னியூர்
    நன்பொன் என்னுமின்
    உம்பர் ஆகவே

விளக்கம்:

உம்பர்=தேவர்கள்; தேவருலகில் நாம் அடையும் இன்பம் இந்த பிறவியில் நாம் செய்யும் புண்ணியங்களின் அளவினைப் பொருத்தது. அந்த இன்பம் சிறிது காலமே நீடிக்கும். பின்னர் நாம் மீண்டும் உலகினில் பிறந்து எஞ்சிய வினைகளின் பயனாக இன்ப துன்பங்களை அனுபவிக்க நேரிடும். ஆனால் உயிர்களுக்கு அளிக்கும் முக்தி உலகத்து இன்பம் என்றும் அழியாதது. எனவே உம்பர் என்று சம்பந்தர் இங்கே கூறுவது, தேவர்களுக்கும் மேலான நிலை என்று ;பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இறைவனைப் புகழ்ந்து அவனை வழிபடுவதால் நமக்கு இம்மையிலும் இன்பம் மறுமையிலும் இன்பம் என்பதே இங்கே உணர்த்தப்படுகின்றது. இந்த கருத்து நமக்கு சாய்க்காடு தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலை (2.41.1) நினைவூட்டுகின்றது. மண் புகார்=மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகம் சாரமாடர்கள்; வான்=மிகவும் உயர்ந்த இன்பம் அளிக்கும் முக்தி உலகம்; கண் புகார்=இடுக்கண் கண் புகார், துன்பம் அடைய மாட்டார்கள்; பெருமானின் புகழினைக் கற்றவரும் கேட்டவரும், சாய்க்காட்டுப் பெருமானின் திருவடிகளைச் சாரும் அடியார்களும், இம்மையில் மனம் வருத்தம் இன்றியும், பிணியேதும் இன்றியும், பசியின்றியும், எந்தவிதமான துன்பங்கள் மற்றும் இடர்களில் படாமலும் இனிமையாக வாழ்வார்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் இந்த உலக வாழ்வு முடிந்த பின்னர், அவர்கள் மீண்டும் உலகினில் பிறக்காத வண்ணம் முக்தி நிலையினை அடைவார்கள் என்றும் கூறுகின்றார், விண் புகார் என்று கூறுவதன் மூலம்,  தேவர் உலகத்தினை அத்தகைய அடியார்கள் அடைய மாட்டார்கள், ஆனால் அதனினும் உயர்ந்த சிவலோகத்தினைச் சென்று அடைந்து நிலையான இன்பம் பெறுவார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.        

    மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும்
    கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்
    விண் புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித்
    தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே  

அன்பன் என்று அன்பே வடிவமாக உள்ள இறைவனின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானை அன்பே என்று மணிவாசகர் அழைப்பதை நாம் திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் முதல் பாடலில் காணலாம். உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு வஞ்சனையாக செயல்படும் ஐந்து புலன்களின் தாக்கத்தை அடக்கி அமுதமாக தனது உள்ளத்தில் ஊறிய இறைவனை, தான் காணுமாறு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் இங்கே வேண்டுகின்றார். அன்பே சிவமாகவும், அந்த சிவமே தனது உள்ளத்தில் ஊறும் அமுதமாகவும், அந்த அமுதம் விளைவிக்கும் இன்பமாவும் இருக்கும் நிலையினை தான் உணர்ந்ததை அடிகளார் இந்த பாடலில் தெரிவிக்கின்றார்.
     

 மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே
 ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காண வந்து அருளாய்
 தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே
  ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே

அன்பே சிவம் என்பது சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இங்கே திருமூலரின் பாடலை குறிப்பிடுவது பொருத்தமாக உள்ளது. அறிவும் அனுபவமும் இல்லாதார் அன்பாகிய சக்தியும் அறிவாகிய சிவமும் வேறு வேறான இரண்டு பொருள்கள் என்று கருதுவார்கள்; அன்பு முதிர்ந்தால் அறிவாகிய சிவம் தோன்றும் என்பதை அனைவரும் உணர்வதில்லை; அன்பே சிவத்தை விளங்கச் செய்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் அன்பின் வடிவமாக மாறி, தானே சிவத்தன்மை எய்தியவர்களாக உள்ளனர் என்பதே மேற்கண்ட பாடலில் திரண்ட கருத்தாகும்.

    அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவம்  ஆவது ஆரும் அறிந்த பின்
    அன்பே சிவமாக அமர்ந்து இருந்தாரே
    

பொழிப்புரை:

இந்த உலக வாழ்க்கையில் துன்பங்களைத் தவிர்த்து இன்பம் அடைய வேண்டும் என்று நீர் விரும்புவீராயின், அன்பே வடிவமாக விளங்கும் பெருமானை, அன்னியூர் இறைவனை, நல்ல பொன் போன்று அருமையாக உள்ளவனே என்று புகழ்ந்து வழிபடுவீர்களாக. அவ்வாறு வழிபட்டால், நீங்கள் மறுமையிலும் நிலையான இன்பம் பெறலாம்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com