120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 10

மூன்றாவது அடி
120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 10


பாடல் 10:

    காழியான் அயன் உள்ளவா காண்பரே
    காழியான் அயன் உள்ளவா காண்பரே
    காழியான் அயன் உள்ளவா காண்பரே
    காழியான் அயன் உள்ளவா காண்பரே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை

காழியான யன் உள்ளவா காண்பரே
காழியான் நயன் உள்ளவா காண்பரே
:காழியான் அயன் உள்ள ஆ கண் பரே
காழியான் அயன் உள் அவா காண்பரே

முதல் அடி; காழியான்=காழி நகரைப் போன்ற; சீர்காழி நகரம் ஊழிக்காலத்திலும் எந்த விதமான மாற்றமும் அடையாமல் நிலையாக இருப்பது போன்று, மலங்களினால் கெடாத சிந்தனை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும்; யன்=பக்தர்கள்/அடியார்கள்; உள்ளவா= மெய்ப்பொருளின் தன்மை உணரும் வண்ணம்; காண்பரே=தனது அருட்கண்ணால் பெருமான் நோக்குவார். இரண்டாவது அடி; காழியான்=களங்கம் உள்ளவன்; பெருமானின் கழுத்தினில் விடத்தினால் உண்டான நீலநிறத்து கறை இங்கே களங்கம் என்று சொல்லப் படுகின்றது; நயன்=நயனம் என்பதன் சுருக்கம்; மூன்றாவது அடி: காளிமம் என்பது கருமை நிறத்தினை குறிக்கும்; காளியன்=கருமை நிறம் உடைய திருமால்; காளியன் என்ற சொல் காழியன் என்று திரிந்துள்ளது; அயன்=பிரமன்; உள்குதல்=நினைத்தல்; உள்ள=நினைக்க; ஆ என்ற சொல் அதிசயக் குறிப்பினை உணர்த்தும்; கண் என்ற சொல் இங்கே காண் என்று நீண்டது; கண்-கருதுதல்; பரே=அன்னியம்; நான்காவது அடி: காழியான்=சீர்காழி நகரத்தின் தலைவனாகிய இறைவன்; ஐயன் (தலைவன் என்று பொருள்) என்ற சொல்லின் திரிபு அயன் என்பதாகும். உள்=அறிவினில் உள்ளே; அவா=ஆசை; காண்பரே=காண முடியுமா, காண முடியாது; 

பொழிப்புரை:

ஐந்து பொறிகள் விளைவிக்கும் சேட்டைகளால் எந்தவிதமான மாற்றமும் அடையாமல் நின்மல சிந்தையை உடைய அடியார்கள், மெய்ப் பொருளின் தன்மையை உணரும் வண்ணம், தனது அருட்கண்ணினால் அவர்களை நோக்கி அருள் புரிபவர் சிவபெருமான். பெருமானின் அருளினால் ஞானக்கண் பெற்ற அடியார்கள், அந்த ஞானக் கண் கொண்டு  பெருமானின் கழுத்தினில் உள்ள நீலநிறத்து கறையினையும், பெருமானை உணர்த்தும் மற்ற அடையாளங்களையும் உள்ள வண்ணம் காண்பார்கள்; திருமாலும் பிரமனும் சிவபெருமானை மனதில் தியானம் செய்து அவனது அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்ததால், அவர்கள் இருவரும் எவ்வளவு தூரம் அகழ்ந்தும் பறந்தும் சென்ற போதும் அவர்களால் அடியையோ முடியையோ காண முடியவில்லை. இது அதிசயம் அல்லவா. சீர்காழி தலத்தின் உறைபவனும் எனது தலைவனாகவும் உள்ள பெருமானின் அடியையோ முடியையோ காண வேண்டும் என்ற ஆசை திருமால் மற்றும் பிரமனின் உள்ளத்தில் இருந்தாலும், அவர்களால் காண முடியுமா, காண முடியாது அல்லவா.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com