120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 5

சூடாமணி ஆபரணம்
120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 5

பாடல் 5:

    சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்
    சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்
    சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்
    சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

சுடர் இம் மணி ஆளி கைத்தோணி புரத்து அவன்
சுடர்மணி மாலி கைத்தோள் நிபுரத்தவன்
சுடர்மணி மாளி கைத்தோணி புரத்தவன்
சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன்

முதல் அடி; சூடார் என்ற சொல் சுடர் என்று திரிந்தது. சூடார்=வெம்மை பொருந்திய; இம்=ஈமம் என்பதன் திரிபு, சுடுகாடு என்று பொருள்; ஆளி=ஆள்பவன்; புரத்து அவன்= திரிபுரங்களை எரித்து நாசம் செய்தவன்; கைத்தோணி=வெற்றியின் அடையாளமாக விளங்கும் தும்பைப் பூவை அணிந்தவன்; இரண்டாவது அடி; சுடர்மணி=சுடர் விட்டு விளங்கும் சுடர்மணி; மாலி (ஆன்மாக்களை ஈடேற்றுவதில் பித்தனைப் போன்று பெரும் விருப்பம் கொண்டவன் என்று பொருள்) என்ற சொல் மாளி என்று திரிந்தது; கைத்தோள்= துதிக்கையை உடைய யானை; நிபுரத்தவன்=வடிவம் இல்லாமல் அழித்தவன்; மூன்றாவது அடி: சுடர்=சூரியன்; சூரியன்; நான்காவது அடி: சுடர்மணி=சுடர் விட்டு ஒளிரும் மணிகள் பதிக்கபெற்ற;

பொழிப்புரை:

வெம்மை பொருந்திய சுடுகாட்டினைத் தான் ஆளும் இடமாகக் கொண்டுள்ள பெருமான், திரிபுரத்தவர்களின் மூன்று கோட்டைகளை அழித்து வெற்றிவாகை சூடியவன். எனது தலையின் உச்சியில் உள்ள சூடாமணி ஆபரணம் போன்று சிறப்பாக கருதப் படுபவன் சிவபெருமான். அவன் ஆன்மாக்களை கடையேற்றுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு பித்தனைப் போன்று செயல்படுபவன்; தன்னை எதிர்த்து வந்த யானையை அடக்கி அதன் தோலை உரித்து வடிவத்தை அழித்த போர்க்குணம் உடையவன் பெருமான். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், சுடர் விட்டு ஒளிரும் மணிகள் பதிக்கப்பெற்ற மாளிகைகள் நிறைந்த தோணிபுரத்தில் உறைகின்றான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com