136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 5

பெருமானின் சடைமுடி
136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 5

பாடல் 5:

    எறியார் பூங்கொன்றையினோடு இளமத்தம்
    வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைத்தானை
    மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி
    செறிவானைச் செப்ப வல்லார்க்கு இடர் சேராவே

விளக்கம்:

எறி=பறித்தல் என்றும் ஒளி விடுதல் என்றும் இரண்டு விதமான பொருள்கள் உள்ளன. பறித்தல் என்ற பொருள் இங்கே  பொருத்தமாக உள்ளது. அன்று பறித்த என்று பொருள் கொள்ள வேண்டும்; அன்று மலர்ந்த மலர்கள் வீசும் ஒளி, அடுத்த நாளில் மங்குவதையும் நாம் காண்கின்றோம். வெறி=மணம் விரிதல்; மிலைத்தல்=சூட்டிக் கொள்ளுதல்; செறிதல்= நெருங்குதல்; வெறி ஆரும் செஞ்சடை என்று பெருமானின் சடைமுடி இயற்கையில் நறுமணம் வீசுவதாக இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிராட்டியின் கூந்தல் இயற்கை நறுமணம் கொண்டது போல், பெருமானின் சடைமுடியும் நறுமணத்துடன் விளங்கியதை அவர் உணர்ந்தார் போலும்.  

பொழிப்புரை:

அன்று பறிக்கப்பட்ட ஒளி வீசும் கொன்றை மலர்களுடன் இளமையான ஊமத்தை மலர்களை, இயற்கையாகவே நறுமணம் வீசும் தனது செஞ்சடையில் பொருந்தும் வண்ணம் சூட்டிக் கொண்டவனும், துள்ளி விளையாடும் மான்கன்று பொருந்திய கையினை உடையவனும், திருமணஞ்சேரி தலத்தினை நெருங்கி அடைந்து உறைபவனும் ஆகிய பெருமானின் திருநாமங்களையும் அவனது புகழினையும் சொல்ல வல்ல அடியார்களை, துன்பங்கள் வந்து அடையாது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com