சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 2:

      விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்
      விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்
      விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்
      விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

  விளக்கம்:

  பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

  விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுரம் தரன்
  விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன்
  விண்தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன்
  விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்தரன்

  முதல் அடி; விண்டு=மலை; அலர்=ஒலி: பொழில்=அழகிய சோலைகள் நிறைந்த உலகம்; அணிவு=அகப்படுத்துதல்; ஏண்=பெருமை வாய்ந்த: நுபுரம்=சிலம்பு: நூபுரம் என்ற சொல் நுபுரம் என்று குறுகியுள்ளது. தரன்=அணிந்தவன்; சிவபெருமான் அணிந்துள்ள சிலம்பின் பெருமை இங்கே குறிப்பிடுகின்றது. இரண்டாவது அடி; விண்டு=விஷ்ணு, திருமால்; அலர்= பழிச்சொல்; பொழில்=சோலை மரநிழல்; அணி=பொருந்தி, அணுகி நின்று; அண்ணி என்ற சொல் அணி என்று குறுகியது; வேணு=விரும்பிய; புரத்து=திரிபுரத்து அரக்கர்களின் நகரத்தை எரித்த; அரன்=சிவபெருமான்; திரிபுரத்து அரக்கர்கள் வைதீக முறையில் வாழ்க்கை நடத்தியதால் பெருமான் முதலில் அவர்களுடன் போரிட ஒப்பவில்லை. திருமாலின் போதனையால் திரிபுரத்து அரக்கர்கள் மனம் மாறி வைதீக நெறியை கைவிட்டு சிவனை நிந்தித்தும் வாழ்ந்த நிலையே பெருமான் அவர்களுடன் போருக்கு செல்ல காரணமாக அமைந்தது என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. மூன்றாவது அடி: விண்தலர்=மேல் உலகில் வாழும் தேவர்கள்; பொழில்=கற்பகச் சோலை; அணிவு=சூடிக் கொள்ளும்; ஏணும்=பெருமையாக எண்ணும்;  புரந்தரன் என்ற சொல் புரத்தரன் என்று திரிந்து தேவர் தலைவன் இந்திரனை குறிப்பிடுகின்றது; நான்காவது அடி விண்டு=இதழ்கள் விரிந்து; அலர்=மலர்கின்ற; பொழில்-=சோலைகள் அணி=அழகு செய்யும்; வேணுபுரத்து அரன்=வேணுபுரம் என்ற பெயர் கொண்டுள்ள நகரில் உறையும் சிவபெருமான்.   

  பொழிப்புரை:

  உலகத்தில் உள்ள சிறந்த எட்டு மலைகளை உள்ளடக்கியது போன்று பெரியதாவும் ஆரவாரம் மிகுந்த சோலைகள் சூழ்ந்த உலங்கங்கள் அனைத்தையும் உள்ளே அடக்கியது போன்ற ஒலியினை எழுப்பவதாகவும் அமைந்துள்ள பெருமை வாய்ந்த சிலம்பினைத் தனது காலில் அணிந்தவன் சிவபெருமான். புத்தனாக வந்த திருமால் கூறிய பழிச்சொற்களை (பெருமானை குறித்த) அரசமரத்தின் நிழலில் திருமாலுடன் அமர்ந்து விரும்பி கேட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன் சிவபெருமான். மேல் உலகில் உள்ள தேவர்களால் கற்பக மலர் தூவி வழிபட அந்த மலர்களைத் தனது தலையில் பெருமையுடன் சூட்டிக் கொள்ளும் தேவேந்திரன் தங்கிய தலம் சீர்காழி; இதழ்கள் விரிந்து நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த சோலைகள் அழகு செய்யும் தலமாகிய வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் பெருமான் உறைகின்றார்.      

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai