147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 11

புகழ்ந்து கொண்டாடும் பெருமான்
147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 11


பாடல் 11:

    ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை
    ஞான சம்பந்தன் காழியர் கோன் நவில் பத்தும்
    ஊனம் இன்றி உரை செய்ய வல்லவர் தாம் போய்
    வானநாடு  இனிது ஆள்வர் இம் மானிலத்தோரே
    

விளக்கம்:

சென்ற பாடலில் குறிப்பிடப்பட்ட சமணர்கள் மற்றும் புத்தர்கள் தவிர்த்து மற்ற அனைவரும்  புகழ்ந்து கொண்டாடும் பெருமான் என்றும், தலத்தினில் வாழ்ந்த உபமன்யு முனிவர், ஆதிசேஷன், இந்திரன், இந்திரனின் தாயார், இயற்பகை நாயனார், பட்டினத்தார் போன்ற அடியார்களால் வணங்கப்பட்ட இறைவன் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம்.  நவின்ற=விருப்பத்துடன் சொன்ன; வான நாடு=உயர்ந்த உலகம். கயிலை மலையினை ஆளும் தகுதி இறைவன் ஒருவனுக்கே இருப்பதால், இந்த பாடலில் ஆள்வோர் என்று குறிப்பிட்டு இந்திர பதவியை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும்.   

பொழிப்புரை:

சமணர்கள் மற்றும் புத்தர்கள் தவிர்த்து ஏனையோர் புகழ்ந்தும் போற்றியும் வணங்கும், சாய்க்காடு தலத்தில் உறையும் தனது தந்தையாகிய பெருமானை, சீர்காழி நகரின் தலைவனாகிய ஞானசம்பந்தன், விருப்பத்துடன் சொன்ன இந்த பத்து பாடல்களையும் குற்றம் ஏதுமின்றி உரிய பண்ணினை பொருத்தி பாடும் வல்லமை வாய்ந்த நிலவுலகத்து அடியார்கள், அனைவரும் புகழும் வண்ணம் வானநாடு சென்று ஆள்வார்கள்.    

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் தினமும் நியமத்துடன் இறைவனை வழிபடும் மனிதர்களுக்கு அருள் செய்பவன் பெருமான் என்பதை சம்பந்தர் உணர்த்துகின்றார். அடுத்து வரும் பாடல்களில் இறைவனின் தன்மை உணர்த்தப் படுகின்றன. இரண்டாவது பாடலில் பூத கணங்களின் பாடலுக்கு ஏற்ப நடமாடுபவன் பெருமான் என்று கூறும் சம்பந்தர் மூன்றாவது பாடலில் பிறைச் சந்திரனையும் கங்கை நதியையும் தனது சடையில் ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நான்காவது பாடலில், வேண்டுவார் வேண்டும் வரங்கள் அருளும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், புகார் நகரம் சம்பந்தரின் காலத்தில் கடல் வாணிபத்திற்கு சிறந்த துறைமுகமாக இருந்த நிலையினை ஐந்தாவது பாடலில் உணர்த்துகின்றார். துன்பத்தில் உழலும் உயிர்களுக்கு பெருமானின் திருவடி நீழல் துயரத்தினை நீக்கி இன்பம் தரும் என்பது ஆறாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேதங்களை முதன்முதலாக அருளியவர் பெருமான் என்ற செய்தி ஏழாவது பாடலில் கூறப் படுகின்றது. எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில், வழக்கமாக காணப்படும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கடைப்பாடலில், இந்த பதிகத்தினை எந்தவிதமான குற்றமும் இல்லாமல் பாடும் அடியார்கள் இந்திரபதவியை அடைவார்கள் என்று கூறுகின்றார். நாமும் சம்பந்தர் அருளிய இந்த பதிகத்து பாடல்களை முறையாக பாடி, இம்மையில் நமது துன்பங்கள் தீர்க்கப்பேற்று மறுமையில் நல்ல பலன்களைப் பெற்று வாழ்வோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com