146. மண் புகார் வான் - பாடல் 6

பெருமானின் அடியார்கள்
146. மண் புகார் வான் - பாடல் 6


பாடல் 6:

    சாந்தாக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன்
    தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான் திருமுடி மேல்
    ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள்
    தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே

   
விளக்கம்:

தீந்து=தீய்ந்து; சாந்து=சந்தனம்; ஆகம்=உடம்பு; கொளுவ=கொள்ளும் வண்ணம்; கொள்ள என்ற தன்வினைச் சொல்லின் பிறவினைச் சொல்லாக வருவது கொளுவ; செற்று=வென்று; ஓய்ந்து=தனது கவலைகளிலிருந்து ஒய்வு பெற்று; ஆர=பொருந்த; பெருமானின் அடியார்கள் உலகத்தவரால் மிகவும் உயர்வாக மதிக்கப் படுவார்கள் என்று சென்ற பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில், பெருமானை வழிபட்டு, அவரது அடியான் சந்திரன் அடைந்த பயனை குறிப்பிடுகின்றார். மன்மதனை வெற்றி கொண்ட பெருமான் என்பதற்கு இரண்டு விதமாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மன்மதன் தனது கணைகளால் தாக்கிய பின்னரும், தொடர்ந்து தவம் செய்தவர் பெருமான் என்றும், மன்மதனின் உதவி ஏதும் தேவைப்படாமல் பார்வதி தேவியை திருமணம் புரிந்து கொண்டவர் என்றும், இரு வகையிலும் மன்மதனை வெற்றி கொண்ட நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது.          

பொழிப்புரை:

திருநீற்றினை, நறுமணம் வீசும் சந்தனமாக பாவித்துத் தனது திருமேனியில் பூசிக் கொள்பவன் சாய்க்காடு தலத்தில் பொருந்தி உறையும் பெருமான். மன்மதனின் உடல் தீய்ந்து எறியும் வண்ணம் அவனை வெற்றி கொண்டு மகிழ்ந்தவன் ஆவான். நாளுக்கு நாள் தனது கலைகள் தேய்ந்து, ஒற்றைப் பிறையுடன் முழுவதும் அழிந்து விடும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனின் கவலைகள் முற்றிலும் ஓயும் வண்ணம், பிறைச்சந்திரனை தனது சடையில் அணிந்து கொண்டு, சந்திரன் அழியாமல் தொடர்ந்து ஒளிவீசும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான். மலைமகளின் தோளினில் தோய்ந்த பெருமான், மலைமகளை  தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்ட பெருமான், இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டவர் ஆவார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com