119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 10

சிவபெருமான் நடனம்
119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 10

பாடல் 10: 

    பாழி உறை வேழ நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா
    ஏழின் இசை யாழின் மொழி ஏழையவள் வாழும் இறை தாழும் இடமாம்
    கீழ் இசை கொள் மேல் உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு
    ஆழிய சில் காழி செய ஏழுலகில் ஊழி வளர காழிநகரே

விளக்கம்:

காழி என்பது இந்த பாடலில் உணர்த்தப்படும் பெயர். இந்த பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ழகரத்தைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துகள் இந்த பாடலின் அனைத்துச் சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். காளிதன் என்ற நாகராஜன் வழிபட்டதால் வந்த பெயர் என்று சிவக்கவிமணியார் தனது பெரிய புராண விளக்கம் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார், பெருமானுடன் நடந்த நடனப் போட்டியில் தோற்ற காளியன்னை பெருமானை பணிந்து வணங்கியதால் சீர்காழி என்ற பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். தாருகனைக் கொன்ற காளியம்மையின் கோபம் தணியாத நிலையில் பெருமான் காளியுடன் நடனப் போட்டியில் பங்கெடுத்து அவளை வென்று அவளது கோபம் தணிந்த பின்னர், பெருமானை காளி வழிபட்டு தனது தவறினை பொறுத்து அருளுமாறு வேண்டிய சரித்திரம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.  

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொண் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகி லூழிவளர் காழிநகரே

காளியம்மையை இறைவன் நடனப் போட்டியில் வென்ற செய்தி பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. பருவரை சுற்றி என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.14.4) அப்பர் பிரான், காளி தேவியை வெல்லும் வண்ணம் நடனம் ஆடிய இறைவனின் பாதங்கள் நாம் சரணடைவதற்கு தகுந்த பாதங்கள் என்று கூறுகின்றார். நெடு வேலை= நெடிய, பரந்த கடல், சூடிய கையர்=தொழுத கையர், நெடிது உயர்ந்த ஆகாயம், நிலவுலகம், கடல், மலைகள், மற்றுமுள்ள ஏழுலகங்கள் அனைத்தும் வருந்துமாறு தாரகன் துன்புறுத்த, அதனால் வருந்திய தேவர்கள் சிவபிரானை அணுகி, தங்களது கைகளைத் தலை மேல் குவித்து அவரைத் தொழுது வேண்டினார்கள்: அதனால் மனம் மகிழ்ந்த சிவபிரான், பார்வதி தேவியின் அம்சமாகிய காளிக்கு வேண்டிய வல்லமை அளித்து தருகனைக் கொல்லுமாறு

பணித்தார்: மிகுந்த வல்லமையுடன் காளி வருவதைக் கண்டு, தனது இறுதிநாள் நெருங்கிவிட்டதை உணர்ந்த தாரகன் தப்பி ஓட முயற்சி செய்த போது, அவனைத் துரத்திக் கொன்ற பின்னும் தனது கோபம் தணியாமல் காளியம்மை இருந்த போது, போட்டி நடனம் ஆடி அவளது கோபத்தைத் தணித்த சிவபெருமானின் திருப்பாதங்கள் நமக்கு ஒப்பற்ற அடைக்கலமாகும் என்பதே இந்த பாடலில் திரண்ட பொழிப்புரை.
    
     நீடுயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு
       ஏழும் எங்கும் நலியச்
    சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதியோதி
        நின்று தொழலும்
    ஓடிய தாரகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத
        கோபம் ஒழிய
    ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம் அவையாம்
         நமக்கொர் சரணே

இந்த நிகழ்ச்சி மச்ச புராணத்தில் காணப்படுவது. இந்த பாடலில் கூறப்படும் தாரகன் வேறு கந்தபுராணத்தில் வரும் சூரபத்மனின் தம்பி தாரகன் வேறு. தாரகன் என்ற அசுரனின் கொடுமை தாளாமல் தேவர்கள் வருந்தி சிவபிரானிடம் முறையிட்ட போது, பார்வதி தேவியின் அம்சமாகிய காளியை, தாரகனைக் கொல்வதற்காக விடுத்த செய்தி காளத்தி தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் (3.110) மூன்றாவது பாடலில் கூறப்பட்டுள்ளது. பல வகையான பழங்களை உண்ட களிப்பில் குரங்குகள் கூட்டமாக மலை அதிரும் வகையில் விளையாடும் காட்சி இங்கே குறிக்கப்பட்டுள்ளது.

    வல்லை வருகாளியை வகுத்து வலியாகி மிகு தாரகனை நீ
    கொல் என விடுத்து அருள் புரிந்த சிவன் மேவு மலை கூறி வினவில்
    பல்பல இருங்கனி பருங்கி மிக உண்டு அவை நெருங்கி இனமாய்க்
    கல் அதிர நின்று கருமந்தி விளையாடு காளத்தி மலையே 

தாரகனைக் கொன்ற காளியம்மையின் கோபம் தணியாத நிலையில், ஆவேச நடனம் ஆடி வந்த காளியை நடனத்தில் வென்ற நிகழ்ச்சி மிகவும் விரிவாக கழுமலம் பதிகத்தின் (1.126) ஐந்தாவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாரகனை வெட்டி வீழ்த்திய காளி ஊழித்தீ பொங்கி வருவது போன்று கோபத்துடன் உலகில் உள்ள உயிர்களை எல்லாம் அழிக்க வந்தவள் போல் ஆவேச நடனம் ஆடி வந்த செய்தியும். உலகத்து துயர்களைக் களையும் பொருட்டு சிவபெருமான் நடனம் ஆடி காளியைத் தோல்வியுறச் செய்து பின்னர் காளியின் கோபத்தைத் தணித்ததும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. சீறார்=சீறி வந்த தாரகன், வீறு=தனித்து இருத்தல், சொக்கத்தே=சொக்கம் என்ற நடனம், செங்கதம்=சிவந்த கோபம், கைக்க=வெறுக்க, ஏயாமே=பொருந்தாதபடி, பேர் யுக்கம்=பெரிய ஊழித் தீ., யுகத்தின் முடிவில் தோன்றும் ஊழித்தீ;

    திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார் வீறார்
             போரார் தாரகன்  அவன் உடல் எதிரே
    புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ
              கான் மீப்புணர் தரும் உயிர்கள் திறம் 
    சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு
              ஏயாமே மாலோகத்  துயர் களைபவனது இடம் 
    கைக்க பேர் யுக்கத்தே கனன்றும் மிண்டு தண்டலைக் காடே ஓடா
               ஊரே சேர்   கழுமல வளநகரே

மணிவாசகரும் தனது திருச்சாழல் பதிகத்தில், காளியுடன் நடம் புரிந்து அன்று சிவபெருமான் காளியை வென்றிராவிட்டால், உலகம் முழுவதும் காளியின் கோபத்திற்கு இரையாக மாறியிருக்கும் என்று குறிப்பிடுவது இங்கே நினைவு கூரத்தக்கது. தண்பணை=நீர் வளம் நிறைந்ததால் குளிர்ந்து காணப்படும் வயல்கள்

    தேன் புக்கு தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்
    தான் புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ
    தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம்
    ஊன் புக்க வேற்காளிக்கு ஊட்டாம் காண் சாழலோ

அப்பர் பிரானும் குரங்காடுதுறையின் மீது அருளிய பதிகத்தின் (5.63) ஒரு பாடலில் தாரகனின் உயிரை உண்ட காளியின் கோபத்தையும் முயலகனின் கோபத்தையும் தணித்த சிவபிரான் என்று குறிப்பிடுகின்றார். மாத்தன்=பொன்னினும் உயர்ந்த மாற்று போன்றவன், மறை ஓத்தன்=மறைகளை ஓதுபவன், போத்தன் தானவன்=வீரத்துடன் வந்த அரக்கன்  முயலகன்,  

    மாத்தன் தான் மறையார் முறையான் மறை
    ஓத்தன் தாரகன் உயிர் உண்ட பெண்
    போத்தன் தானவன் பொங்கு சினம் தணி
    கூத்தன் தான் குரங்காடு துறையனே

தாழும் இடம்=விரும்பி தங்கும் இடம்; சமணர்கள் தங்கும் இடங்களுக்கு பாழி என்று பெயர். வேழம்=யானை போன்று பருத்த உடல் உள்ளவர்கள் என்ற பொருளில் வந்தது. சூழும்=கூட்டமாக: சித்தன்னவாசல் செல்லும் வழியில் உள்ள குன்றுகளில் சமணப் படுக்கைகள் இருப்பதை இன்றும் நாம் காணலாம். ஒரே இடத்தில் கல்லினை குடைந்து தலையினை வைத்துக் கொள்வதற்கு சற்று உயரமாக உள்ள அமைப்பில் படுக்கைகள் போன்று சுமார் பத்து படுக்கைகள் இருப்பதை நாம் காணலாம். இதிலிருந்து கூட்டமாக சமண குருமார்கள் தங்கினார்கள் என்பது நமக்கு புலப்படுகின்றது.  ஏழை=பெண்ணாகிய பார்வதி தேவி; உணரா=உணராத; வளர்=புகழ் பெருக; கீழுலகு=பூமி; மேலுலகு=தேவர்களின் உலகம்; ஆழிய= ஆழ்ந்த, தோற்ற; சில்காழி=சில வரிசைகளை உடைய மேகலை அணி

பொழிப்புரை:

கூட்டமாக பாழியில் தங்குபவர்களும், யானை போன்று பருத்த உடலுடன் திரிபவர்களும் பாழான கொள்கைகள் உடையவர்களும் ஆகிய சமணர்களும், தங்களது உடலினை பாதுகாப்பதில் அதிகமான கவனம் செலுத்தும் புத்தர்களும் பெருமானை உணராதவர்களாக இருந்தனர். அவ்வாறு அவர்களால் உணர முடியாதவனாக திகழ்ந்த பெருமான், ஏழு சுரங்களை உடைய யாழின் இசை போன்று இனிமையான மொழியை உடைய பார்வதி தேவியுடன் தங்கும் இடம் சீர்காழி நகரமாகும். பூமியில் உள்ள பல அரசர்களும் மேலுலகில் வாழும் இந்திரனும் அவனைச் சூழ்ந்துள்ள பல தேவர்களும், காளிதேவியின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு துன்பமின்றி வாழும் பொருட்டு நடனம் புரிந்த சிவபெருமானிடம் நடனப்போட்டியில் தோற்றவளும் வரிசையாக மணிகள் பதிக்கப்பெற்ற மேகலை ஆபரணத்தை அணிந்தவளும் ஆகிய காளியன்னை தனது குற்றம் நீங்கும் வண்ணம் பெருமானை வழிபட்டு அருள் பெற்றமை ஏழுலகிலும் பல ஊழிகளையும் தாண்டி பேசப்படுகின்றது. இத்தகைய பெருமையைப் பெற்றதால் காழி என்ற பெயர் வந்தது.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com