149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 1

வேந்தனைப் புகழ்ந்து
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 1

பின்னணி:

தனது இரண்டாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவெண்காடு சென்ற ஞானசம்பந்தர், வெண்காட்டு வேந்தனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடி வணங்கிய பின்னர், அருகில் உள்ள திருமுல்லை வாயில் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். வெண்காட்டு பெருமானை விட்டு பிரிவதற்கு மனமின்றி பிரிந்தார் என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார். இந்த பாடலில் மருவிய பதிகள் சென்றார் என்று குறிப்பிடும் தலங்களில் ஒன்றாக கீழைத் திருக்காட்டுப்பள்ளி இருக்கலாம் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பின்னர் சீர்காழி வந்து சேர்ந்தார் என்று குறிப்பிடுவதால், இந்த தலத்திற்கு அருகில் உள்ள தலங்களுடன்  ஞானசம்பந்தரின் இரண்டாவது தலயாத்திரை முடிவடைகின்றது என்று நாம் கருதலாம்.  செந்தமிழ்=செம்மை+தமிழ்; செம்மைப் பொருளாகிய சிவத்தைச் சென்று அடைவதற்கு உதவும் பதிகம் என்பதால், செந்தமிழ் என்று சேக்கிழார் சிறப்பித்து சொல்வதாக அறிஞர்களால் விளக்கம் அளிக்கப் படுகின்றது.  

    அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில்
    திருமுல்லைவாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி
    மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்
    தருமலி புகலி வந்து ஞானசம்பந்தர் சார்ந்தார்

   
இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. சீர்காழியிலிருந்து பதினான்கு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். சீர்காழியிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. திருவெண்காடு தலத்திற்கு அருகில், கடற்கரையில் உள்ளது. முல்லைவாயில் என்ற பெயருடன் சென்னையின் அருகே வேறொரு தலம் இருப்பதால், வேறுபடுத்தி காட்டும் வண்ணம் தென்திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் திருநாமம் முல்லைவனநாதர். இறைவியின் திருநாமம் கோதை நாயகி. சுயம்பு இலிங்கம். தட்சிணாமூர்த்தி வடிவம் மேற்கொண்டு, இறைவன் உமை அன்னைக்கு பஞ்சாக்கர மந்திரம் உபதேசம் செய்த தலமாக கருதப்படுகின்றது. சிவபெருமான் குருவாக கருதப் படுவதால், இங்கே பள்ளியறை இல்லை.

இலிங்கத்தின் திருமேனியில் வெட்டுத் தழும்புகள் காணப்படுகின்றன. சோழ மன்னன்  கிள்ளிவளவன் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட போது, கடலில் நீராடி வியாதியை போக்கிக் கொள்ளலாம் என்று இந்த பக்கம் வந்தான். அப்போது அவனது குதிரையின் கால்கள் முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டன. முல்லைக் கொடியினை தனது வாளினால் அறுத்த மன்னன், தனது வாளினில் இரத்தம் தோய்ந்து இருந்ததைக் கண்டு இரத்தம் எங்கிருந்து வந்தது என்பதை அரிய முயன்றான். அவன் ஒரு லிங்கம் தலையில் வெட்டுப்பட்டு இருந்ததையும் அதன் மேல் இரத்தம் வடிந்ததையும் கண்டு அச்சம் கொண்டான். தான் செய்த சிவ அபராதத்திற்கு தனது உயிரினை மாய்த்துக் கொள்வதே சிறந்த பிராயச்சித்தம் என்று கருதிய மன்னன், தனது தலையை அறுத்துக் கொள்வதற்கு  தனது வாளினை உருவினான். அப்போது பெருமான் இடபத்தின் மேல் அமர்ந்தவராக, உமை அன்னையுடன் மன்னனுக்கு காட்சி அளித்தார். மனம் மகிழ்ந்த மன்னன் பெருமானுக்கு கோயில் கட்டியதாக தலபுராணம் கூறுகின்றது. இலிங்கத்தின் மேல் கத்தியால் ஏற்பட்ட அடையாளத்தையும் முல்லைக் கொடிகள் சுற்றி படர்ந்ததால் ஏற்பட்ட அடையாளத்தையும் இன்றும் காணலாம்.

கசாலி என்ற முனிவரின் மகன் வாமதேவர், தனது தந்தை இறந்த பின்னர், தந்தையின் எலும்புகளை பல தீர்த்தத்தில் கரைத்தார். எங்கும் எந்தவிதமான மாறுதலும் ஏற்படவில்லை. இந்த தலத்தில் கரைத்த போது எலும்புகள் மணிகளாக மாறின. வியப்படைந்த முனிவர், தனது தந்தையின் ஈமக் கிரியைகளை இங்கே செய்தார் என்று கூறுவார்கள். இந்த காரணம் பற்றியே புண்ணிய காலங்களில் இந்த தலத்தில் உள்ள கடலில் நீராடுவது சிறப்பாக கருதப் படுகின்றது.           

பாடல் 1:

    துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்
    ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன் எங்கள் அரன் ஊர்
    களி மண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்
    தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடும் திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

துளி=ஆலகால விடத்தின் துளி. மண்டி=நெருக்கி; பாற்கடலிலிருந்து பெருமளவில் பொங்கிய விடத்தை சிறு உருண்டையாக மாற்றி உட்கொண்ட செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. கொடிய விடத்தின் தாக்கத்திலிருந்து தங்களை காப்பாற்றுமாறு தேவர்கள் வேண்டிய போது, சிவபெருமான், தன்னருகே இருந்த தனது அணுக்கத் தொண்டன் சுந்தரரை ஆலகால விடத்தினை கொண்டு வருமாறு பணித்தார். சுந்தரரும் அந்த விடத்தினை சிறிய உருண்டையாக மாற்றி தனது உள்ளங்கையினில் ஏந்தி பெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சி இங்கே உணர்த்தப் படுகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சி,  அனைவர்க்கும் அச்சம் விளைவித்து விரட்டிய நஞ்சு, பெருமானின் அடியவனாகிய சுந்தரருக்கு தீங்கு ஏதும் விளைவிக்காமல் இருந்த நிலையினையும் உணர்த்துகின்றது. பெருமானின் தொண்டராக வாழ்ந்த அப்பர் பிரானுக்கு, சமணர்கள் பாலினில் கலந்து ஊட்டிய நஞ்சு எந்த தீங்கினையும் செய்யாமல் இருந்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். நிறம் என்று பொதுவாக குறிப்பிட்டாலும் கருமை நிறம் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். கண்டம்=கழுத்து; கண்டன்=கழுத்தினை உடையவன்; மன்னு= பொருந்திய, துன்னு=மிகுந்த; மதுவில் தெளி=தெளிந்த தேன்; சிறை=சிறகுகள்;  

உம்பர் உலகம் கடந்தவன் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவெம்பாவை பாடலை நினைவூட்டுகின்றது. போதார் புனைமுடி=பூக்கள் அணிந்துள்ள சடைமுடி;  பெருமானின் திருமுடி, அனைத்துப் பொருட்களின் எல்லையையும் தாண்டி நிற்பதாக மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். பாதாளம் ஏழினும் கீழே உள்ள இடம் என்ற தொடர் உணர்த்தும் எல்லையையும் கடந்து பெருமானின் திருப்பாதம் இருப்பதாக இங்கே கூறுகின்றார். ஏழு பாதாள லோகங்களையும் கடந்த திருப்பாதங்களையும் அனைத்துப் பொருட்களின் எல்லையையும் கடந்து ஓங்கி நிற்கும் திருமுடியையும் கொண்டுள்ள இறைவன், அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியில் வைத்துள்ளான் என்றும், அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல வகை உருவங்களை அவன் எடுக்க வல்லவன் என்றும், வேதங்கள் விண்ணோர்கள் மண்ணோர்கள் ஆகியோர் எத்தனை துதித்தாலும் அவர்களால் சொல்ல இயலாத வண்ணம் முற்றுப்பெறாத புகழினை உடையவன் என்றும் எண்ணிக்கையற்ற அடியார்களை உடையவன் என்றும் இறைவனைப் புகழ்ந்து பாடிய பெண்களுக்கு திருப்தி ஏற்படவில்லை போலும். அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள துடிக்கும் அவர்கள், திருக்கோயிலுடன் பிணைக்கப்பட்டு எப்போதும் பெருமானின் அருகில் இருக்கும் பெண்களிடம் தங்களது ஐயங்களை தெரிவிக்கின்றனர்.  ஆதி அந்தம் இல்லாத பெருமானுக்கு ஊர் என்பது தனியாக கிடையாது என்பதையும் ஒரு பெயர் இல்லாமல் பல பெயர்களை உடையவன் என்பதையும், தந்தை தாய் போன்ற உறவினர் ஏதும் இல்லாதவன் என்பதையும், அயலார் என்று எவரும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அவனுக்கு நெருக்கமானவை என்பதை இந்த பெண்மணிகள் உணர்ந்திருந்தாலும், இந்த தன்மைகளை மற்றொருவர் சொல்லக் கேட்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது போலும். அதனால் தான் கோயில் பிணாப் பிள்ளைகளை அழைத்து பெருமானின் புகழினையும் தன்மைகளையும் கூறுமாறு வேண்டுகின்றனர்.      

   
    பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
    பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
    வேதம் முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
    கோதில் குலத்து அரன் கோயில் பிணாப் பிள்ளைகள்
    ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
    ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்                
 

பொழிப்புரை:

பாற்கடலிலிருந்து பெருமளவில் பொங்கியெழுந்த ஆலகால விடத்தினை சிறு உருண்டையாக திரட்டி உட்கொண்டு, கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறத்தினை அடைந்த கழுத்தினை உடையவனும், ஒளிவீசும் திருமேனி உடையவனாக நிலையாக பொருந்தி நடனம் ஆடுபவனும், பேரொளிப் பிழம்பாக இருப்பவனும், உமை அன்னையைத் தனது உடலினில் ஒரு பாகமாக உடையவனும், பாதாளத்தையும் மேல் உலகத்தையும் கடந்து ஊடுருவி நிற்கும் நீண்ட திருமேனியை உடையவனும் ஆகிய எங்கள் இறைவனது ஊர் திருமுல்லைவாயிலாகும். காண்போர்க்கு இன்பத்தை தரும் சோலைகளை அடுத்துள்ள  வளம் மிகுந்த கழனிகளில் பூத்துள்ள தாமரை மலர்களில் உள்ள தெளிந்த தேனினை உறிஞ்சி வயிறாரக் குடித்த வண்டுகள், மகிழ்ச்சியின் மிகுதியால் தங்களது சிறகுகளை விரித்து பறந்தவாறு  இசை பாடுகின்ற காட்சிகள் காணப்படுவது  திருமுல்லைவாயில் என்ற தலத்தில்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com