Enable Javscript for better performance
136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 8- Dinamani

சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 8:

      எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டு தோள்
      கெடுத்தானைக் கேடிலாச் செம்மை உடையானை
      மடுத்து ஆர வந்து இசை பாடும் மணஞ்சேரி
      பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே
     

  விளக்கம்:

  எடுத்தான்=கயிலை மலையை எடுத்தவன்; கேடிலாச் செம்மை=என்றும் அழிவில்லாமல் விளங்கும் முக்திச் செல்வம்; மடுத்து=வயிறார உண்டு; முந்தைய பாடலிலும் இந்த பாடலிலும் பெரியோர்களின் தன்மை யாது என்று உணர்த்தப் படுகின்றது. பல திருமுறைப்  பாடல்களில் பெரியோர்களின் தன்மை உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

  சிவபெருமானின் பெருமையை கற்பவர்களும் கேட்பவர்களும் பெரியோர்கள் என்று, தான்  அருளிய முதல் பதிகத்தின் இரண்டாவது பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். முற்றல்=முதிர்ந்த; ஆமை என்பது இங்கே ஆமை ஓட்டினை குறிக்கும். வெகு காலத்திற்கு முன்னர் தோன்றிய கூர்மாவதாரம் என்பதைக் குறிப்பிட முற்றல் ஆமை என்று குறிப்பிட்டார்.; ஏனம்=பன்றி; முளைக் கொம்பு=பன்றியாகிய திருமாலின் வாயினில் பல் போன்று முளைத்த கொம்பு; பூண்டு=ஆபரணமாக அணிந்து கொண்டு; வராக அவதாரம் எடுத்த திருமாலின் பல் அரக்கனின் உடலில் பட்டமையால் அவனது தீய குணங்கள் இவரை ஆட்கொள்ள, அரக்கனைக் கொன்ற பின்னரும் மிகுந்த வெறியுடன் குதித்த போது, அவரது தொல்லை தாளாமல் தேவர்கள் அனைவரும் பெருமானிடம் முறையிட, பெருமான் அந்த பன்றியினை அடக்கி ஆட்கொண்டார். இவ்வாறு பன்றியை அடக்கியதை உணர்த்தும் பொருட்டு, பன்றியின் கொம்பினைத் தனது மார்பினில் பெருமான் ஆபரணமாக அணிந்தார் என்று புராணம் கூறுகின்றது. இளநாகம்=அடிக்கடி தனது சட்டையை உரிப்பதால், நரை திரையின்றி இருக்கும் பாம்பு. பல சதுர் யுகங்களையும் கடந்து நிற்கும் அனந்தன் முதலிய பாம்புகள் இளநாகம் என்று அழைக்கப் படுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். வற்றலோடு=தசை வற்றிய ஓடு; பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை பெருமான் கிள்ளியதால், அந்நாள் வரை உடலுடன் கொண்டிருந்த தொடர்பு நீங்கியதால், உலர்ந்து காணப்படும் ஓடு;

      முற்றல் ஆமை இளநாகமோடு ஏன முளைக் கொம்பு அவை பூண்டு
      வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
      கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த
      பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே  

  கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் பெருமானின் திருப்பாதங்களை நாள்தோறும் வேதங்களால் பேணிப் புகழும் பெரியோர்கள் என்று  சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெம்மான் என்ற சொல்லினை பெரியோர்கள் என்ற சொல்லுடன் இணைத்தும், பெய்கழல்கள் நாள்தோறும் பேணியேத்த மறை உடையான் என்றும் பிரித்து, பெரியோர்கள் தலைவன் என்றும் தனது திருப்பாதங்களைப் பாராட்டி புகழ்ந்து பாடும் வண்ணம் வேதங்களை உடையவன் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. குறையுடையான்=அடியார்களின் குறைகளைக் கேட்டறிந்து நிறைவு செய்பவன்;

      பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான் பெய்கழல்கள் நாடொறும் பேணி ஏத்த    
      மறையுடையான் மழுவாள் உடையான் வார் தரு மால் கடல் நஞ்சம் உண்ட
      கறை உடையான் கனலாடு கண்ணால் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளி
      குறையுடையான் குறட்பூதச் செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே

  திருவியலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.13.10) சம்பந்தர், புத்தர்கள் மற்றும் சமணர்களுடன் நட்பு பாராட்டாமல், அவர்களைப் போற்றாமல் இருப்பவர்கள் பெரியோர்கள் என்று கூறுகின்றார். பிடகம் என்று அழைக்கப்படும் புனித நூலினை தங்கள் வேதமாகக் கொண்டவர்கள் புத்தர்கள். சீவரம்=துவராடை;   

      தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவர மூடிப்
       பிடக்கே உரை செய்வாரோடு பேணார் நமர் பெரியோர்
      கடல் சேர் தரு விடமுண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
      விடை சேர் தரு கொடியானிடம் விரிநீர் வியலூரே

  பேணுபெருந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.42.7) சம்பந்தர், நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முறையாக கற்று பிழையின்றி முன்னோர் ஓதிய முறையில் ஓதுவோரை பெரியோர் என்று கூறுகின்றார். விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு, உச்சரிப்பு பிழையினை தவிர்த்து நன்றாக அமைந்த நாவின் கண், தங்களது  வினைகளை இறைவனின் அருளால் அழித்துக் கொள்ளும் நோக்கத்துடன் வேதங்கள் ஓதுகின்றனர் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். விழையார்=விருப்பம் உடையவர்கள்;

      விழையார் உள்ள நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறங்கம்
      பிழையா வண்ணம் பண்ணியவாற்றால் பெரியோர் ஏத்தும் பெருமான்
      தழையார் மாவின் தாழ் கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்து
      குழையார் சோலை மென்னடை அன்னம் கூடு பெருந்துறையாரே

  விரிந்த சடைமுடியை உடையவரும் எரி போன்று சிவந்த திருமேனியை உடையவரும் ஆகிய மருதவாணரை, தாமதம் ஏதும் செய்யாமல் துதிப்பவர் உலகினில் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள் என்று திருவிடைமருதூர் தலத்து பாடலில் (1.95.4) சம்பந்தர் கூறுகின்றார்.

      விரியார் சடை மேனி எரியார் மருதரைத்
      தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே   

  கடம்பூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.63.4) பிறையுடை வார்சடையானை பேண வல்ல அடியார்கள் பெரியோர்கள் என்று கூறுகின்றார். பறை=தோல் இசைக்கருவி; இயம்ப= ஒலிக்க; கண்களின் கீழ் பாகத்தில் சிகப்பு நிற கோடுகள் காணப்படுவது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும். அத்தகைய செவ்வரிகளை வேலில் படிந்துள்ள இரத்தக் கறைகளுக்கு ஒப்பிட்டு, கறை படிந்த வேல் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்களை என்றும் செவ்வரி ஓடிய கண்களை உடைய மகளிர் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார் என பொருள் கொள்வது பாடலின் நயத்தை உணர்த்துகின்றது.

      பறையோடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர் நெடுமாடம்
      கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர் கடம்பூரில்
      மறையொலி கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும்
      பிறையுடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே  

  பெருமானைப் பேணும் அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள் என்று கூறுவதன் மூலம், பெருமானைப் பேணி போற்றாத மனிதர்கள் பெரியோர்களாக மதிக்கப்பட மாட்டார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். இந்தக் கூற்று சம்பந்தர் அருளிய ஆமாத்தூர் தலத்து பதிகத்தின்  பாடல்களை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலில் (2.44.1), பெருமானின் திருவடிகளைப் போற்றி புகழாத மனிதர்களின் அழகும் ஒரு அழகோ என்று கேள்வி கேட்கின்றார். அம்=அழகிய; பொக்கம்= பொலிவு மற்றும் அழகு: பெய்=உடைய, துன்னம் பெய்=தைக்கப்பட்ட; பிறைச் சந்திரனைத் தனது சடையில் பெருமான் சூடிக் கொண்ட பின்னர், சந்திரன் தான் அழியும் நிலையிலிருந்து தப்பித்து, நாளும் ஒரு பிறை பெற்று வளர்ந்தமையை குறிப்பிட பிள்ளை மதி என்று இங்கே கூறுகினார்.

      துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை
      பின் அம் சடை மேலோர் பிள்ளை மதி சூடி
      அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான் தன்
      பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே

  சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.41.2) சம்பந்தர், சம்பந்தர் பெருமானை பெரியோர்களின் தலைவன் என்று கூறுகின்றார். வாய்=அகன்ற; வாய்க்காடு=அகன்ற காடு; பேய்க்கு ஆடல்=பேய்களின் பாடலுக்கு ஏற்ப நடமாடுதல்;   

      பேயக்காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
      சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
      வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
      பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே    
     

  பொழிப்புரை:

  கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணின் அழகிய கிரீடங்கள் தரித்த பத்து தலைகளும் தோள்களும் வலிமை கெடும் வண்ணம், மலையின் கீழே அரக்கனை அடர்த்து நெரித்தவனும், என்றும் அழிவற்றதும் பேரின்பம் அளிப்பதும் ஆகிய முக்திச் செல்வத்தினை உடையவனும் ஆகிய பெருமான், சோலை மலர்களில் உள்ள தேனை வயிறார உண்ட வண்டுகள் மகிழ்ச்சியுடன் இசை பாடும் மணஞ்சேரி தலத்தில் உறைகின்றான். அத்தகைய பெருமானின் திருவடிகளைப் பற்றாக பிடித்துக் கொண்டு கொண்டாடும் அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai