சுடச்சுட

  
  தேவாரம்

   

  பாடல் 4:

      விடையானை மேலுலகு ஏழும் இப்பார் எலாம்
      உடையானை ஊழி தோறு ஊழி உளதாய
      படையானைப் பண்ணிசை பாடும் மணஞ்சேரி
      அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே

  விளக்கம்:

  விடை=எருது; விடையான்=எருதினை வாகனமாக உடையவன்; உயிர்களின் அறியாமையை அறுத்தெறிந்து அவர்களின் மனதினில் ஞானத்தை தோற்றுவிப்பதே தனது கடமையாக இறைவன் நினைப்பதால் தான், ஒவ்வொரு ஊழி முடிந்த பின்னரும் உலகினையும் உலகப் பொருட்களையும் தோற்றுவித்து உயிர்களை பல உடல்களுடன் இறைவன் இணைக்கின்றான். அவனைப் பணிந்து வணங்கும் உயிர்களின் அறியாமையாகிய இருள் கிழிக்கப்பட்டு ஞானம் இறைவனால் தோற்றுவிக்கப்படுகின்றது. இதனையே மணிவாசகர்   ஞானவாள் ஏந்தும் ஐயர் என்று திருப்படை எழுச்சி பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் புகழினைப் பாடியும் அவனது சிறப்புகளைச் சொல்லி அவனை வாழ்த்தியும் அடியார்கள் இறைவனைக் குறித்து வணங்குவதும் நாதப்பறை அறைதல் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகின் படைப்புக்கே ஆதாராமாக விளங்கும் நாதத்தின் உதவி கொண்டு, நாதத் தலைவனை புகழ்தல் பொருத்தம் தானே. இடபத்தினைத் தவிர்த்து வேறு எந்த விலங்கினையும் இறைவன் தனது வாகனமாகக் கொண்டதில்லை. மணிவாசகப் பெருமானுக்கு அருளும் பொருட்டு குதிரை வியாபாரியாக வந்த பெருமான் குதிரை ஏறி வந்ததை நாம் திருவாசகப் பாடல்கள் மூலம் உணர்கின்றோம். மானம்=பெருமை. மா=விலங்கு, விலங்காகிய குதிரை; அத்தகைய பெருமை வாய்ந்த குதிரையின் மீது ஏறி மதுரை வந்த பெருமானுக்கு, அவனது அருளினால் நமக்கு விளைந்த அறிவு எனப்படும் வெண்குடை ஏந்துவோம், என்றும் அவனது திருநீற்றைக் கவசமாகக் கொண்டு மாயப்படையுடன் நாம் போரிடுவோம் என்றும் கூறுகின்றார். உலகப் பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் நம்மை அவர்களது பாசவலையில் வீழ்த்தி என்றும் அறியாமையில் ஆழ்த்தி முக்தி உலகுக்கு நாம் செல்வதை தடுக்கின்றன. எனவே இந்த படைகளை நாம் போரிட்டு வெல்லவேண்டும். அந்த போருக்கு தேவையான வாள், குடை, பறை, கவசம் ஆகியவை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன.  அந்த கருவிகளை நன்கு பயன்படுத்தி வெற்றி கொண்டு, மாயப் படைகள் நெருங்க முடியாத முக்தி உலகினை அடைவீர் என்று அறிவுரை கூறும் பாடல்.

      ஞானவாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்
      மானமா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவிமின்
      ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்
      வான ஊர் கொள்வோம் நாம் மாயப்படை வாரமே

  பொழிப்புரை:

  எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும், நிலவுலகம் மட்டுமன்றி மேலுள்ள ஏழு உலகங்களையும் தனதாகக் கொண்டவனும், ஒவ்வொரு ஊழியிலும் ஞானத்தை தனது படையாக கொண்டு உயிர்களின் அறியைமையை அகற்றுபவனும் பண்ணோடு பொருந்திய இசைப் பாடல்கள் எப்போதும் இசைக்கப்படும் மணஞ்சேரி தலம் வந்தடைந்து ஆங்கே நிலையாக பொருந்தி உறைபவனும் ஆகிய இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்து சரண் அடையவல்ல அடையர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் அடையாது.  

   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai