148. உண்டாய் நஞ்சை உமை - பாடல் 2

சோலைகளில் வாழும் கிளிகள்
148. உண்டாய் நஞ்சை உமை - பாடல் 2

பாடல் 2:

    நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்திப்
    பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள் மேல்
    ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும்
    வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே

விளக்கம்:

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் வேள்விப் புகையால் வானம் இருண்டு காணப்படும் வெண்காடு என்று சம்பந்தர் சொல்கின்றார். இடைவிடாது வேத மந்திரங்கள் சொல்லப் பட்டதால், வேதத்தில் உள்ள சொற்களைக் கொண்டு இந்த தலத்தில் உள்ள கிளிகள் சொற்களை பேசப் பழகிக் கொள்கின்றன என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல் ஒன்றினை (2.48.6) நினைவூட்டுகின்றது சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் அதிகமாக இருந்த ஊரான வெண்காட்டில், அரன் நாமம் ஆங்கு உள்ளோர் சொல்லக் கேட்டு கிளிகளும் அவனது நாமத்தை கூறும் திறமை படைத்தன என்று சம்பந்தர் பிரான் இந்த பாடலில் குறிப்பிட்டு மகிழ்கின்றார்.

    தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையின் உடன்
    ஒண்மதிய நுதல் இமையோர் கூறு உகந்தான் உறை கோயில்
    பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசும் கிள்ளை
    வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வரும் திருதிருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பாசுரம்  ஒன்றினில், திருமால் பால் தீராத காதல் உடையவளாக இருந்த ஒரு நங்கை,  தான் வளர்த்த கிளி. அரியின் நாமம் சொல்லக் கேட்டு அந்த கிளியை கை கூப்பி மகிழ்ந்தாள் என்று கூறுகிறார். இறைவனின் நாமத்தை கிளிகளோ அல்லது வேறு எவரோ சொல்லக் கேட்பது அருளாளர்களுக்கு எத்துணை மகிழ்ச்சியை தருகின்றது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பாசுரத்தை திரு நெடுந்தாண்டகத்தில் நாம் காணலாம்.  

முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூ உலகும் கடந்து அப்பால்             முதலாய் நின்ற
அளப்பு அறிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம்                 சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில் வெக்காவில் திருமாலை             பாடக்  கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி                வணங்கினாளே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.132.1) வீழிமிழலை தலத்து சோலைகளில் வாழும் கிளிகள், பண்டிதர்கள் பலநாட்கள் இடைவிடாது சொல்லிய வேதங்களைக் கேட்டு பழகிய கிளிகள், அந்த வேத மந்திரங்களுக்கு பொருள் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தன என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

ஏரிசையும் வட ஆலின் கீழ் இருந்தங்கு ஈரிருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான்மறைப் பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற      கோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு
வேரிமலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலையாமே

வேதங்களுக்கு கிளிகள் பொருள் சொல்வதாக சம்பந்தர் மேற்கண்ட பாடலில் கூறுவது, நமக்கு ஆதி சங்கரரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை நினைவூட்டுகின்றது. மீமாம்சை சாத்திரத்தில் வல்லவராக விளங்கிய மண்டனமிஸ்ரர் என்பவருடன் வாதம் செய்ய விரும்பிய ஆதிசங்கரர், அவர் வாழ்ந்து வந்த மாகிஷ்மதி என்ற நகரம் செல்கின்றார். அந்த நகரம் சென்றடைந்த சங்கரர், பண்டிதரின் வீடு எங்கே உள்ளது என்று கேட்க, ஆங்கிருந்த மக்கள், எந்த வீட்டுத் திண்ணையில் கிளிகள் அமர்ந்து கொண்டு வேதங்கள் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றனவோ அந்த வீடே மண்டனமிஸ்ரரின் வீடு என்று அடையாளம் காட்டுகின்றனர். இந்த இரண்டு குறிப்புகளும் தென்னாடு மற்றும் வடநாடு ஆகிய இரண்டு இடங்களிலும் வேதங்களில் பயிற்சி பெற்ற பண்டிதர்கள் நாள்தோறும், வேதங்களின் பொருளை தங்களது சீடர்களுக்கு சொல்லி வந்தனர் என்பது புலனாகின்றது.  

நவின்று=விருப்பத்துடன்; ஏத்தி=புகழ்ந்து; ஏதம்=குற்றங்கள், குற்றங்களால் விளையும் துன்பங்கள்; சொல் பயிலும்=தொடர்ந்து கற்றுக்கொள்ளும்; பொதுவாக சொல் என்றால் வேதத்தில் உள்ள சொற்களை குறிக்கும். பன்னாள்=பல நாட்கள்; தலைவனாகிய பெருமான் நிச்சயம் என்றேனும் ஒரு நாள் நம்மை ஆட்கொள்வான் என்ற நம்பிக்கையில் தொழும் அடியார்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு, மணிவாசகரின் திருவாசகப் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. கோயில் மூத்த பதிகத்தின் கடைப் பாடலில், மணிவாசகர், தன்னை உடையவனாகிய சிவபெருமானே என்று அழைத்து, தளர்ந்து கிடக்கும் தனது உயிருக்கு இரங்கி, சிவபெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகின்றார். தனது நிலை கண்டு இரக்கம் கொண்டு இறைவன் என்றாவது ஒரு நாள் அருள் நல்குவான் என்ற நம்பிக்கையில், அவனது திருநாமங்களை பல முறை பிதற்றியும், கண்களில் நீர் பெருகியும், குழறுகின்ற வாயினால் வாழ்த்தியும், மனத்தால் பல முறையும் தியானித்தும், மனம் மொழி மெய் ஆகிய மூன்று கருவிகளாலும் இறைவனை நினைத்துத் தான் இருக்கும் நிலையை இங்கே உணர்த்துகின்றார். இந்த நிலையை அடைந்து, மணிவாசகர், அப்பர் பிரான் ஆகியோர் பெற்ற பேற்றினை நாமும் பெறவேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்
    மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி
    பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே
    ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே  
 
            
பொழிப்புரை:

நமக்கு தலைவனாகிய பெருமான் நம்மை ஆட்கொண்டு அருள் புரிவான் என்ற நம்பிக்கையுடன் மிகுந்த விருப்பம் கொண்டு பல நாட்களும் அவனது திருப்பாதங்களைப்  பணிந்து வணங்கும் அடியார்களின் குற்றங்களையும் அந்த குற்றங்களால் விளையும் தீமைகளையும் தீர்த்து அருள் புரியும் இறைவன் வாழும் ஊர் திருவெண்காடு தலமாகும். இந்த தலத்தில் வாழும் அந்தணர்கள் தொடர்ந்து வேதங்கள் ஓதுவதைக் கேட்கும் கிளிகள்,  அந்த வேத மந்திரங்களின் சொற்களை பயின்று பேசும் பெருமை உடையனவாக விளங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com