சுடச்சுட

  


  பாடல் 7:

      செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்
      செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்
      செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்
      செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

  விளக்கம்:

  பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

  செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்
  செர் உக்கு வாய்ப் புடையான் சிர் அபுரம் என்னில்
  செருக்கு வாய்ப் புடையான் சிரம் புரம் என்னில்
  செருக்கு ஆயப்பு உள் தையான் சிரபுரம் என்னில் 

  முதல் அடி; செருக்கு=மலங்களால் ஏற்படும் மயக்கம்; வாய்ப்பு=மேலீடு, வலிமை உடையதாக விளங்கி தனது விருப்பம் போன்று உயிர்களை ஆட்டுவிக்கும் தன்மை; உடைத்தல்=கேடு செய்தல்; உடையான்=உடைத்து அழிக்காமல், கேடு செய்யாமல் இருப்பவன்; சிரபுரம்=மேன்மை உடைய இருப்பிடம்; என்னில்=எனது அறிவினில்; பெருமானிடமிருந்து நேரிடையாக சிவஞானம் பெற்றமையால், பசுபோதம் நீங்கி பதிபோதத்துடன் தான் விளங்கிய நிலையை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களது முனைப்பினால் தான் மலங்களின் ஆளுமையிலிருந்து விடுபட வேண்டுமே தவிர, அதற்காக இறைவனது உதவியை பெறமுடியாது என்ற கருத்து இங்கே குரிப்பிடப்படுகின்றது. மெய்ப்பொருளின் தன்மையை அறிந்து கொண்டு, மெய்ப்பொருளை தியானித்தால் மட்டுமே இறைவனது அருள் நமக்கு உதவி புரியும் என்பதை நாம் மறக்கலாகாது. 
       
  இரண்டாவது அடி; சேர் என்ற சொல் செர் என்றும் சீர் என்ற சொல் சிர் என்றும் இங்கே குறைந்துள்ளன. சேர்=ஆகாயம், காற்று, நெருப்பு மற்றும் நீர் ஆகிய நான்கு பூதங்களின் கலவையாக விளங்கும் ஐந்தாவது பூதமாகிய; உக்கு=அந்த பூமி; புடையான்=இருப்பிடமாகக் கொண்டவன்; சீர்=சிறப்பு வாய்ந்த; அபுரம்=உயிரற்ற உடல்; என்னில்=மேலே வைத்துக் கொள்ளப்பட்டது என்றவாறு; பூமிக்கு இருப்பிடமாக தனது வாயினை அளித்து பூமியை மீட்ட (பன்றி வடிவம் எடுத்து பூமியினை மீட்ட திருமால் தனது பற்களின் இடையே வைத்துக் கொண்டு வந்த செய்கை குறிப்பிடப் படுகின்றது) சிறப்பினை உடைய திருமாலும் ஒரு நாள் இறந்துபட அவனது உயிரற்ற உடலினைத் தனது தோள் மேல் தாங்கிய பெருமான் என்று பெருமானின் சிறப்பு விளக்கப்படுகின்றது. மூன்றாவது அடி: செருக்கு= கர்வம்; வாய்=வாய் உள்ளிட்ட ஐந்து பொறிகளையும் குறிக்கின்றது; புடையான்=இடத்தான்; சிரம்=மேல்; புரம்=உடல், சரீரம்; இம்மையில் தங்களது பொறிகளுக்கு இன்பம் அளிக்கும் செயல்களைப் புரிந்த உயிர், மறுமையிலும் அந்த இன்பம் தொடர வேண்டும் என்று விரும்புவது இயற்கை தானே. உயிர்கள் செய்த நற்செயல்களுக்கு தக்கவாறு, அந்த இன்பத்தினை சொர்கத்தில் அழிப்பவனும் சிவபெருமான் தான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. நான்காவது அடி: சிரபுரம் என்று இந்த தலத்தின் பெயரைச் சொன்னால் விளையும் பயனை இந்த அடியில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். செரு=யுத்தம்; இந்திரியங்கள் உயிருடன் செய்யும் யுத்தம் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆயப்பு=இளைத்து; உள் தையான்=இந்திரியங்கள் எய்யும் பாணங்களால் தைக்கப்பட்டு காயம் அடையாமல் இருத்தல்; என்னில்=என்று சொன்னால் 

  பொழிப்புரை:

  மலங்களால் ஏற்படும் மயக்கத்தில் ஆழ்ந்து தன்னை நினைக்காத மனிதர்களின் மலங்களின் தன்மையை கெடுக்காமல் இருக்கும் சிவபெருமான், தனது மேலான இருப்பிடமாக அடியேனின் ஞான அறிவினைக் கொண்டுள்ளான். மற்ற நான்கு பூதங்களின் கலவையாக விளங்கும் பூமிக்கு இருப்பிடமாகத் தனது வாயினைக் கொடுத்து இரண்யாக்கனால் ஒளித்து  வைக்கப் பட்ட பூமியினை மீட்ட சிறப்பினை உடைய திருமாலின் உயிரற்ற உடலைத் தனது தோள் மேல் தாங்கிய பெருமையை உடையவன் சிவபெருமான். ஆன்மாவின் ஒரு குற்றமாகிய கர்வத்தினால், வாய் முதலான ஐந்து பொறிகளுக்கும் இன்பம் அளிக்கும் செயல்களைப் புரியும் உயிர்கள், உடலை விட்டு பிரிந்த பின்னரும் அந்த இன்பத்தினை சூக்கும உடலுக்கு அளிக்கும் வண்ணம், அந்தந்த உயிர்கள் ஈட்டிய நற்செயல்களுக்கு ஏற்ப சொர்க்க போகம் அனுபவிக்க ஏற்பாடு செய்பவன் சிவபெருமானே. இத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் வீற்றிருக்கும் தலத்தின் பெயரினை சிரபுரம் என்று ஒரு முறை சொல்பவர்கள், தங்களுடன் தங்களது பொறிகள் தொடுக்கும் சண்டையில், பொறிகளால் எய்யப்படும் அம்புகளால் காயம் அடைய மாட்டார்கள்.  

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai