146. மண் புகார் வான் - பாடல் 5

பெருமானை வழிபடுவதால்
146. மண் புகார் வான் - பாடல் 5

பாடல் 5:

கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணைத் தோள் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்து உகந்தான் படர்சடை மேல் பால் மதியம்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ்
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே

விளக்கம்:

பதிகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பாடல்கள் மூலம், பெருமானின் வழிபாட்டினில் நம்மை ஈடுபடுத்திய சம்பந்தர், பெருமானை வழிபடுவதால் நாம் உயர்ந்தவர்களாக உலகத்தவரால் மதிக்கப்படுவோம் என்று கூறுகின்றார். கோங்கு=கோங்கின் அரும்பு; கொழும்=செழிப்பான; பணை=மூங்கில்; பாங்கு=பக்கம்; பாங்கென்ன வைத்து=ஒரு பாகத்தில் வைத்து; சாய்க்காட்டான் என்று தலத்து இறைவனின் திருநாமம் இங்கே குறிப்பிடப் படுகின்றது.
 
பொழிப்புரை:

கோங்கின் அரும்பு போன்று குவிந்த மார்பகங்களையும், செழித்து வளர்ந்த மூங்கில் போன்ற அழகான தோள்களையும், கொடி போன்று துவளும் மெல்லிய இடையினையும் கொண்டுள்ள பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தினில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வைத்தவரும், தனது படர்ந்த சடையின் மீது பால் நிறத்தினில் அமைந்த பிறைச் சந்திரனை தாங்கியவரும் ஆகிய இறைவன் பூம்புகார் சாய்க்காடு தலத்தினில் உறைகின்றான். அவனது  திருப்பாதங்களின் நிழலில் தங்கி உய்வினை அடைந்தவர்களே வாழ்க்கையினில் உயர்ந்தவர்களாக உலகத்தவரால் கருதப் படுவார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com