136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 9

படைப்புத் தொழில் புரியும் பிரமன்
136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 9


பாடல் 9:

    சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
    கல்லானைக் கற்றன சொல்லித் தொழுது ஓங்க
    வல்லார் நன் மாதவர் ஏத்து மணஞ்சேரி
    எல்லாமாம் எம் பெருமான் கழல் ஏத்துமே

விளக்கம்:

சொல்லான்=சொற்களின் வடிவமாகவும் சொற்கள் விளக்கும் பொருளாகவும் விளங்கும் இறைவன்; தோற்றம் கண்டான்=படைப்புத் தொழில் புரியும் பிரமன்; கல்லான்=பிரமனும் திருமாலும் கற்க முடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக திகழ்ந்த பெருமான், இந்த பாடலில் எல்லாமாக பெருமான் நிற்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. ஸ்ரீருத்ரத்தின் பொருளை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ள நின்ற திருத்தாண்டகம் பதிகத்தில் (6.94) அப்பர் பிரான் சிவபிரான் எல்லாமாக நிற்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். திருவதிகைத் திருத்தாண்டகம் ஒன்றினை (6.05) எல்லாம் சிவன் என நின்றாய் போற்றி என்று அப்பர் பிரான் தொடங்குகின்றார். சிவபெருமானின் திருநாமமாகிய பஞ்சாக்கர மந்திரத்தை அறிந்து உணர்ந்தவர்களையே, அப்பர் பிரான் கற்றார் என்று கருதுகின்றார். எஞ்சியோரை அவர் கல்லாதார் என்று கருதுகின்றார்.

    எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
    கொல்லார் மழுவாட் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய்         போற்றி
    கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி
    வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி

அனைத்துப் பொருட்களிலும் கலந்தும் அனைத்து உயிர்களுடன் இணைந்தும் நிற்கும் சிவபெருமானே போற்றி, சூரிய சந்திரர்கள் ஆகிய இரண்டு சுடர்களாக உள்ளவனே போற்றி, கொலைத் தொழிலைச் செய்யும் சக்தி வாய்ந்த மழுப் படையை உடையவனே போற்றி, உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதையே தொழிலாகக் கொண்ட கூற்றுவனை உதைத்தவனே போற்றி, ஐந்தெழுத்தினை கல்லாத மூடர்கள் காண்பதற்கு அரியவனாகத் திகழ்பவனே போற்றி, ஐந்தெழுத்தினை கற்று, அதனை எப்போதும் உச்சரிக்கும்  அடியார்களின் துன்பங்களை களைபவனே போற்றி, அகன்று காணப்பட்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும் வில்லினைக் கொண்டு அழித்தவனே போற்றி. அதிகை வீரட்டத் திருக்கோயிலின் மீது காதல் கொண்டு அங்கே உறையும் பெருமானே என்று இறைவன பலவாறு அழைக்கும் பெருமான், நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும் என்று இறைவனிடம் அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் வேண்டுகின்றார்.
 
பொழிப்புரை:

சொற்களின் வடிவமாகவும் சொற்களின் பொருளாகவும் விளங்குபவனும், படைப்புத் தொழில் புரியும் பிரமனும் நெடுமாலும் கற்றுணராத வண்ணம் பெருமை உடையவனாக நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், தாம் கற்ற இசைப் பாடல்களை பாடி பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் நல்ல பெரிய தவமுடையவர்கள் போற்ற, அனைத்தும் தானே ஆகிய நிற்கும் பெருமானின் திருவடிகளை போற்றுவீர்களாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com