147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 2

மேற்கிலிருந்து வீசும் காற்றினை
147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 2

பாடல் 2:

    பண்டலைக் கொண்டு பூதங்கள் பாட நின்றாடும்
    வெண்டலைக் கருங்காடு உறை வேதியன் கோயில்
    கொண்டலைத் திகழ் பேரி முழங்கக் குலாவித்
    தண்டலைத் தடமா மயிலாடு சாய்க்காடே

விளக்கம்:

பண்டலை=பண்+தலை; தலைக்கொண்டு=முதன்மை அளித்து; கொண்டல்=கிழக்கு திசையில் இருந்து வரும் காற்றினால் உந்தப்படும் மேகம்; தெற்கிலிருந்து வீசும் காற்றினை தென்றல் என்றும், மேற்கிலிருந்து வீசும் காற்றினை கோடை என்றும் வடக்கிலிருந்து வீசும் காற்றினை வாடை என்றும் கூறுவார்கள். பேரி=பேரிகை; தண்டலை=தண்+தலை; தண்டலைத் தடம்=குளிர்ந்து பரந்து காணப்படும் சோலைகள்; இந்த பாடலில் பேரிகைகள் இடி போன்று முழங்க, மயில்கள் களிப்புடன் நடமாடின என்று சம்பந்தர் கூறுகின்றார். பொதுவாக இடிகளின் ஓசையினைக் கேட்கும் மயில்கள், அடுத்து மழை வரும் என்ற நம்பிக்கையில் களிப்புடன் நடமாடும் என்று கூறுவார்கள். இங்கே பேரிகைகளின் முழக்கத்தை கேட்ட மயில்கள், அந்த ஓசையினை இடியின் ஓசையாக கருதி, மழையினை எதிர்பார்த்து களிப்புடன் நடமாடின என்று நயமாக கூறுகின்றார்.    

பொழிப்புரை:

பண்களுக்கு முதன்மை அளித்து பூதங்கள் பாட, அத்தகைய பாடலுக்கு பொருந்தும் வண்ணம் நின்று நடனம் ஆடுபவனும், வெண்மையான மண்டையோடுகள் சிதறிக் கிடக்கும் கருங்காட்டினில் உறைபவனும், வேதியனாக விளங்குபவனும் ஆகிய இறைவன் உறையும்  திருக்கோயில், சாய்க்காடு தலத்தில் உள்ளது. கிழக்கிலிருந்து வீசும் காற்றினால் உந்தப்படும் மேகங்கள் ஒன்றோடொன்று மோத ஏற்படும் இடியோசையினை ஒத்து பேரிகைகள் முழங்க, பேரிகையின் ஓசையினை இடியின் ஓசை என்று தவறாக நினைத்து, குளிர்ந்தும் பரந்தும் காணப்படும் சோலைகளில் மயில்கள் குலாவி ஆடும் இடம் சாய்க்காடு தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com