136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 2

வேதங்களையும் ஆகமங்களையும்
136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 2

பாடல் 2:

    விதியானை விண்ணவர் தாம் தொழுது ஏத்திய
    நெதியானை நீள்சடை மேல் நிகழ்வித்த வான்
    மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
    பதியானைப் பாட வல்லார் வினை பாறுமே

விளக்கம்:


விதி=நெறிமுறை; நெதி=நிதி என்ற சொல் நெதி என்று திரிந்தது.; பாறும்=அழியும்; வண்பொழில்=வளமை மிகுந்த சோலைகள்; பதி=தலைவன்; விதி என்ற சொல்லுக்கு பிரமன் என்று பொருள் கொண்டு, அனைத்தையும் படைக்கும் பிரமனாக விளங்குபவன் இறைவனே என்று உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. விதியான் என்பதற்கு நெறிமுறையை வகுத்தவன் என்றும் விளக்கமும் அளிக்கப் படுகின்றது. பெருமான் தானே வேதங்களையும் ஆகமங்களையும் அருளியவன். எனவே, அந்த ஆகமங்களிலும் வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நெறி முறைகளை அருளியவன் அவனன்றி வேறு எவர் இருக்கமுடியும்.  

பொழிப்புரை:

வேத ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நெறியாக இருப்பவனும், தேவர்கள் அனைவரும் தொழுது வணங்கும் வண்ணம் முக்தி எனும் பெருஞ்செல்வத்தை உடையவனும், தனது நீண்ட சடையின் மேல் வானில் உலவும் பிறைச் சந்திரனை வைத்தவனும் வளமை மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரி தலத்தின் தலைவனாகவும் உள்ள பெருமானை இசைப் பாடல்கள் பாடி அவனை புகழ வல்லவர்களின் வினைகள் முற்றிலும் அழிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com