சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 6:

      மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்
      பழியாமைப் பண்ணிசையான பகர்வனை
      வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி
      இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே
   

  விளக்கம்:

  வடமொழியாகவும் தமிழ்மொழியாகவும் பெருமான் இருக்கும் தன்மை மொழியானை என்ற சொல் மூலம் குறிப்பிடப்படுவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். உலகத்தில் தோன்றிய முதல் இரண்டு மொழிகளாக தமிழும் வடமொழியும் கருதப் படுகின்றன. மேலும் இந்த இரண்டு மொழிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்த மொழிகளாகவும் உள்ளன. வடமொழியில் வேதங்கள் அருளியவன் சிவபெருமான். மேலும் சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டின் அரசனாக இருந்து, தமிழ் சங்கத்தில் பங்கேற்று தமிழ் மொழியை வளர்த்த பெருமான், அகத்தியருக்கு, இன்னம்பர் தலத்தில் தமிழ் இலக்கணம் கற்பித்ததாக கருதப் படுகின்றது. அகத்தியர் இயற்றிய அகத்தியம் எனப்படும் நூலே தமிழ் இலக்கணத்திற்கான முதல் நூல்  என்றும், தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்கியது அகத்தியம் என்று கூறுவார்கள்.    

  திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.5) பெருமானை ஆரியன் என்றும் தமிழன் என்றும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மூரி=மிகுந்த ஒலி;  

      மூரி முழங்கொலி நீர் ஆனான் கண்டாய் முழுத் தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
      ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன்னடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்
      ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறை எம் அண்ணல் கண்டாய்
      வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

  சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.87.1) அப்பர் பிரான் வடமொழியாகவும் தென்மொழியாகவும் இருப்பவன் இறைவன் என்று உணர்த்துவதை நாம் கீழ்க்கண்ட பாடல் மூலம் அறியலாம். தேவர்களுள் ஒருவனாக பெருமான் இருப்பது போல் தோன்றினாலும், அவனை தேவன் என்று கருதக் கூடாது, தேவர்களுக்கும் தலைவனாக இருப்பவன் அவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, வானவர்க்கும் மேலானான் காண் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவதை நாம் உணரலாம்.

      வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
      ஆனவன் காண் ஆனைந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தியாடும்
      கானவன் காண் கானவனுக்கு அருள் செய்தான் காண் கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்  
      தேனவன் காண் சென்று அடையாச் செல்வன் தான் காண்' சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே

  அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.77.3) திருஞானசம்பந்தர், அடியார்கள் தங்களால் இயன்ற அளவு வடமொழியிலும் தமிழ்மொழியிலும் சொல்லும் தோத்திரங்கள் பெருமானின் திருவடிகளைச் சென்று சேர்கின்றன என்று கூறுகின்றார். தோத்திரப் பாடல்களை மனம் ஒன்றி சொல்லி பெருமானின் திருவடிகளை வழிபடும் அடியார்கள் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம், நாம் சொல்லும் தோத்திரங்கள், எந்த மொழியில் அமைந்திருந்தாலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு சம்பந்தர் உணர்த்துகின்றார். அவ்வாறு பொருள் தெரிந்து கொண்டால் தானே, நம்மால் மனம் ஒன்றி இறை வழிபாட்டில் ஈடுபடமுடியும்.  .

      மைம்மலர்க் கோதை மார்பினர் எனவும் மலைமகளவளொடு மருவினர் என்றும்
      செம்மலர்ப் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேலுடையர் எம் சென்னி  மேல் உறைவார்
      தம் மலரடி ஒன்றி அடியவர் பரவத் தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர
      அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

  திருமூலரும் ஆகமச் சிறப்பு அதிகாரத்தில் இடம்பெறும் மந்திரம் ஒன்றினில், ஆரியமும் தமிழும் உமையம்மைக்கு சொன்னவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு உமை அம்மைக்கு சொல்லியதன் நோக்கமும், இந்த பாடலில் கூறப்படுகின்றது. புலன் உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு அல்லலுறும் உயிர்கள் தங்கள் அறியாமை நீங்கி மெய்ந்நெறியில் செல்லும் வழியினை உணர்த்தும் வடமொழி மற்றும் தமிழ் நூல்களை கற்றறிந்து உய்வினை அடையவேண்டும் என்பதே அந்த நோக்கம் ஆகும். இந்த இரண்டு மொழிகள் மட்டும், இங்கே குறிப்பிட்டு மக்களுக்கு உய்வினை அளிக்கும் மொழிகள் என்று திருமூலர் குறிப்பிட்டது, உண்மையான ஞானத்தை தரும் நூல்கள் இந்த இரண்டு மொழிகளில் தோன்றுவதற்கு இறைவன் திருவுள்ளம் கொண்டிருந்தான் என்பதும் நமக்கு விளங்குகின்றது. மேலும் வேதங்களும் முதலில் உமையம்மைக்கு சொல்லிய பின்னரே அவற்றை ஏனையோருக்கு பெருமான் உபதேசித்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

      மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
      ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
      ஆரியமும் தமிழும் உடனே சொலிக்
      காரிகையார்க்குக் கருணை செய்தானே

  இறைவன் உமையம்மைக்கு சொல்லிய இந்த இரண்டு மொழிகளையும் பாணினி மற்றும் அகத்தியர்க்கு அருளினான் என்று காஞ்சி புராணம் கூறுகின்றது.

      வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையாத்
      தொடர்பு உடைய தென்மொழியை உலகமெலாம் தொழுது ஏத்தும்
      குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

    
  பொழிப்புரை:

  வடமொழியாகவும் தென்தமிழ்மொழியாகவும் இருப்பவனும், பண்டைய நாளில் நான்கு வேதங்களையும் அந்த வேதங்களைக் காக்கும் பொருட்டு ஆறு அங்கங்களையும் படைத்தும் அந்த வேதங்களை எவரும் பழியாதவாறு காத்தும், இசையுடன் கலந்து அந்த வேதங்களை பாடுபவனும், நல்ல நெறியில் வாழ்வினை அமைத்துக் கொண்டு செல்ல வழி வகுத்தவனும் ஆகிய பெருமான் விண்ணவர்கள் ஏத்தும் வண்ணம் திருமணஞ்சேரி தலத்தில் வீற்றிருக்கின்றான். அவனை இகழாது புகழ்ந்து ஏத்தும் அடியார்களுக்கும் என்றும் இன்பங்களே எய்தும்.       

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai