148. உண்டாய் நஞ்சை உமை - பாடல் 1

முக்குளத்தில் நீராடினால்
148. உண்டாய் நஞ்சை உமை - பாடல் 1

பின்னணி:

தனது இரண்டாவது தலயாத்திரையின் போது பல்லவனீச்சரம்  மற்றும் சாய்க்காடு (இரண்டு தலங்களும் பூம்புகார் நகரத்தில் உள்ளன) ஆகிய இரண்டு தலங்கள் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள திருவெண்காடு தலம் செல்கின்றார். திருவெண்காடு தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. கண் காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகம் பாடி (2.48) பிள்ளை வரம் வேண்டுவோர், வெண்காடு தலம் சென்றடைந்து ஒரு மண்டலம் விரதமிருந்து பெருமானை அனுதினமும் வணங்கி ஆங்குள்ள முக்குளத்தில் நீராடினால் பழைய வினைகள் கழிக்கப்பட்டு, மக்கட்பேறு ஏற்படும் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். மேலும் மந்திர மறையவை என்று தொடங்கும் பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் களையப் பெறுவார்கள் என்பது தனது ஆணை என்று கூறுகின்றார். இங்கே சிந்திக்கப்படும் பதிகத்தின் பாடல்களில், பெருமான் தனது அடியார்களுக்கு எவ்வாறெல்லாம் இறைவன் அருள் புரிகின்றார் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.     

பாடல் 1:

    உண்டாய் நஞ்சை உமை ஓர் பங்கா என்று உள்கித்
    தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
    அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும்
    வெண் தாமரை மேல் கரு வண்டு யாழ் செய் வெண்காடே

 
விளக்கம்:

அண்டா வண்ணம்=அணுகாத வண்ணம்; தொண்டாய் திரிதல்=உடலாலும் மனத்தாலும் இறைவனுக்கு திருப்பணி செய்தல்; பெருமான் அடியார்களுக்கு பல விதத்திலும் அருள் புரிந்து உதவுவதை விளக்கும் பாடல்கள் கொண்ட பதிகம், பெருமான் செய்த மிகப் பெரிய தியாகத்தை குறிப்பிட்டு தொடங்குகின்றது. பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தின் நெடியை தாங்க முடியாமல் திசைக்கு ஒருவராக பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் ஓடியபோது, தயக்கம் ஏதும் இன்றி அந்த நஞ்சினை தானே உண்டு, அனைவரையும் காத்த பெருமானின் கருணைச் செயல் குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு உயர்ந்த தியாகத்தினை புரிந்த பெருமான், தியாகராஜன் என்று அழைக்கப்படுவது மிகவும் பொருத்தம் தானே. தனது உடலின் ஒரு பாதியை, பிராட்டியின் வேண்டுகோளினை  ஏற்றுக்கொண்டு, அளித்த செயல், வேறு எவரும் செய்யாத அரிய செயல் அல்லவா. இவ்வாறு அடியார்களுக்கு வேண்டிய வரத்தினை அருளுவதால் தானே, எல்லையற்ற நிகரற்ற வரங்களை அருள்பவன்  என்று பெருமானை அனைவரும் ;புகழ்கின்றனர்.  
    
பொழிப்புரை:

பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் அரக்கர்கள் அனைவரும் பதறி எட்டு திசைகளிலும் ஓடும் வண்ணம் விரட்டிய கொடிய நஞ்சினைத் தான் உட்கொண்டு தேவர்கள் உள்ளிட்ட அனைத்து உலகத்தவரையும் காப்பாற்றிய பெருமானே என்று மனதினில் தியானித்து, தனக்கு தொண்டராகி பலவாறு திருப்பணிகள் புரியும் அடியார்களை துயரங்கள் அணுகாத வண்ணம், அவற்றை அறுத்தருளும் பெருமான் உறையும் இடம் திருவெண்காடு தலமாகும். எமது தந்தையாகிய பெருமான் குடி கொண்டுள்ள இந்த தலத்தினில் செழித்து வளர்ந்துள்ள தாமரை மலர்களில் உள்ள தேனினை உண்பதற்காக மலர்களின் மீது அமர்ந்துள்ள கருவண்டுகள், தேன் உண்ட களிப்பினை வெளிப்படுத்தும் வண்ணம் யாழிசை போன்று முரல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com