சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 11:

      கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே
      கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே
      கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே
      கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

  விளக்கம்:

  பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

  கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
  கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
  கொச்சையன் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே
  கொச்சை அண்ணலை கூட கிலார் உள்தல் மூடரே 

  முதல் அடி; கொச்சை=அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலம்; கூடகிலார்=ஆணவ மலம் அனைத்து உயிர்களுடன் இணைந்தது என்ற கொள்கைக்கு உடன்படாத சமணர்கள்; மூடாரே என்ற சொல் மூடரே என்று குறுகியது; இரண்டாவது அடி; கொச்சை=புலால் நாற்றம் வீசும் உடல்; அண்ணுதல்=அணுகுதல், இங்கே பொருந்திய என்ற பொருளுடன் வருகின்றது; கூடகிலார்=நிலையற்றது உடல் என்ற கொள்கையுடன் பொருந்தாது வாழும் புத்தர்கள்; மூடரே=துவராடையால் மூடுவார்கள்; மூன்றாவது அடி: கொச்சையன்= அருவருக்கத் தகுந்த மீன்வாடை தனது உடலில் வீசுபவளாக திகழ்ந்த மீனவப்பெண் மச்சகந்தி; மீனவப் பெண்ணாகிய மச்சகந்தியை கண்டு மனம் மயங்கிய அத்தினாபுரத்து அரசன் சந்தனு, அவளது உடலிலிருந்து வீசிய நறுமணத்தால் மனம் கவரப் பட்டான் என்று மகாபாரதம் கூறுகின்றது. அந்த நறுமணம் மீனவப் பெண்ணுக்கு முனிவர் பராசரரால் கிடைத்தது என்பதை இந்த பாடல் உணர்த்துகின்றது; நலை=நலன் கருதி; அகில் ஆர்=அகிற்புகை வாசனையுடன்; கூடு=கூடி பொருந்தும் வண்ணம்; மூடரே=பொருத்திய பராசர முனிவர்; நான்காவது அடி: கொச்சை அண்ணல்=கொச்சை வயம் என்று அழைக்கப்  படும் சீர்காழி தலத்தின் தலைவன்; கூடகிலார்=நேரில் கண்டு வணங்காத மனிதர்கள்; மூடரே=அறியாமை நிறைந்த மனதினை உடையவர்களே. உள்தல் கூடகிலார் என்று சொற்களை மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும்.    
   
  பொழிப்புரை:

  அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலம் அனைத்து உயிர்களுடன் இணைந்துள்ளது என்ற கொள்கைக்கு உடன்படாத சமணர்கள் தங்களது உடலினை மூடாமல் திரிவார்கள்; நிலையற்ற உடல் என்ற கொள்கையுடன் பொருந்தாத புத்தர்கள், புலால் நாற்றம் வீசும் தங்களது உடலினை துவராடையால் மூடுவார்கள்; மிகுந்த விருப்பத்துடன் தான் புணர்ந்த மீனவப் பெண்ணின் உடலில் வீசிய துர்நாற்றம் மிகுந்த மீன் வாடையை நீக்கி, அவளது உடலில் அகிற்புகையின் நறுமணம் பொருந்தும் வண்ணம் செய்தவர் பராசர முனிவர்; அத்தகைய பராசர முனிவரால் வணங்கப்பட்டவரும் கொச்சைவயம் என்று அழைக்கப் படும் சீர்காழி நகரத்தில் உறைபவரும் ஆகிய அண்ணல் சிவபெருமானை மனதினில் தியானித்து அவரை நேரே தரிசனம் செய்து வணங்காத மனிதர்கள் எப்போதும் அறியாமையில் மூழ்கி இருப்பார்கள். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai