சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 4:

      விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்
      விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்
      விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்
      விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

  விளக்கம்:

  பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

  விளம் கொளி தி கழ்தரு எங்கு உரு மேவினன்
  விளங்கு ஒளி    தி கழ்தரு எங்கு உருமு ஏவினன்
  விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன்
  விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன்

  முதல் அடி; விளம்=விளாம்பழம்; கொளி=கன்றுக்குட்டியை கவண்கல்லாகக் கொண்டு விளாமரத்தை நோக்கி எறிந்து அழித்த கண்ணனாகிய திருமால்; கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வந்த காலத்தில் கண்ணனை அழிப்பதற்காக வத்சாசுரன் என்ற அரக்கனும் கபிச்தாசுரன் என்ற அரக்கனும் கம்சனால் அனுப்பப்பட்டனர். இருவரும் கண்ணனைக் கொல்வதற்கு தகுந்த தருணம் எதிர்பார்த்து காத்திருந்தனர். வத்சாசுரன் ஒரு கன்றுக்குட்டியாக உருவம் எடுத்து அங்கிருந்த கன்றுகளுடன் கலந்திருக்க, கபிச்தாசுரன் அருகில் இருந்த ஒரு விளாமரத்தில் ஒளிந்து கொண்டான். இதனை அறிந்த கண்ணன், அசுரன் ஒளிந்து கொண்டிருந்த கன்றின் பின்னங்கால்களை தூக்கிப் பிடித்து விளாமரத்தின் மீது எறிந்து மரத்தினை ஒடித்து அதில் மறைந்திருந்த அரக்கனையும் கண்ணன் கொன்றான் என்று பாகவதம் உணர்த்துகின்றது. இந்த செய்தியை கன்றால் விளவு எறிந்தவன் என்று பல திவ்யபிரபந்த பாடல்களும் சில தேவார பாடல்களும் குறிப்பிடுகின்றன. தி=விளங்கிய; தீ என்ற சொல் தி என்று குறுகியதாக பெரியோர்கள் கூறுவார்கள். கழுதரு என்ற சொல் கழ்தரு என்று திரிந்தது. கழுதரு=நின்மல; எங்கு=எந்த இடத்தில்; உரு மேவினன்=தனது உருவத்தில் வைத்துக் கொண்டான், இடது புறம் என்பது என்பது எந்த இடத்தில் என்ற கேள்விக்கு ஏற்ற விடை என்பதால், திருமாலைத் தனது உடலின் இடது புறத்தில் வைத்துக் கொண்ட பெருமான் என்பது இந்த அடியின் பொருள். திருமாலை பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துக் கொண்டதாக பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. 
  .       
  இரண்டாவது அடி; விலங்கு என்ற சொல் விளங்கு என்று திரிந்தது என்பர். விலங்கு= மாறுபாடாக இருந்த தி=தீ; இந்த அடிக்கு மாறுபாடாக விளங்கி முழக்கம் செய்து திருஞான சம்பந்தரின் அடியார்களை தடுத்த புத்தநந்தியின் தலையின் மீது இடி விழச் செய்த பெருமான் என்று பொருள் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சி, பாண்டிய நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு திருஞானசம்பந்தர் சீர்காழி திரும்பிய போது நடந்தது. அந்த நிகழ்ச்சி இந்த பதிகத்த்தை பாடிய பின்னர் நடந்த நிகழ்ச்சி என்பதால், இந்த விளக்கம் ஏற்புடையது அல்ல என்று பலரும் கருதுகின்றனர். கழ்தரு=அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் கீழே விழும்; எங்கு=எங்கும் ஒலிக்கும் வண்ணம்; உருமு=இடி; ஏவினன்= ஏவியவன்; இடியாக இடித்து மின்னலாக மின்னி மழையாக பொழிபவன் பெருமான் என்பதால், இடி இடிப்பதை அவனது செயலாக இந்த அடியில் சம்பந்தர் உணர்த்துகின்றார். ஏங்குதல்=ஒலித்தல்; ஏங்கு என்ற சொல் எங்கு என்று திரிந்தது, 
   
  மூன்றாவது அடி: விள்=நீங்குதல்; அங்கு=அந்த இடத்தில்; ஒளிது=ஒள்ளியது, சிறந்தது சிறந்ததாகிய சிவஞானம்; இகழ் தரு=இகழப்படும், மாயையின் மயக்கத்தில் சிக்கி இகழும் தன்மையில் வாழும் மனிதனாகப் பிறந்த என்னிடமும்; மேவுதல்=கலத்தல்; அம்மையே அப்பா என்று தோணிபுரத்து கோபுரத்தை நோக்கி மூன்று வயது குழந்தை அழுத போதே, அந்த குழந்தைக்கு சிவஞானமும் பாலுடன் குழைத்து கொடுக்க வேண்டும் என்று பெருமான் திருவுள்ளம் கொண்டார். பெருமானின் எண்ணமே தனது செயலாக செயல்படும் அன்னையும். பாலுடன் சிவஞானத்தை குழைத்து கொடுத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். 

  திருக்கோயில் சிகரத்தை பார்த்து, அம்மையே அப்பா என்று அழைத்தவாறு குழந்தை   அழுதது. காலம் கனிந்து வந்தமை கண்டு பெருமான் குழந்தைக்கு அருள் செய்ய திருவுள்ளம் கொண்டவராய், தேவியுடன் தாமும் விடையின் மீது அமர்ந்தவராக குழந்தை இருந்த இடத்திற்கு அருகே வந்தார். அருகே வந்தவர், தேவியை நோக்கி, உனது திருமுலைப்பாலை ஒரு பொற்கிண்ணத்தில் பொழிந்து குழந்தைக்கு ஊட்டுவாய் என்று கூறினார். தேவியும் உடனே, பொற்கிண்ணத்தில் பாலை வைத்துக் கொண்டு, குழந்தையின் அருகே சென்று குழந்தையின் கண்களில் பெருகிய நீரினை துடைத்து, அடிசிலை உண்ணுவாய் என்று கூறினார். எண்ணரிய சிவஞானம் குழைத்து கொடுக்கப்பட்ட பால் என்று சேக்கிழார் கூறுகின்றார். வள்ளம்=கிண்ணம்

      அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருட்கருணை
      எழுகின்ற திருவுள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்
      தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள்
      பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டென்ன    

      எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி
      உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர் நோக்கும்
      கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து
      அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்

  குழந்தைக்கு பிராட்டி ஊட்டிய பாலமுதம் வெறும் பசியினை போக்குவதை மட்டுமாக இல்லாமல், சிவஞானமும் கலந்து குழைத்து ஊட்டப்பட்டது என்று சேக்கிழார் மேற்கண்ட பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அம்மை ஊட்டிய பாலடிசிலை உண்ட குழந்தை, சிவபெருமானின் திருவடிகளை சிந்திக்கும் தன்மையையும் சிவபெருமானே மேலான பரம்பொருள் என்ற கலை ஞானம் மற்றும் பிறவிப்பிணியினை தீர்க்கவல்ல மெய்ஞானம் ஆகியவற்றை உணர்ந்தது என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பாலுடன் சிவஞானமும் கலந்து கொடுக்கப்பட்டாதால், அதற்கு காரணமாக இருந்த பெருமானை தனது குருவாக சம்பந்தர் கருதியது இயற்கை தானே. உலகினுக்கே குருவாக இருக்கும் பெருமானின் திருவருள் பெற்றவுடன் பாடப்பட்ட பதிகம் என்பதால் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகம், அப்பர் பிரானும் சுந்தரரும் பாடிய முதல் பதிகங்களுடன் குருவருள் என்ற தலைப்பின் கீழ் மிகவும் பொருத்தமாக அகத்தியர் தேவாரத் திரட்டில் வைக்கப் பட்டுள்ளது. குருவாக பெருமானை தான் கருதிய செய்தியை சம்பந்தர் இந்த பாடலிலும் சுட்டிக் காட்டுகின்றார். தனது குருவாகிய சிவபெருமான், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி இழிந்த நிலையில் இருந்த தனக்கு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து சிறந்த முக்தி நிலையினை அளித்து தன்னுடன் பெருமான் கலந்தான் என்று சம்பந்தர் கூறுகின்றார். அந்நாள் வரை பெருமான் சம்பந்தருக்கு அருளிய செயல்கள் (சிவஞானம் கலந்த பாலினை ஊட்டியது, பொற்றாளம் கொடுத்தது, முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊது கொம்பு அளித்தது) பெருமானின் திருவருள் தனக்கு இருந்தமையை உணர்ந்த ஞானசம்பந்தர், இந்த பிறவி முடிந்தவுடன் தனக்கு முக்தி நிலை நிச்சயமாக கிடைக்கும் என்பதையும் உணர்ந்தார் போலும். அதனால் தான் முக்தி நிலை கிடைத்து விட்டது போன்று இறந்த காலத்தில் (மேவினன்) என்று கூறுகின்றார் போலும்.  
       
  நான்காவது அடி; இந்த அடிக்கு விளக்கம் கூறிய கண்ணுடைய வள்ளலார், தருமராசனுக்கு அருள் புரிந்த சிவபெருமான் என்று கூறுகின்றார். தேவகுருவாகிய பிரகச்பதிக்கு அருள் புரிந்ததால் வெங்குரு என்ற வந்தது என்பதை நாம் சுரரருலகு நரர்கள் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலிலிருந்து அறிந்தோம். பிரமபுரத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.63.4) சம்பந்தர் தருமராசனுக்கு அருளியதால் வெங்குரு என்ற பெயர் வந்ததாக கூறுகின்றார். இந்த பாடலில், செங்கோல் பிடித்து ஆட்சி நடத்தும் தருமராசனாகிய இயமன், பல உயிர்களுக்கும் அந்தந்த உயிர்கள் ஈட்டிய வினைகளுக்குத் தக்கவாறு தண்டனை அளிப்பது எவ்வாறு என்பதை சீர்காழி நகரம் வந்து தங்கி பெருமானிடம் கற்றுக் கொண்டமையால் வெங்குரு என்ற பெயர் வந்ததாக கூறுகின்றார். தருமம் தவறாமல் இயமன் உயிர்களுக்கு தண்டனை வழங்குகின்றார் என்ற செய்தியை உணர்த்தும் வண்ணம், தில்லைப் பதிகத்தின் பாடல்களில் தருமராசனார் என்று சுந்தரர் இயமனை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. 

  இயமனுக்கு நீதிகளை கற்றுத் தந்த பெருமான் தான் நீதியுடன் நடந்து கொண்டாரா என்ற கேள்வியையும் இந்த பாடலில் சம்பந்தர் எழுப்புகின்றார். தாருகவனத்து மகளிரிடம் பிச்சை ஏற்கச் சென்ற போது, அவர்களைத் தன் மீது மையல் கொள்ளச் செய்தது நியாயமான செயலா என்று கேட்கின்றார். பெருமான் மீது தீராத கொண்ட தாருகவனத்து மகளிர், பெருமானை அடைய முடியாத ஏக்கத்தினால் அவர்களது உடல் இளைக்க, அவரகளது கைகளில் இருந்த வளையல் நழுவி விழுந்தன என்பதை உணர்த்தும் சம்பந்தர், இவ்வாறு வளையல்கள் கழன்று விழுந்ததற்கு பெருமான் என்று குறை கூறுகின்றார். தங்களது கணவர் அல்லாது வேறு ஒரு ஆடவரை மனதினில் நினைத்தாலே கற்பு தவறியதாக பண்டைய நாளில் கருதப் பட்டது. எனவே தான், அவர்களை மயக்கிய பெருமானை, அவர்களது கற்பினை கவர்ந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். ஆநலம்=அவர்களது அழகு, கற்பு என்பது பெண்களுக்கு அழகு தரும் சிறந்த அணிகலனாக கருதப்படுகின்றது.

      சங்கோடு இலங்கத் தோடு பெய்து காதில் ஓர் தாழ் குழையன்
      அங்கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆநலம் வவ்வுதியே
      செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய் தெரிய
      வெங்கோத் தருமன் பேணி ஆண்ட வெங்குரு மேயவனே    
   

  பொழிப்புரை:

  கன்றினைக் கொண்டு விளாமரத்தின் மீது எறிந்து, கன்றிலும் விளாமரத்திலும் மறைந்திருந்த அரக்கர்களை கொன்ற கண்ணனாகிய திருமாலை, நின்மலனாகிய பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற ஒலிகளிலிருந்து மாறுபட்டுத் திகழ்வதும் அனைவர்க்கும் அச்சம் ஊட்டும் வண்ணம் குமுறுவதும் ஆகிய இடியாக ஒலிப்பவன் சிவபெருமான். சிறந்ததாகிய சிவஞானத்தை அளித்து எனக்கு குருவாக விளங்கிய பெருமான், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி மிகவும் இழிந்த நிலையில் இருந்த என்னை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நீக்கி, முக்தி நிலையை எனக்கு அருளி என்னுடன் கலந்தவன் சிவபெருமான். நீதிநெறி வழுவாது உயிர்களுக்கு தண்டனை அளிப்பதால் மிகுந்த சிறப்பினுடன் திகழும் இயமன், வெங்குரு எனப்படும் தலத்தில் பொருந்தி  உறையும் பெருமானை வணங்கி அந்த சிறப்பினை பெற்றான்.

    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai