147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 10

சிவபெருமானை நண்பனாக


பாடல் 10:

    ஊத்தை வாய்ச் சமண் சாக்கியர்க்கு என்றும்
    ஆத்தமாக அறிவரியாதவன் கோயில்
    வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே
    பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே

விளக்கம்:

ஆத்தம்=நெருங்கிய நட்பு; ஆப்தம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். தம்மிடம் அன்பு காட்டும் மனிதர்களுக்கு கருணையுடன் உதவி செய்யும் சிவபெருமானை நண்பனாக கருதாமல் எதிரியாக கருதி, அவன் மீது வீண் பழிச்சொற்களை தொடுக்கும் சமணர்கள் மற்றும் ;புத்தர்கள் என்பதை சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். கையர்=கீழ்மை நிலையில் உள்ளவர்; வாவி=சிறிய குளங்கள்;   

பொழிப்புரை:

பல் துலக்காததால் அழுக்கேறிய வாய்களை உடையவர்களாக விளங்கிய சமணர்களும் புத்தர்களும், பெருமானை நண்பனாக கருதாமல் விரோதியாக பாவித்தமையால், அவர்களால் காண இயலாத வண்ணம் இருக்கும் பெருமான் உறையும் கோயில் சாய்க்காடு தலமாகும். தகுதி வாய்ந்து அழகுடன் காணப்படும் மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூக்கள் நிறைந்து அழகுடன் பொலிந்து காணப்படும் சிறு குளங்கள் உடையது சாய்க்காடு தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com