146. மண் புகார் வான் - பாடல் 11

இம்மையில் துன்பமேதும் இன்றியும்
146. மண் புகார் வான் - பாடல் 11


பாடல் 11:

நொம்பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும்
எம் பந்தம் எனக் கருதி ஏத்துவார்க்கு இடர் கெடவே


விளக்கம்:

நொம்=நோகும் வண்ணம்; பைந்து=பந்து; ஒல்கு=தளர்ச்சி அடைந்து; பூங்காழி=ஆழகிய சீர்காழி நகரம்; பந்தம்=பற்றுகோடு;

பொழிப்புரை:

புடைத்த பந்துகள் மோதுவதால் தளர்ச்சி அடையும் மென்மையான கால்களில் நூபுர அணியினை அணிந்து கொண்டு அழகிய பந்துகளும் கழற்சிக் காய்களும் விளையாடும் மகளிர் எழுப்பும் ஓசை நிறைந்து காணப்படும் அழகிய சீர்காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், சாய்க்காடுப் பெருமானை புகழ்ந்து பாடிய பத்து பாடல்களையும் தமது பற்றுக்கோடாக கருதி ஓதி, பெருமானைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.

முடிவுரை:

புகார் என்ற சொல்லினை நயமாக நான்கு அடிகளிலும் பயன்படுத்தி பதிகத்தின் முதல் பாடலை தொடங்கும் ஞானசம்பந்தர், பெருமானின் திருவடிகளைத் சாரும் அடியார்கள் இம்மையில் துன்பமேதும் இன்றியும் மறுமையில், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று சிவலோக வாழ்க்கையினையும் பெற்று மகிழ்வார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அருள் புரியும் பெருமானின் கருணைத் திறனைக் கற்றும் கேட்டும் அறிந்த சான்றோர்கள் அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறுகின்றார். கற்றோர்களின் செயலை அறிந்த நாமும், வாழ்க்கை நிலையாமையை உணர்ந்தவர்களாக, இன்றையிலிருந்தே தினமும் பெருமானை புகழ்ந்து பாடி நல்வினையை சேர்த்துக் கொள்ளலாம் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறுகின்றார். இவ்வாறு பெருமானைப் புகழ்ந்து பாடும் நிலையினை சென்று அடைந்த பின்னர், பெருமானின் திருப்பாதங்களில் மலர்கள் தூவி வழிபட வேண்டும் என்று நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். சென்ற பாடலில் குறிப்பிட்ட வண்ணம் பெருமானின் திருவடிகளின் பெருமையை உணர்ந்து சரணடையும் மக்களே வாழ்வினில் உயர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். ஆறாவது பாடலில் பெருமானிடம் சரணடைந்த, அழியும் நிலையிலிருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன் மறுவாழ்வு பெற்றதை குறிப்பிடுகின்றார். ஏழாவது பாடலில், சாய்க்காட்டு பெருமானின் அடியார்கள் சொர்கத்தினும் உயர்ந்த சிவலோக வாழ்வினை பெறுவதற்கு தகுதி உடையவர்களாக இருப்பதால் சுவர்க்க லோக வாழ்வினையும் பொருட்படுத்தாமல் சிவலோக வாழ்வினையே சிறந்ததாக கருதி வாழ்வார்கள் என்று கூறுகின்றார். எனவே இந்த சாய்க்காடு தலத்தினை அடையும் அடியார்களுக்கு இடர்கள் ஏதும் இல்லை என்று எட்டாவது பாடலில் கூறுகின்றனர். அளப்பதற்கு மிகவும் அரிதான பெருமையை உடைய பெருமானை தெய்வமாக போற்றாதவர்களின் அறிவினை ஞானமாக தான் கருதவில்லை என்று சம்பந்தர் சாடுவதை பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் நாம் காணலாம். மேலும் இந்த பாடலில் அளவிடமுடியாத பெருமானின் பெருமைகளை இடைவிடாது இசைப் பாடல்களாக மகளிர் பாடுகின்றனர் என்றும் கூறுகின்றார். சாய்க்காட்டு தலத்தின் அடியார்களின் தன்மையையும், அந்த அடியார்கள் பெறுகின்ற நன்மைகளையும் முந்திய பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் உலகத்தவரை சமணர்கள் மற்றும் புத்தர்களின் வீண் சொற்களை புறக்கணிக்குமாறு அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம், மாற்று மதத்தவர் உண்மையை திரித்துச் சொல்லும் வீண்பழிச் சொற்களை நாம் புறக்கணிக்கவேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில், தேவாரப் பதிகங்களை பற்றுக்கோடாக கொண்டு, அந்த பதிகங்களை பாடி இறைவனைப் புகழும் அடியார்கள் துன்பங்கள் நீங்கப்பெற்று இன்பமுடன் வாழ்வார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. நாமும் தேவாரப் பாடல்களை பக்தியுடன் ஓதி, இம்மையில் துன்பங்கள் தீர்க்கப்பெற்று வாழ்வோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com