149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 8

இராவணனின் தலைகள்
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 8

பாடல் 8:

    வரை வந்தெடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய
    உரை வந்த பொன்னின் உரு வந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனூர்
    வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
    திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

வரை=மலை, கயிலை மலை; வலி=வலிமையான; உரை வந்த=உரைத்துத் தரமாக உள்ளது என்று கண்டறியப்பட்ட; தேறல்=தேன்; சென்னைக்கு அருகே உள்ள வடமுல்லைவாயில் தலத்திற்கு வேறானது என்பதை உணர்த்தும் வண்ணம், காவிரி நதியின் வடகரையில் உள்ள தலம் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம்.

பொழிப்புரை:

தான் சென்று கொண்டிருந்த புட்பக விமானத்திலிருந்து கீழே இறங்கி கயிலை மலையின் அருகே வந்து அந்த மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த, வலிமை வாய்ந்த வாளினை உடைய அரக்கன் இராவணனின் தலைகள் பத்தும் மலையின் கீழே அகப்பட்டு நொறுங்குமாறு தனது கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றியவன் சிவபெருமான்;  உரைத்து தரமாக உள்ளது என்று கண்டறியப்பட்ட பொன்னின் நிறத்தில் திருமேனியை உடையவனும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் தலம் திருமுல்லைவாயிலாகும். மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் உள்ளதும் காவிரி நதியின் நீரலைகளால் தனது செழித்து வளர்ந்த மரங்களில் தேனடைகள் ஆடும் சோலைகள் உடையதும் ஆகிய தலம் திருமுல்லைவாயில்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com