சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 9:

      தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான் 
      தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்
      தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்
      தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

  விளக்கம்:

  பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

  தசமுகன் எரி தர ஊன்று சண் பையான்
  த சமுகம் நெரி தர ஊன் துசு அண்பையான்
  தசம் உக நெரி தரம் ஊன் து சண் பையான்
  தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

  முதல் அடி; தசமுகன்=உயிர்கள் பால் கருணையை உடையவன்; எரி=நெருப்பு, இங்கே நெருப்பு போன்று கொடிய நஞ்சம் என்று பொருள் கொள்ளவேண்டும். தர=வீசும்; ஊன்று= அழுத்தி; சண்=வேகமாக; பை=படம். படம் உடைய பாம்பு; பையான்=படம் உடைய பாம்பினை உடையவன்; இரண்டாவது அடி; த=அது, இங்கே சிவஞானிகளை குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும்;; சமூகம்=கூட்டம்; நேரி என்ற சொல் நெரி என்றும், தரக்கு என்ற சொல் தர என்றும் தூசு என்ற சொல் துசு என்றும் குறுக பாயான் என்ற சொல் பையான் என்று மாறியது. தரக்கு=புலி; நேரி=நேரானவன்; ஊன்=மாமிசம்; அண்பையான்= விரித்து உடுத்தான்; மூன்றாவது அடி: தசம்=தைசதம் என்ற சொல்லின் திரிபு; அகங்காரம்: உக=கெட; நேரி என்ற சொல் இங்கும் நெரி என்று குறுகியது; தரம்=மலை; ஊன்=உள்ளம்; து=சிறப்பான ஞானம் உடையவன்; சண்=சட்சமயம், ஆறு விதமான சமயங்கள்; பையான்= பயனாக உள்ளவன்; நான்காவது: தசமுகன்=பத்து தலைகளை உடைய அரக்கன் இராவணன்; நெரிதர=தோள்களும் தலைகளும் முறியும் வண்ணம்: ஊன்று=தனது கால் பெருவிரலை ஊன்றிய; சண்பையான்=சண்பை எனப்படும் தலத்தில் உறைபவன்.

  பொழிப்புரை:

  உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான், படம் எடுத்து ஆடுவதும் நெருப்பு போன்று கொடுமையான நஞ்சினை வீசும் தன்மையை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக இறுகக் கட்டியுள்ளான். சிவஞானிகளின் கூட்டத்திற்கு நேராக மெய்ப் பொருளாக தோன்றும் இறைவன், தாருகவனத்து முனிவர்களால் தன்னை நோக்கி அனுப்பப்பட்ட புலியினை கொன்று, அதன் ஊனினை நீக்கி அதன் தோலை ஆடையாக விரித்துத் தனது இடுப்பினில் அணிந்துள்ளான். அடியேனின் அகங்காரத்தை நீக்கும் வண்ணம் எனது உள்ளத்தில் எதிர்ப்பட்டு அறிவினில் பொருந்தி இருக்கும் பெருமான், ஆறு வைதீக சமயங்களை பின்பற்றுவோரும் அவர்கள் அடைவதற்கு உரிய பயனாக உள்ளான். பத்து தலைகளை உடைய அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அவனது தலைகளும் தோள்களும் மலையின் கீழே அமுங்கி முறியும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய இறைவன், சண்பை என்று அழைப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி அமைந்துள்ளான். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai