120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 6

சிவஞானிகள்
120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 6


பாடல் 6:    

    பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
    பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
    பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
    பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

பூ சுரர் சேர் பூ தராயவன் பொன் அடி
பூசுரர் சேர் பூ தராய் அவன் பொன் நடி
பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி
பூசுரர் சேர் பூந்தராயவன் பொன்னடி

முதல் அடி; பூ=பூமியில் உள்ளவர்கள்; சுரர்கள்=தேவர்கள்; ஆடி=கண்ணாடி என்ற சொல் அடி என்று குறுகியது; பூ=உந்திக்கமலம்; தராயவன்=தரித்தவன்; பொன்=பொலிவு, விளங்கும்; சேர்=தோன்றும்; இரண்டாவது அடி; பூசுரர்=பூமியில் வாழ்ந்த போதிலும், தங்களது மலங்கள் நீங்கிய தன்மையால் சிறப்புடன் வாழும் தேவர்களாக கருதப்படும் சிவஞானிகள்; சேர்= திரட்சி, கூட்டம்; பூ=பொலிவு; தராய்=பெறப்பட்ட; அவன்=இங்கே கடவுளை குறிக்கும் சொல்லாக கையாளப்பட்டுள்ளது; பொன்=பொன் போன்று வனப்பு மிகுந்த; நடி=நடனம் ஆடுபவன்; மூன்றாவது அடி: பூசு=பூசப்படும் திருநீறு; உரர்=மார்பினை உடையவர்; சேர்பு= அரிந்து, முற்றிலும் நீக்கி; ஊந்தராய்=உந்தித் தள்ளும்; யவன்=யௌவனம் உடைய யுவன் என்ற சொல் யவன் என்று திரிந்தது; அடி=மூலமாக, ஆதாரமாக உள்ள தன்மை; நான்காவது அடி; நிலவுலகில் வாழும் அந்தணர்கள் ஒழுக்கமாக வாழும் நெறியை பின்பற்றுவதால், அவர்களை சிறப்பாக மதித்து நிலவுலகில் வாழும் தேவர்கள் என்று சொல்வது வழக்கம். சேர்=திரண்டு சென்று சேர்ந்து; பூந்தராயவன்=பூந்தராய் நகரத்தில் உறையும் பெருமான்;    

பொழிப்புரை:

பூமியில் வாழும் மனிதர்களையும், மேலுலகில் வாழும் தேவர்களையும் தோற்றுவிக்கும் பிரமனையும், பிரமனைத் தனது உந்திக்கமலத்தில் தோற்றுவித்த திருமாலையும் தனது பிரதிபிம்பமாக தோன்றும் வண்ணம் கண்ணாடியாக நிற்பவன் சிவபெருமான்; மலங்கள் நீங்கிய தன்மையால் சிறப்பாக கருதப்படும் சிவஞானிகள் கூட்டம், மிகுந்த மகிழ்ச்சியுடன் பொலிவுடன் இருக்கும் வண்ணம், பொன் போன்று வனப்பு மிகுந்த சிறந்த நடனத்தை ஆடுபவன் சிவபெருமான்; தங்களது மார்பினில் திருநீற்றைப் பூசியவர்களும் தங்களைப் பிணைத்திருந்த பாவம் புண்ணியம் என்ற கட்டினை அறுத்து எறிந்தவர்களும் ஆகிய சிவஞானிகள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பூலோக வாழ்க்கையை உதறித் தள்ளும் தனமையினை அடைவதற்கு ஆதாரமாக விளங்குபவன், எனும் இளமையுடன் விளங்கும் சிவபெருமான் ஆவார்; குற்றமில்லாத மறையவர்கள் திரண்டு சென்று சேர்ந்து வழிபடும் பூந்தராய் தலத்து இறைவனின் பொன்னடிகள் என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று அடியேன் விரும்புகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com