135. மன்னியூர் இறை  - பாடல் 11

பெருமானின் திருநாமங்களை சொல்லி
135. மன்னியூர் இறை  - பாடல் 11

பாடல் 11:

    பூந்தராய்ப் பந்தன்
    ஆய்ந்த பாடலால்
    வேந்தன் அன்னியூர்
    சேர்ந்து வாழ்மினே

விளக்கம்:

ஆய்ந்த=ஆராய்ந்து பாடிய, வேதங்களின் நுட்பமான பொருளை அறிந்து அவற்றை தமிழ்ப் பாடல்களாக பாடிய; சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவதால் நாம் அவனை நெருங்கி அவனுடன் இணைய முடியும் என்பதையே சேர்ந்த என்ற சொல் மூலம் சம்பந்தர் விளக்குகின்றார்.  
 
பொழிப்புரை:

பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், வேதங்களின் நுட்பமான பொருளினை ஆராய்ந்து அறிந்து அந்த கருத்துகளை தமிழ்ப் பாடல்களாக அமைத்து அன்னியூர் தலத்தின் தலைவனாகிய இறைவன் மேல் இயற்றிய பாடல்களை பாடி இறைவனுடன்  சேர்ந்து வாழ்வீர்களாக.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் அனைத்து உயிர்களுடன் கலந்து அவற்றை இயக்குபவன் பெருமான் என்று உணர்த்தும் சம்பந்தர், இரண்டாவது பாடலில் அன்னியூர் தலம் சென்றடைந்து அவனது திருவடிகளைத் தொழுமாறு அனைத்து தொண்டர்களையும் அழைக்கின்றார். மூன்றாவது பாடலில்  பெருமானின் திருநாமங்களை சொல்லி உய்வினை அடைவீர் என்றும் நான்காவது பாடலில் அவனது திருப்பாதங்களைத் தொழுது முக்தி நிலை அடைவீர் என்றும் ஐந்தாவது பாடலில் பெருமானுடன் உறவு கொண்டு மனநிறைவுடன் வாழ்வீர் என்றும், ஆறாவது பாடலில் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் வேண்டும் என்று விரும்பினால் அவனை தூயபொன் போன்று சிறந்தவனாக கருதுவீர் என்றும், ஏழாவது பாடலில் நமது தந்தையாக பாவித்தால் பந்த பாசங்களை நம்மால் கட்டுபடுத்த முடியும் என்றும், எட்டாவது பாடலில் அவனை நெருங்கிய நண்பனாக கருதுவீர் என்றும், ஒன்பதாவது பாடலில் அவனை புகழ்வீர் என்றும், பத்தாவது பாடலில் அவனுக்கு தொண்டு செய்வீர்கள் என்றும் நம்மை வழிப்படுத்தும் சம்பந்தர், தேவார பதிகங்களை இறைவனை நெருங்கி அவனுடன் இணைவீர்கள் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com