149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 3

முக்தி உலகத்தினை
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 3

பாடல் 3:

    வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்
    ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்
    பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்
    தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

வாராத நாடன்=மீண்டும் நிலவுலகத்திற்கு வர வேண்டிய நிலையினைத் தடுக்கும் முக்தி உலகத்தினை தனது செல்வமாக உடைய சிவபெருமான்; பல திருமுறைப் பாடல்கள் முக்திச் செல்வத்தினை வாரா வழி என்றும் வாராத செல்வம் என்றும் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நிதி என்ற சொல் நெதி என்று திரிந்தது. நிதி=செல்வம்;

திருவதிகை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடலில் (6.3.2) அப்பர் பிரான் வாரா உலகு என்று முக்தி உலகத்தை குறிப்பிடுகின்றார். வில்வலான்=மன்மதன்: தனது கரும்பு வில்லினைக் கொண்டு அனைவரின் மனதிலும் காம உணர்வினைத் தூண்டுவதில் தோல்வி அடையாதவன் என்பதால் வல்லமையாக வில்லினைக் கையாளும் திறமை கொண்டவன் என்று மன்மதன் புகழப் படுகின்றான். அவனது திறமையில் நம்பிக்கை கொண்ட தேவர்கள், அவனால் சிவபெருமானின் தவத்தைக் கலைத்து, அவர் மனதில் உமையம்மையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்துடன், மன்மதனை சிவபெருமான் மீது மலரம்புகளை விடுமாறு கட்டளை இட்டார்கள். ஆனால் பலரையும் தனது கரும்பு வில்லாலும் மலர்க் கணைகளாலும் வெற்றி கொண்ட மன்மதனின் திறமை சிவபெருமானால் அழிக்கப் பட்டது. வில்வட்டம்=வில்லினைக் கையாளும் திறமை;

    வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை வில்வலான் வில்வட்டம் காய்ந்தான்         தன்னைப்
    புள்ளி வரி நாகம் பூண்டான் தன்னைப் பொன் பிதிர்ந்து அன்ன சடையான் தன்னை
    வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை வாரா உலகு அருள வல்லான் தன்னை
    எள்க இடு பிச்சை ஏற்பான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

அப்பர் பிரானும் இதே கருத்தினை, திருவையாறு பதிகத்தின் (6.38.9) பாடலில் மீண்டு வாராத உலகு அருள வல்லவன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். மணிவாசகரும் கீர்த்தித் திருவகலில், மீண்டு வாரா வழி அருள் புரிபவன் என்று இதே கருத்தை வலியுறுத்துகின்றார்.

    எண் திசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே
    வண்டு இசைக்கும் நறும் கொன்றைத் தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய்         நீயே
    தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூமலர்ச் சேவடி என் மேல்             வைத்தாய் நீயே
    திண்சிலைக்கு ஒர் சரம் கூட்ட வல்லாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன்         சோதீ

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில், அப்பர் பிரான், வாராத செல்வம் வருவிப்பான் என்று குறிப்பிடுகின்றார். ஆயிரம் நாமங்கள் கொண்டு வானவர்கள் சிவபெருமானை ஏத்துவதாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், திருமால் சிவபெருமானை புகழ்ந்து அவரது ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு பாடிய சஹஸ்ரநாமம் ஒரு பகுதியாக உள்ளது. திருமால் அருளிய இந்த தோத்திரத்தை, வானவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிவபெருமானை வணங்கினார்கள் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார் என்றும் எண்ணற்ற திருநாமங்களை சொல்லி இறைவனைப் புகழ்ந்தனர் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே.
    பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்    வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
    தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக்         கொண்ட
    போரானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

இந்த தலத்தில் உள்ள இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர். தாரகாசுரனுடன் செய்த போரினில் காயம் அடைந்த தனது படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு. சிவபெருமானை முருகப் பெருமான் வேண்ட, சிவபெருமான் தனது மனைவி உமை அம்மையுடன் இங்கே எழுந்தருளி மருத்துவம் செய்ததாக தல வரலாறு கூறுகின்றது. பெருமான் அளித்த மருந்தினை, எண்ணெயில் குழைத்து காயங்களில் தடவுவதற்கு வசதியாக தேவி, தனது கையில் எண்ணெய்க் கிண்ணம் தாங்கியதால் தேவிக்கு தைல நாயகி என்றும் வைத்தியம் செய்த பெருமானுக்கு வைத்தியநாதன் என்ற பெயரும் ஏற்பட்டன. நாளடைவில் தைல நாயகி என்ற பெயர் தையல் நாயகி என்று மருவிவிட்டது. இந்த தலத்தின் தலமரமான வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து சிவபெருமான் காயம் பட்ட வீரர்களுக்கு சிகிச்சை செய்ததாக நம்பப்படுகின்றது.
மணிவாசகர் திருவம்மானைப் பதிகத்தின் இரண்டாவது பாடலில், சிவபெருமானை வாரா வழி அருளியவன் என்று குறிப்பிடுகின்றார். ஆசை வாரியன்=அன்புக் கடலாக உள்ளவன்; இந்த பாடலிலும் திருவாசகத்தின் வேறு பல பாடல்களிலும், மணிவாசகர் சிவபெருமானை தென்னன் என்று குறிப்பிடுவதை நாம் காணலாம். வேத காலத்திற்கு முன்னமே, தமிழகத்தில் சிவ வழிபாடு இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த கருத்தினை ஒட்டியே, மணிவாசகர் சிவபெருமானை தென்னாட்டிற்கு உரிய கடவுளாக சித்தரிக்கின்றார். மேலும் பாண்டிய மன்னன் மலயத்துவஜனின் மகளாகிய மீனாட்சியை மணந்து கொண்டு சோமசுந்தரராக பாண்டிய நாட்டை ஆண்ட பெருமானை தென்னன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே. பித்தனைப் போன்று தான் மீண்டும் மீண்டும் பெருமானின் திருநாமத்தை பிதற்றும் வண்ணம் செய்தவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார்.

    பாரார் விசும்புள்ளார் பாதளத்தார் புறத்தார்
    ஆராலும் காண்டற்கு அறியான் எமக்கு எளிய
    பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
    வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்து
    ஆரா அமுதாய் அலைகடல் வாய் மீன் விசிறும்
    பேராசை வாரியனைப் பாடுதும் காண் அம்மானாய்

மணிவாசகர் ஆனந்தமாலை பதிகத்தின் மூன்றாவது பாடலில், வாரா உலகு நெறியேற, பெருமான் தனது திருவுருவத்தை தனக்கு காட்டியதாக கூறுகின்றார், செறிவு=உறவு; வழி=ஞானம்; பெருந்துறையில் தன்னை பெருமான் ஆட்கொண்டு திருவடி தீட்சை தந்தமையால் தனக்கு நிச்சயமாக பெருமான் முக்தி அளிப்பார் என்ற நம்பிக்கையை இங்கே வெளிப்படுத்தும் மணிவாசகர், அந்த நாளுக்காக தான் ஏங்குவதாக குறிப்பிடுகின்றார்.  

    சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித்
    தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
    மாலும் காட்டி வழிகாட்டி வாரா உலகு நெறியேறக்
    கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே

திருமூலர் தனக்கு வாராவழி தந்த இறைவனின் பேர் மாநந்தி என்று கூறுகின்றார். சிவபெருமானை நந்தி என்று பல பாடல்களில் திருமூலர் குறிப்பிடுகின்றார். இனிப் பிறந்து உலகின் கண் வாராது ஒரே நிலையாக இருத்தற்குரிய முக்தி உலகம் தந்தமையால்,  பெருமான் பெரியார்களிலும் பெரியவனாக உள்ளான் என்று திருமூலர் இங்கே கூறுகின்றார்.  துன்பக் கலப்பற்று என்றும் அழியாத இன்பத்தினை அருளுவதால் முக்தி உலகத்தினை ஆரா அமுது என்று கூறுகின்றார். பெருமானின் எண்ணற்ற பெயர்களில் ஏதேனும் ஒன்றினை பொருள் உணர்ந்து தியானித்தால், அவனது அருளில் திளைத்து மேற்கூறிய இன்பக் கடலில் என்றும் மூழ்கி இருக்கலாம் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.    

    வாரா வழி தந்த மாநந்தி பேர் நந்தி
    ஆரா அமுது அளித்தான் ஆனந்த பேர் நந்தி
    பேராயிரம் உடைப் பெம்மான் பேர் ஒன்றினில்
    ஆரா அருட்கடல் ஆடுக என்றானே

வில்லின் உரு=வான்வில்லின்; வானவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மனதினுக்கு இன்பம் தருவதாக இருந்தாலும் மிகவும் சிறிய நேரமே நிலைத்து நின்ற பின்னர் மறைந்து விடுகின்றது; மனிதப்பிறவி நமக்கு இன்பம் தருவது போன்று தோன்றினாலும் அந்த இன்பமும் நிலைத்து நீடிப்பதில்லை; மனிதப்பிறவியும் நிலையற்றதாக உள்ளது. வில்லின் உரு என்பதற்கு வயது முதிர்ந்த காலத்தில் உடலில் கூன் விழுவதால் வில் போன்று வளையும் உடல் என்று இளமை நிலையாமையை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. பேராத=நீங்காத; அலர்=மலர், இங்கே தாமரை மலரை குறிக்கின்றது; பிரியாத மார்பின் அலர் மேவு பேதை என்று, தாமரை மலரினில் உறையும் இலக்குமி தேவி திருமாலின் மார்பினை விட்டு பிரியாது இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது.   

பொழிப்புரை:

தனது திருவடிகளை வந்தடைந்த அடியார்களை மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகத்திற்கு அனுப்பாத சிறப்பினை உடைய முக்தி உலகத்தை உடையவன் சிவபெருமான்; வானவில் போன்று தோன்றி விரைவில் மறையும் குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ள மனிதர்கள், உடலும் உள்ளமும் உருகி தன்னை வழிபட்டால், அவர்களுக்கு தெவிட்டாத இன்பத்தை அளித்து, அவர்கள் பால் மிகுந்த அன்பு கொண்டு அவர்களை விட்டு பிரியாது இருப்பவன் சிவபெருமான்; அத்தகைய பெருமான், உலகத்தவர்க்கு அருள் புரியும் நோக்கத்துடன் எழுந்தருளி இருக்கும் ஊர் திருமுல்லைவாயிலாகும். நீங்காத ஒளியுடைய திருமாலின் மார்பினை விட்டு என்றும் பிரியாது இருப்பவளும், மலர்மகள் என்று அழைக்கப்படுபவளும் ஆகிய இலக்குமி தேவியின் அருளினால் செல்வம் தழைத்து ஓங்கும் பெருமையினை உடைய தலம் திருமுல்லைவாயிலாகும்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com