சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 11: 

      நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால்
      மெயச்சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடமாம்
      மச்ச மத நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக்
      கொச்சை முரவச்சர் பணியச் சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே 

  விளக்கம்:

  கொச்சை வயம் என்ற தலத்தின் பெயர் கொச்சை நகர் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. ச் எனப்படும் மெய்யெழுத்து இந்த பாடலின் அனைத்துச் சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். மீனவர் குலத்து பெண்ணின் மீது மையல் கொண்டு, அவளுடன் சேர்ந்த பாவத்தினை போக்கிக் கொள்ளும் பொருட்டு பராசர முனிவர் வழிபட்டதால் கொச்சைவயம் என்ற பெயர் வந்ததாக இந்த பாடலில் கூறப் படுகின்றது.    

  நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்
  மெய்ச்சிரம ணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்
  மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக்
  கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க ணச்சிமிடை கொச்சைநகரே

  நஞ்சு என்ற சொல் நச்சு என்று திரிந்தது. நச்சரவு=நஞ்சு+அரவு; மிலைச்சு=சூடி; அணைச்சு= தாங்கி; மச்சம்=மீன்; மச்சமத=மீனின் நாற்றத்தை; நச்சி=விரும்பும்; மதமச் சிறுமி=வலைஞர் குலத்து பெண் மச்சகந்தி; செய்=விரும்பி புணர்ந்த; தவ=முனிவர் பராசரர்; அச்ச=அச்சம் கொள்ளும் வண்ணம் கடுமையான; விரதம்=தவம்; கொச்சை=கொச்சையான செயல், கீழ்த்தரமான செயல்; முரவு=கதறிய; அச்சர்=அச்சம் தரும் வகையில் செயல்பட்ட பராசர முனிவர்; மிடை=நெருங்கும்

  பொழிப்புரை:

  நஞ்சினை உடைய பாம்பினைக் கச்சாக தனது இடுப்பினில் கட்டி பாம்பினைத் தனது விருப்பம் போன்று அசைத்தவனும், தனது தலையின் உச்சியில் பிறைச் சந்திரனை சூடியவனும், தனது கை ஒன்றினில் பிரமனின் உடலிலிருந்து கிள்ளப் பட்ட தலையை ஏந்தியவனாக, தினமும் உலகத்தவர் இடும் பிச்சையை ஏற்பவனும், பித்தனும் ஆகிய பெருமான் விரும்பி உறைகின்ற இடம் சீர்காழி தலமாகும். மீனின் நாற்றத்தை மிகவும் விரும்பும் மச்சகந்தி என்ற மீனவச் சிறுமி -பால் ஆசை கொண்டு அந்த சிறுமியை புணர்ந்த கொச்சையான செயலுக்கு மிகவும் வருந்தி, மற்றவர்களுக்கு அச்சத்தைத் தரும் வைகையில் கொடிய விரதம் கொண்ட தவத்தினை செய்து, கதறி அழுத, பராசர முனிவர் இறைவனைப் பணிந்து வழிபட்ட தலம் என்பதால் கொச்சைவயம் என்ற பெயர் வந்தது. பிரசார முனிவர் அருள் பெற்ற இந்த தலத்தினை தேவர்கள் நெருங்கி வழிபடுகின்றனர்.     

  பாடல் 12: 

  ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா
  முழுதுடலில் எழு மயிர்கள் தழுவு முனி குழுவினொடு கெழுவு சிவனைத்
  தொழுது உலகில் இழுகு மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்ப்
  பழுதில் இறை எழுதும் மொழி தமிழ்விரகன் வழிமொழி கண்மொழி தகையவே

  விளக்கம்:

  கழுமலம் என்று சொல்லப்படும் தலத்து பெயரின் இரண்டாவது எழுத்து ழு.. ழகரத்தைச் சார்ந்த எழுத்துகள் இந்த பாடலினனைத்துச் சீர்களிலும் இரண்டாது எழுத்தாக வருவதை நாம் உணரலாம். பெருமானைத் தொழுது வணங்கி தனது மலங்கள் நீங்கப்பெற்ற உரோமச முனிவர், சிவஞான உபதேசம் பெற்றமையால் கழுமலம் என்ற பெயர் வந்தது என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். 

  ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா
  முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
  தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
  பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே.

  ஒழுகல்=நல்லொழுக்கத்தில் ஒழுகுதல்; அழி கலி=நல்லொழுக்கத்தில் நிற்றல் மிகவும் அரிதாக உள்ள கலி யுகத்தில்; உழி உலகு=உலகில் திரியும், உலகினிடை உலவும் பழி=பாவம்; நினையா=நினைந்து வருந்தும்; கெழுவு=தங்கிய, உறையும்; இழுகும்=வழுக்கும், நல்லொழுக்கத்திலிருந்து நழுவச் செய்யும்; குழு=சீடர்கள்; எழுதாக் கிளவி என்று வடமொழி வேதங்களை கூறுவார்கள். தேவாரப் பாடல்களும் வேதங்களுக்கு இணையாக, வேதங்கள் அளிக்கும் பலன்களை தரவல்லது என்பதை உணர்த்தும் வகையில், அதே சமயத்தில் மக்கள் கற்றுக் கொள்ளும் விதத்தில் மாறுபட்டவை என்பதை உணர்த்தும் வகையில், எழுதும் மொழி என்று தேவாரப் பாடல்களை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.      ; 

  பொழிப்புரை:

  நல்லொழுக்கத்தைப் பற்றி ஒழுகுவது மிகவும் அரிதாக மாறிவிட்ட கலி யுகத்தில், தருமம் நாளுக்கு நாள் அழியும் கலி யுகத்தில், மனிதர்களுக்கு பழி பாவங்கள் பெருகும் சூழ்நிலை நிலவுவதை நினைத்து மிகவும் வருந்தியவராக, தனது உடல் முழுவதும் உரோமங்கள் கொண்ட உரோமச முனிவர் தனது சீடர்களுடன் தங்கி சிவபெருமானைத் தொழுது பயன் அடைந்த தலம் சீர்காழி ஆகும். உலகப் பொருட்களின் மீது கொண்டுள்ள இச்சையால் நல்ல ஒழுக்கத்திலிருந்து வழுக்கி கீழ்மை நிலைக்கு அழைத்துச் செல்லும் மலங்களிலிலிருந்து விடுதலை பெற உதவியாக இருப்பதும், குற்றமற்ற சொற்களை உடையதும், எழுதும் வேதம் என்று அழைக்கப்படும் பாடல்களை கொண்டதும் ஆகிய தேவாரப் பதிகங்களை அளிக்கும் வல்லமை வாய்ந்த ஞானசம்பந்தன் அருளிய வழிமொழிப் பாடல்கள் கொண்டது இந்த பதிகம், இதனை ஓதுவார்க்கு பயன் அளிக்க வல்லது.  

  முடிவுரை:

  சீர்காழி தலத்தின் பன்னிரு பெயர்கள் வந்த காரணத்தை உணர்த்தி, பண்டைய காலம் தொட்டு கலிகாலம் வரை பலரும் பயனடைந்த விவரங்களை எடுத்து சொல்லி, சீர்காழி தலத்தின் பெருமையை நமக்கு உணர்த்தும் இந்த பதிகத்தினை பல முறை படித்து, பொருளினை நன்கு உணர்ந்து புரிந்து கொண்டு, இந்த பதிகத்தினை தகுந்த பண்ணுடன் ஓதி (சாதாரிப் பண்) நாம் பயன் அடைவோமாக. மேலும் பலரும் பல வகையிலும் பயனடைந்த சீர்காழிப் பெருமானை நாமும் நேரில் சென்று கண்டு தொழுது வணங்கிப் பணிவோமாக.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai