சுடச்சுட

  
  தேவாரம்

   

  முன்னுரை:

  நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் ஏகபாதம் என்று அழைக்கப்படும் இந்த பதிகம். மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலைமாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஆகியவற்றை சிந்தித்த நாம் இப்போது ஏகபாத திருப்பதிகத்தை சிந்திப்போம்.

  இந்த பதிகமும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள் போன்று பன்னிரண்டு பாடல்களை உடைய பதிகமாகும். ஒவ்வொரு பாடலிலும் சீர்காழியின் வேறுவேறு பெயர்கள் உணர்த்தப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நான்கு அடிகளும் ஒரே சொற்றொடரைக் கொண்டிருப்பதை நாம் காணலாம். ஓரடியே பொருள் வேறுபட நான்கு முறை மடித்து வந்து பாடலாக அமைந்தமையால்  ஏகபாதம் என்று பெயர் வந்தது. ஏகம்=ஒன்று; பாதம்=அடி. இந்த பாடலையும் சித்திரக் கவியின் ஒரு வகையாக கருதுவார்கள். சொற்களை வேறு வேறு முறையில் பிரித்து பொருள் கொள்ள வேண்டுமென்பதால் இதனையும் மிறைக் கவி என்று அழைப்பார்கள். மிறை என்றால் வருத்தச் செய்வது என்று பொருள். மூளையை வருத்தி, கசக்கிப் பிழிந்து பொருள் காண வேண்டும் என்பது இதனால் உணர்த்தப் படுகின்றது.. திருஞான சம்பந்தப் பெருமானே மீண்டும் எழுந்தருளி பொருள் உரைத்தால் அல்லது, இந்த பாடலின் பொருள் இன்னது என்று திட்டவட்டமாக கூற முடியாது என்று சொல்லுவார்கள். எனினும் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்காழி கண்ணுடைய வள்ளலார் என்பவர், திருஞான சம்பந்தரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர், இந்த பாடலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒழிவில் ஒடுக்கம் என்ற சித்தாந்த நூல் மிகவும் பிரபலமானது. இந்த ஒழிவில் ஒடுக்கம் என்ற நூலுக்கு திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் உரை கண்டுள்ளார். இராமலிங்க சுவாமிகள் மற்றும் பகவான் ரமணர் ஆகியோர் இந்த நூலை மிகவும் சிறந்த தத்துவ நூலாக கருதினார்கள். இவர் இந்த பதிகத்திற்கு எழுதிய உரையே பல தேவாரப் பதிப்புகளிலும் காணப் படுகின்றன. இவரது உரையினையே ஆதாரமாகக் கொண்டு, சிவக்கவிமணியார் தனது பெரிய புராண விளக்கம் நூலில், இந்த பாடலுக்கு குறிப்பு அளித்துள்ளார். அந்த குறிப்பின் வழியே இந்த பாடலுக்கு இங்கே விளக்கமும் பொழிப்புரையும் அளிக்கப் பட்டுள்ளது.. மற்ற பதிகங்களுக்கு மாறுபட்ட முறையில் அமைந்துள்ள பதிகம் எனினும் இந்த பதிகத்தின் இறுதி நான்கு பாடல்களில், இராவணின் கயிலை சம்பவம், அண்ணாமலை நிகழ்ச்சி, சமணர்கள் பற்றிய குறிப்பு மற்றும் பதிகம் ஓதுவதால் விளையும் பயன் முதலியன காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அமைப்பு திருஞான சம்பந்தரின் வியத்தகு புலமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. 

  பாடல் 1:

      பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்
      பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்
      பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்
      பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

  விளக்கம்:

  பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

  பிரமம் புரத்துறை பெம்மான் எம்மான் 
  பிரமபுரத்து உறை பெம் மான் எம் ஆன்
  பிரமம் புரத்து உறை பெம் ஆன் எம்மான்
  பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

  முதல் அடி; பிரமம்=ஞானமே உருவமாக இருக்கும் பராசக்தி; புரத்து உறை=பரிபூரணமான ஞானத்தை வியந்து நிற்கும்; பெருமைக்குரிய மகன் என்ற பொருளை உணர்த்தும் பெருமகன் என்று சொல் பெம்மான் என்று திரிந்ததாக கூறுவார்கள்; பெருமானின் பல பெருமைகளில், முற்றும் உணர்ந்தவனாக இருப்பதும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பதுமன்றி உயிர்களுடன் கலந்து அவைகளின் நடுவே இருந்து இயக்கும் தன்மையும் மிகவும் முக்கியமானவை அல்லவா. இந்த இரண்டு தன்மைகளும் இந்த அடியில் உணர்த்தப் படுகின்றன. எம்மான்=எமது தலைவன். இரண்டாவது அடி; பிரமபுரம்=மேலே உள்ள மேலுலகம்; உறை=இருந்த தண்ணீர், கங்கை நதி; பெம்=விருப்பம்; மான்=மான் போன்ற சாயலை உடைய கங்கை நங்கை; எம்=எமது; ஆன்=ஆன்மா; மூன்றாவது அடி: பிரமம்=பிரமத்துவம்; புரம்=சரீரம்; உறை=எண்ணுதல்; பெம்=விருப்பம், ஆசை; ஆன்=அமையாது இருத்தல்; எம்மான்=என்னைப் போன்று ஒத்திருப்பவன்; நான்காவது அடி: வெளிப்படையான பொருள். பிரமபுரம் என்று அழைக்கப் படும் பெருமைக்குரிய சீர்காழி தலத்தில் உறையும் பெருமான் எனது தலைவன் ஆவான்.

  பிரமரூபத்தில் உள்ளதாக எண்ணப்படும் என்னை முக்தி நிலையில் அமர்த்தாமல் என்னுடன் ஒத்து என்னைப் போன்று இருப்பவன் என்று இந்த பாடலின் மூன்றாவது  அடிக்கு விளக்கம் பெரியோர்கள் கூறுகின்றனர். இந்த கருத்து சற்று ஆராயப் பட வேண்டியது. பெருமான் தன்னை பிறப்பிறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்காமல், தன்னை மீண்டும் பிறக்க வைத்ததற்கு தான் என்ன குற்றம் செய்தேன் என்று சம்பந்தர் துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் கேள்வி கேட்பது நமது நினைவுக்கு வருகின்றது. துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.98) ஒரு பாடலில் சம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் வினவுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் கேட்கின்றார். இந்த செய்தியைத் தான் சம்பந்தர் முக்தி நெறி அமையாமல் செய்தது ஏன் என்று கேள்வி கேட்கும் முகமாக துறக்குமாறு சொலப்படாய் என்று இந்த பாடலின் முதல் பகுதியாக குறிப்பிடுகின்றார் போலும். 

      துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
      மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்
      பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு
      இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

  அடுத்து இந்த தொடரின் இரண்டாவது பகுதியை நாம் இங்கே காண்போம். முற்பிறவியில் தவறேதும் செய்யாதவரை ஏன் மீண்டும் பிறப்பில் ஆழ்த்தினார் என்பதற்கு, சேக்கிழார் திருஞான சம்பந்தரின் புராணத்தில் முதல் பாடல் வாயிலாக நமக்கு விடையளிக்கின்றார். வேதநெறி தழைத்து ஓங்கவும் சைவத்துறை சிறப்புடன் விளங்கவும் சிவனடியார்களின் கூட்டம் பெருகவும் ஞானசம்பந்தரின் திருவவதாரம் தானே காரணமாக இருந்தது. ஞான சம்பந்தரை ஒரு கருவியாக கொண்டு, அமணர்கள் மற்றும் புத்தர்களின் கொட்டத்தை அடக்கி, தமிழகத்தில் முன்பு போன்று சைவநெறி சிறந்து விளங்க பெருமான் திருவுள்ளம் கொண்டதால் தானே ஞானசம்பந்தரின் அவதாரம் நிகழ்ந்தது; அம்மையே அப்பா என்று கோபுரத்தை பார்த்து அழுத குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது. மேலும் பெருமானே அவரது உள்ளத்தில் அமர்ந்து தனது கருத்துகளை ஞானசம்பந்தர் வாயிலாக வெளிப்படுத்தினார் அல்லவா. இதனை சம்பந்தரே, இலம்பையங்கோட்டூர் பதிகத்தில் எனதுரை தனதுரையாக என்று உணர்த்துகின்றார் அல்லவா. இந்த செய்தியையே தன்னைப் போன்று ஒத்து இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார் போலும்.           
             
  பொழிப்புரை:

  முற்றும் உணர்ந்தவன் என்ற குணத்தையும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பதும் அன்றி அனைத்து உயிர்களிலும் கலந்து அவற்றின் நடுவே இருந்து அவற்றை இயக்கம் தன்மையையும், மேலும் இது போன்று பல பெருமைகளை உடையவனும் ஆகிய சிவபெருமான், ஞானமே உருவமாக உள்ள பராசக்தியைக் கண்டு, பராசக்தியின் பரிபூரண ஞானத்தை மிகவும் வியந்து பெருமை அடையும் பெருமான் எமது தலைவன் ஆவான். மேல் நிலமாகிய தேவர் உலகத்தில் இருந்த கங்கை நதியை, மான் போன்ற சாயல் உடைய கங்கை நங்கையை மிகுந்த விருப்பத்துடன் தனது சடையில் வைத்துள்ள பெருமான், எமது உயிர் போன்று எங்களுக்கு அருமையான பொருளாகத் திகழ்கின்றான். பிரமத்தின் வடிவமாக பலராலும் கருதபட்ட என்னை நான் விரும்பிய முக்தி நிலையில் ஆழ்த்தாமல் மிகுந்த விருப்பத்துடன் இந்த நிலவுலகில் என்னை பிறப்பித்து என்னுடன் என்னை ஒத்தவனாக ஒன்றி நின்றவன் சிவபெருமான் ஆவான்.  பிரமபுரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய சீர்காழி நகரினில் உறையும் பெருமான் எனது தலைவன் ஆவான்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai