149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 6

திருநீறு அழகினைத் தருகின்றது
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 6


பாடல் 6:

    ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன்
    ஆனேறு அது ஏறி அழகேறு நீறன் அரவேறு பூணும் அரனூர்
    மானேறு கொல்லை மயிலேறு வந்து குயிலேறு சோலை மருவித்  
    தேனேறு மாவின் வளமேறி ஆடு திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

ஊனேறு வேல்=உடலில் உள்ள சதையைக் கிழித்துக்கொண்டு பாயும் கூர்மையான  நுனியினை உடைய வேற்படை; அழகேறு நீறன்=அழகு தரும் திருநீற்றினைத் தனது உடலில் பூசியுள்ள இறைவன். அழகு தரும் நீறு என்று இங்கே கூறுவது நமக்கு மந்திரமாவது நீறு பதிகத்தின் பாடலை நினைவூட்டுகின்றது. சுந்தரமாவது நீறு என்றும் கவினைத் தருவது நீறு என்றும் காண இனியது என்றும் திருநீறு அழகினைத் தருகின்றது என்று சம்பந்தர் இந்த திருநீற்றுப் பதிகத்தில் கூறுகின்றார். கொல்லை=முல்லை நிலம்; காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலம் என்று கூறுவார்கள். காட்டினை குறிப்பிடும் வண்ணம் காட்டில் வாழும் மான்களும், நிலத்தை உணர்த்தும் வண்ணம் சோலைகளில் வாழும் மயில்களும் குயில்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. தேன் என்பது இங்கே தேனை விருப்பத்துடன் அருந்தும் வண்டினைக் குறிப்பிடுகின்றது. ஏறும் என்ற சொல், வாகனம் ஏறுதல், உயர்தல், எண்ணிக்கையில் அதிகரித்தல், மிகுதல் என்று பல பொருளைத் தரும் சொல்லாகும்.     

பொழிப்புரை:

கூர்மையான நுனியை உடைய வேற்படை போன்று உருவம் கொண்டுள்ள கண்களை உடைய உமையம்மையின் ஒளி பொருந்திய கருமை நிறத்து உடலினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ள இறைவன், எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான்; அவன் தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ள திருநீறு அவனது திருமேனிக்கு மேலும் அழகினை சேர்க்கின்றது; அவன் பாம்புகளைத் தனது உடலின் பல்வேறு இடங்களில் ஆபரணமாகப் பூண்டுள்ளான். இத்தகைய இறைவன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயில்களும் குயில்களும் வாழும் சோலைகளையும், தேனை விரும்பி உட்கொள்ளும் வண்டுகள் சூழும் மா மரங்களையும் கொண்டு நீர்வளம் மற்றும் நிலவளம் மிகுதியாக பொருந்தி விளங்கும் தலம் திருமுல்லைவாயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com