136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 1

முனிவரின் மகளாக அவதரித்து
136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 1

பின்னணி:

குறுக்கை வீரட்டானம் அன்னியூர் பந்தணைநல்லூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி வேள்விக்குடி ஆகிய தலங்கள் ஞானசம்பந்தர் சென்றதாக  சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். எதிர்கொள்பாடி தலத்தில் அருளிய பதிகம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. துருத்தி வேள்விக்குடி மணஞ்சேரி எதிர்கொள்பாடி ஆகிய நான்கு தலங்களும், ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட தலங்களாகும். துருத்தி தலத்தில் அம்பிகை பரத முனிவரின் மகளாக அவதரித்து, பெருமானையே கணவராக அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தவம் செய்ததால், மனம் இரங்கிய இறைவன் பிராட்டியை மணம் புரிந்து கொள்ள இசைந்தார் என்றும் அந்த திருமணத்திற்கான வேள்விகள் நடைபெற்ற இடம் வேள்விக்குடி என்றும் திருமணம் நடைபெற்ற இடம் திருமணஞ்சேரி என்றும் மணக்கோலத்துடன் வந்த தம்பதியரை பரதமுனிவர் வரவேற்ற இடம் எதிர்கொள்பாடி என்றும் பாலிகை கரைக்கப்பட இடம் குறுமுனைப்பாடி என்றும் கூறுவார்கள். அப்பதி=பந்தணைநல்லூர். இந்த பாடலுக்கு முந்திய பெரியபுராணப் பாடலில் பந்தணைநல்லூர் குறிப்பிடப் பட்டுள்ளது.  

    அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி
    செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி
    எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள்பாடிப் பதி எய்தி
    ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக்குடி உற்றார்
.
  

இந்த தலத்தினை கீழைத்திருமணஞ்சேரி என்றும் கூறுவார்கள். எதிர்கொள்பாடித் தலம் மேலைத்திருமணஞ்சேரி என்று அழைக்கப் படுகின்றது. இந்த திருக்கோயிலில் உள்ள கல்யாணசுந்தரர் சன்னதி மிகவும் விசேடமானது. திருமணமாகாத கன்னிப் பெண்கள், இந்த தலம் வந்தடைந்து தலத்து இறைவனுக்கு மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் கல்யாணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகமும் கிடைத்துள்ளது. இறைவனின் திருநாமம்=அருள் வள்ளல் நாதர்; இறைவியின் திருநாமம்=யாழின் மென்மொழியம்மை; மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பதினெட்டு கி.மீ. தூரம். மயிலாடுதுறை கும்பகோணம் இரயில்பாதையில் உள்ள குத்தாலம் இரயில் நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ, தூரத்தில் உள்ளது, அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோல தரிசனம் கிடைத்த தலம்.

தலபுராணத் தகவல்களின் படி பூலோகத்தில் நடைபெறும் திருமணச் சடங்குகளை பின்பற்றி  தன்னை பெருமான் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு சமயம் அம்பிகை ஆவல் கொண்டார். தனது ஆசையினை பெருமானிடம் தெரிவிக்க பெருமானும் அதற்கு இசைந்தார். எனினும் அந்த ஆசை நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தைக் கண்ட அம்பிகை மனம் வருந்தினாள். அந்த வருத்தம் அவளது செயல்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அதனால் கோபம் கொண்ட பெருமான் தேவியை பூமியில் ஒரு பசுவாக பிறக்குமாறு செய்தார். பிராட்டிக்கு துணையாக இலக்குமி  சரசுவதி இந்திராணி ஆகியோரும் பசுக்களாக நிலவுலகத்திற்கு  வந்தனர். திருமால் அந்த நான்கு பசுக்களையும் மேய்க்கும் இடையனாக வந்தார். பசுவாக வந்த பிராட்டி தேரழுந்தூர் தலத்தில் உள்ள இலிங்கத்திற்கு தினமும் பாலைச் சொரிந்து வழிபாடு செய்தார். ஒரு நாள் அந்த பசுவின் குளம்பு இலிங்கத்தில் பட்ட போது, பெருமான் இலிங்கத்திலிருந்து தோன்றி அம்மைக்கு ஆறுதல் சொல்லி பரத முனிவருக்கு மகளாக வளருமாறும் தான் முனிவர் வளர்க்கும் வேள்வித்தீயினில் தோன்றி தேவியை திருமணம் புரிந்து கொள்வதாகவும்  வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய பெருமான், பூலோக முறைப்படி பிராட்டியை மணந்து கொண்டதாக தலபுராணம்  தெரிவிக்கின்றது.  
 
பாடல்  1:

    அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து
    குயில் ஆரும் மென்மொழியாள் ஒரு கூறாகி
    மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி
    பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே
 

விளக்கம்:

அயில்=கூர்மை; தலத்து அம்பிகையின் திருநாமம் யாழின் மென்மொழியம்மை. இனிய குரல் உடைய அம்பிகை என்ற பொருள் பட அமைந்துள்ள இந்த திருநாமத்தை நினைவூட்டும் வகையில் குயில் ஆரும் மென் மொழியாள் என்று சம்பந்தர் இங்கே பிராட்டியை அழைக்கின்றார். ஆரும்=பொருந்திய; பயிலுதல்=தொடர்ந்து பழகுதல்; இங்கே இறைவன் இந்த தலத்தில் தொடர்ந்து உறைவதை குறிப்பிடுகின்றது. நாம் செய்யும் பல தீய செயல்களுக்கும், அத்தகைய செயல்களால் விளையும் பாவங்களுக்கும், உலகப் பொருட்களின் மீதும் உலகத்து உயிர்களின் மீதும் நாம் வைத்துள்ள பற்றே காரணமாக உள்ளது. ஆனால் நமது மனமோ ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு வாழும் தன்மை உடையது. எனவே உலகப் பற்றை நாம் முழுவதும் நீக்கவேண்டும் என்றால் பற்றேதும் இல்லாத இறைவனை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பற்றிக்கொண்டால் உலகப் பற்றுகளால் வரும் பாவங்கள் நம்மை வந்து அணுகா. இந்த கருத்தினை சம்பந்தர் இங்கே சொல்வது நமக்கு திருக்குறள் ஒன்றினை நினவூட்டுகின்றது. விடாது வந்து நம்மைப் பற்றும் பற்றினை விடுவதற்கு பற்றேதும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொள்க என்று உணர்த்தும் திருக்குறள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுகப் பற்று விடற்கு      

பொழிப்புரை:

கூர்மை பொருந்திய அம்பு ஒன்றினை எய்து திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்தவனும், குயிலின் குரல் போன்று மென்மை பொருந்திய இனிய மொழிகளை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டவனும் ஆகிய பெருமான், மயில்கள் பொருந்தி நடமாடும் சோலைகள் மலிந்த மணஞ்சேரி தலத்தில் தொடர்ந்து உறைகின்றான். அந்த இறைவனின் திருவடிகளைப் பற்றி நிற்கும் அடியார்களை பாவங்கள் பற்றாது; அதாவது பாவங்களை விளைவிக்கும் தீய செயல்களை விளைவிக்கும், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பற்றுகள் நீங்கிவிடும்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com