136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 7

எட்டு குணங்களை உடைய இறைவன்
136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 7

பாடல் 7:

    எண்ணானை எண்ணமர் சீர் இமையோர்கட்கு
    கண்ணானைக் கண் ஒரு மூன்றும் உடையானை
    மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
    பெண்ணானைப் பேச நின்றார் பெரியோர்களே
 

விளக்கம்:

எண்ணான்=எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன்; எண்ணமர்=எண்ணிக்கையில் அடங்கிய, முப்பத்துமூன்று கோடி என்ற எண்ணிக்கையுடைய; பெண்ணான்=மங்கையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவன்; எண்ணான் என்பதற்கு எட்டு குணங்களை உடைய இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அட்ட மூர்த்தியாக எங்கும் வியாபித்து நிற்கும் இறைவன் கீழ்க்கண்ட எட்டு குணங்களை உடையவனாக விளங்குகின்றான். தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன.
 
பொழிப்புரை:

நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனும், முப்பத்துமுக்கோடி என்ற எண்ணிக்கையினை உடைய சிறந்த தேவர்களால் தங்களது கண்ணாக பாவிக்கப் படுவானும், மூன்று கண்களை உடையவனும், நிலத்தின் வடிவமாக இருப்பவனும், பெரிய வயல்கள் சூழ்ந்த மணஞ்சேரி  தலத்தில் உறைபவனும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய இறைவனைப் புகழ்ந்து பேசும் பாடல்களை பாட வல்ல அடியார்கள்  பெரியோர்களாக மதிக்கப்படுவார்கள்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com