149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 5

மெலிந்த இடையினை
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 5


பாடல் 5:

கொம்பு அன்ன மின்னின் இடையாளொர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானில் மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன ஒண் கணவர் ஆடரங்கின் அணி கோபுரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

கொம்பு=பூங்கொடியின் கொம்பு; கூறன்=ஒரு கூறாக கொண்டுள்ளவன்; விடை=இடபம்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவன்; சென்னி=தலை; ஒண்=ஒளிவீசும்; கணவர்=கண்களை உடைய பெண்கள்; அணி=அழகிய;  செவி=செம்மையான;

பொழிப்புரை:

பூங்கொம்பு போன்றும் மின்னல் போன்றும் மெலிந்த இடையினை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், இடபத்தின் மீது ஏறிக்கொண்டு நாள்தோறும் பல இடங்கள் செல்பவனும், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவனும், நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளவனும், நம் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ளவனும், முதன்முதலாக நான்மறைகளையும் ஓதிய நாவினை உடையவனும், வானில் உலவும் பிறைச்சந்திரனைத் தனது தலையில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் தலம் திருமுல்லைவாயிலாகும். அம்பு போன்று ஒளி மிகுந்த கண்களை உடைய மகளிர் நடமாடும் அரங்குகளும் அழகிய கோபுரங்களும் அணிகலன் போன்று அழகினை மேம்படுத்த, செம்பொன் போன்று அழகிய செம்மையான மாடங்கள் கொண்ட தலம் திருமுல்லைவாயிலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com