120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 8

இலக்குமி தேவியை
120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 8

பாடல் 8:

    பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
    பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
    பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
    பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
    

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன்
பொன் அடி மாதவர் சேர் புறவம் தவன்
பொன் அடி மாது அவர் சேர்புற அவத்தவன்
பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன்

முதல் அடி; பொன்=பொன் போன்று பொலிவினை உடைய; நடி=கூத்தினை உடைய; மாது= காளி; அவர்=பூதகணங்கள்; சேர்=சென்று அடைந்து தங்கும்; புறவம்=ஊருக்கு புறத்தே உள்ளே சுடுகாடு; புறவத்தவன்=சுடுகாட்டினை இருப்பிடமாக உடையவன்; இரண்டாவது அடி; பொன்= தூய்மையான; அடி=வழி, முறையில்; மாதவர்=சிறந்த தவத்தினை புரியும் முனிவர்கள்; சேர்=திரண்டு சேரும்; புறவம்=முல்லை நிலம்; தவன்=தவத்தினை புரியும் சிவபெருமான்; தவம் புரியும் முனிவர்களிலும் சிறந்தவனாக சிவபெருமான் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தவம் செய்யும் அனைவரும் சடையினை உடையவர்களாக இருந்தாலும் சிவபெருமான் ஒருவனைத் தானே சடையான் என்று தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. 

மூன்றாவது அடி: பொன் என்ற சொல் செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் இலக்குமி தேவியை குறிக்கும். அடி=அழகிய ஆபரணங்கள்; மாது அவர்=தாருக வனத்து முனிவர்களின் மனைவிகள்; சேர்பு உறு=வந்து அணைந்த, பிச்சை இடுவதற்காக பெருமானை நாடிச் சென்ற; அவம்=பாவம்' அவத்தவன்=பாவச் செயல் புரிந்தவன்; அந்நாள் வரை கற்பு குலையாமல் இருந்த தாருகவனத்து இல்லத்தரசிகள், பிச்சை ஏற்று வந்த பெருமானின் அழகினில் மயங்கி தாங்கள் செய்வது இன்னதென்று உணராமல், பெருமானின் பின்னே பின் தொடர்ந்ததை, கற்பு குலைந்த செயலாக புராணங்கள் கருதுகின்றன. இவ்வாறு அவர்கள் மாறுவதற்கு பெருமானின் அழகு காராணமாக இருந்தமையால் அவர்களது கற்பு நிலை குலைவதற்கு காரணமாக இருந்தவன் பெருமான் என்று குறிப்பிட்டு, அத்தகைய பாவம் புரிந்தவன் பெருமான் என்று தாருகவனத்து முனிவர்கள் கருதியதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தங்களது மனைவியர்களின் நிலையை மாற்றிய பெருமானை, தங்களது பகைவனாக நினைத்து அவனை அழிப்பதற்கு பலவாறும் முயற்சி செய்தமையும், இறுதியில் பெருமானின் பெருமைகளை உணர்ந்து அவனது அடியார்களாக தாருகவனத்து முனிவர்கள் மாறியதும் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள். தாருகவனத்து முனிவர்களின் நிலையினை மாற்றி அவர்களையும் தனது அடியார்களாக மாற்றுவதற்கு பெருமான் செய்த திருவிளையாடலின் ஓர் அங்கம் தான், பிச்சைப் பெருமானாக சென்று, தனது அழகினால் முனிவர்களின் மனைவிகள் மயங்கும் வண்ணம் நடந்தது. இந்த செயல் முனிவர்களின் கண்ணோட்டத்தில் பாவாமாக கருதப் பட்டதால், பாவம் புரிந்தவன் என்று இங்கே கூறுகின்றார்.          

நான்காவது அடி: பொன்னடி=பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள்; அடி=பாதம்; மாதவர்= கன்னியர்; சேர்=சேர்ந்து ஒரு இனமாக இருத்தல்; புறவத்தவன்=புறவம் என்று அழைக்கப்படும் பதியில் உறைபவன். இந்த அடியில் உள்ள சொற்களை சற்று மாற்றி அமைத்து, மாதவர் சேர் பொன்னடி புறவத்தவன் என்று கூட்டி, சிறந்த தவ முனிவர்கள் சேரும் பொன் போன்று பொலியும் திருவடிகளை உடைய பெருமான், புறவம் திருத்தலத்தில் உறைபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.    

பொழிப்புரை:

பொன் போன்று பொலிவினை உடைய கூத்தினை ஆடும் மாதாகிய காளிதேவியும், பூத கணங்களும் சென்று அடைந்து தாங்கும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்; தூய்மையான முறையில் சிறந்த தவம் செய்யும் முனிவர்கள் திரண்டு சேரும் முல்லை நிலத்தில் தானும் தவம் செய்பவன் சிவபெருமான்; அழகிய ஆபரணங்கள் அணிந்து இலக்குமி தேவியைப் போன்று அழகுடன் விளங்கிய  தாருகவனத்து இல்லத்தரசிகள், தனது அழகில் மயங்கி தாங்கள் (தாருகவனத்துப் பெண்கள்) செய்வது இன்னதென்று அறியாமல் தன்னைப் பின்தொடர்ந்து செல்லும் வண்ணம், அவர்களின் முன்னே பிச்சைப் பெருமானாக தோன்றி, அவர்களது கற்பு நிலை குலையச் செய்தவன் பெருமான். பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்த பாதங்களை உடைய மகளிர், கூட்டமாக சேர்ந்து வணங்கும் இறைவன், புறவம் தலத்தில் உறைபவன் ஆவான்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com