147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 5

உடல் வலிமை
147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 5


பாடல் 5:

    ஏழைமார் கடை தோறும் இடு பலிக்கென்று
    கூழை வாளரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
    மாழை ஒண் கண் வளைக்கை நுளைச்சியர் வண் பூந்
    தாழை வெண்மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே

விளக்கம்:

ஏழைமார்=மகளிர்; பொதுவாக உடல் வலிமையில் ஆண்களை விடவும் குறைந்தவர்களாக இருப்பதால் மகளிரை ஏழை என்று குறிப்பிடுவார்கள். இங்கே தாருகவனத்து மகளிர் என்று பொருள் கொள்ளவேண்டும். கடை=வாயில்; கூழை=கடைப் பகுதியில்; இங்கே வால் பகுதி என்று பொருள் கொள்ளவேண்டும்  பாம்பு தலைப்பகுதியில் சற்று பருத்தும் கீழே செல்லச் செல்ல, உடல் மெலிந்து வால் பகுதியில் மிகவும் மெலிந்து காணப்படும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மாழை=ஒளி வீசும்; நுளைச்சியர்=நெய்தல் நிலத்து மகளிர் நுளைச்சியர் என்றும் ஆண்கள் நுளையர் என்றும் அழைக்கப் படுவார்கள். நெய்தல் என்பது கடலும் கடலைச் சார்ந்த இடமாகும். வண்=செழுமை மிகுந்த, மாழை என்ற சொல்லுக்கு மான் என்று பொருள் கொண்டு, மான் போன்று மருண்ட பார்வையினை உடைய கண்களைக் கொண்ட மகளிர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.       

பொழிப்புரை:

தாருகவனத்து மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்களின் இல்லத்தின் வாயிலில் நின்று, பிச்சை இடுவீர்களாக என்று கேட்டபடியே, ஒளிவீசுவதும் வால் பகுதியில் மிகவும் மெலிந்தும் காணப்படுவதும் ஆகிய பாம்பினை தனது விருப்பப்படி ஆட்டுவிக்கும் பெருமான் உறைகின்ற இடம் சாய்க்காடு தலத்தில் உள்ள கோயிலாகும். ஒளி வீசும் கண்களையும், ஒளி வீசும் வளையல்களை அணிந்த கைகளையும் உடைய நெய்தல் நிலத்து மகளிர்கள் செழிப்பாக வளார்ந்த தாழை வெண் மடல்களை கொய்து மகிழும்  இடம் சாய்க்காடு ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com