146. மண் புகார் வான் - பாடல் 8

இறைவனை வணங்குவோம்
146. மண் புகார் வான் - பாடல் 8


பாடல் 8:

    தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ணப்
    பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும்
    தட வரையால் தடவரைத் தோள் ஊன்றினான் சாய்க்காட்டை
    இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே   
    

விளக்கம்:

சென்ற பாடலில் பெருமானின் அடியார்களின் மனப்பாங்கினை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அத்தகைய அடியார்களுக்கு இடர்கள் ஏதும் இல்லை என்று கூறுகின்றார். இந்த பாடலில் திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை எரித்த அம்பின் தன்மையை தொடலரிய கணை என்று கூறுகின்றார். அக்னியை முனையாகக் கொண்ட அம்பினை எவ்வாறு மற்றவர்களால் எவ்வாறு தொடமுடியும். தடவரை=அகன்ற மலை;

பொழிப்புரை:

தனது நுனியினில் அக்னியைக் கொண்டுள்ள தன்மையால், வெம்மை உடைத்தாக உள்ளமையால் எவரும் தொடுவதற்கு மிகவும் அரியதாக காணப்படும் அம்பினைக் கொண்டு திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் நெருப்பினால் எரித்து அழித்த பெருமான், படம் எடுத்து ஆடும் பாம்பினை அழகிய அணிகலனாகக் கொண்டுள்ளான்.

பண்டைய காலத்தில் அரக்கன் இராவணனின் அகன்ற தோள்களை, தனது கால் பெருவிரலால் பெரிய கயிலை மலையினை அழுத்தி, அடர்த்து நெரித்து, அரக்கனது வலிமையை அடக்கியவன் சிவபெருமான். அவன் வீற்றிருக்கும் தலமாகிய சாய்க்கட்டினை சிறந்த தலமாக கருதி, அதனைச் சென்றடைந்து இறைவனை வணங்குவோம் என்று எண்ணும் அடியார்களுக்கு துன்பங்கள் ஏதும் ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com