149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 7

நீராடும் பெருமான்
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 7

பாடல் 7:

  நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன்
  அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி அரனூர்
  மஞ்சாரும் மாட மனை தோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்
  செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

நீடு=நீண்ட காலமாக இடைவிடாமல்; மூடு வினை=பிணைந்துள்ள வினைகள்; தேய=அழிய;  அஞ்சாடு சென்னி=பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பஞ்சகவ்யம்  என்று அழைப்பார்கள்) நீராடும் சென்னி; அனலாடு=ஊழித்தீயினில் நடமாடுபவன்; மஞ்சாரு=மேகங்கள் பொருந்தும் வண்ணம் உயர்ந்த மாடங்கள்; வைகி=நெருங்கி; அனலாடு மேனி என்பதால் நெருப்பினில் நின்று நடமாடுபவன் என்று பொருள் கொள்வதே பொருத்தம்; அரவாடு கையன் அனலாடு மேனி என்ற தொடரினை அரவாடு மேனி அனலாடு கையன் என்று மாற்றி அமைத்துக் கொண்டு, பாம்பினைத் தனது திருமேனி எங்கும் உடையவன் என்றும், கையில் அனலேந்தி நடமாடுபவன் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பிச்சை இடுவதற்கு செஞ்சாலி என்று உயர்ந்த நெல்லினை பயன்படுத்தினர்  என்று தலத்து மாந்தர்களின் உயர்ந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
   
பொழிப்புரை:

இடைவிடாது நீண்ட காலமாக தங்களது உள்ளத்தில் தன்னை (பெருமானை) நினைத்து வழிபடும் அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகளை தேய்த்து அழிக்கும் ஆற்றல் படைத்த பெருமான், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவன் ஆவான்; பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பால், தயிர், நெய், கோமியம் சாணம்) மிகுந்த விருப்பத்துடன் நீராடும் பெருமான், கைகளில் பாம்பினை அணிந்தவனாக ஊழித்தீயினில் நின்று நடமாடுகின்றான். இத்தகைய பண்புகளைக் கொண்டுள்ள அரன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். மேகங்கள் தங்கும் வண்ணம் உயர்ந்த மாடங்களை உடைய திருமுல்லைவாயில் தலத்தினில் உள்ள இல்லங்களுக்கு பிச்சை கேட்டு எவர் சென்றாலும், அவர்களுக்கு செஞ்சாலி எனப்படும் உயர்ந்த வகை செந்நெல் சோற்றினை அளித்து மகிழும் உயர்ந்த கருணை உள்ளம் கொண்டவர்கள்  வாழும் தலம் திருமுல்லைவாயிலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com