149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 10

மத யானைத்
149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 10


பாடல் 10:

    பனைமல்கு திண் கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே
    நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர்
    வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கு நெரியச்
    சினை மல்கு புன்னை திகழ் வாச நாறு திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

பனைமல்கு=பனை மரத்தின் அடிப்பாகம் போன்று உருண்டு திரண்ட துதிக்கையை உடைய யானை; வகுளம்=மகிழமரம்; முகுளம்=மொட்டுக்கள்; கைதை=தாழை மரங்கள்;

பொழிப்புரை:

பனை மரத்தின் அடிப்பாகத்தைப் போன்று உருண்டு திரண்டு உறுதியான வலிமை உடைய  துதிக்கையினைக் கொண்ட மத யானைத் தன்னை எதிர்த்து வந்த போது, அதனை அடக்கி  அதன் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட பரமன், சிவபெருமான் ஆவார். அடியார்கள் நம்பிக்கை வைக்கும் வண்ணம் உதவி செய்யும் இறைவனின் திருவடிகளை நினையும் பேற்றினை பெறாத சமணர்களும் புத்தர்களும் அழியும் வண்ணம் திருமுல்லைவாயில் தலத்தில் இறைவன் கோயில் கொண்டுள்ளான். இந்த தலத்தை அடுத்துள்ள காடுகளில் அரும்புகளை அளிக்கும் தாழை மரங்களும் மகிழ மரங்களும் உள்ளன; மேலும் புன்னை மரங்கள் வீசும் நறுமணமும் எங்கும் பரவியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com