120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 12

நிலையான பேரின்பம்
120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 12


பாடல் 12:

    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

கழுமல் அமுது பதிக்க உள் நீ கட்டு உரை
கழு மலமது பதி கவுணி அன் கண் துரை
கழும் மலம் அமுது பதி க உணியன் கட்டு உரை 
கழுமலபதி கவுணியன் கட்டு உரை

முதல் அடி; கழுமல்=மிகுதிப் பட்ட குற்றம்; அமுது=சலம், நீர், சுக்கில சுரோணிதம் ஆகிய விந்து நீர்; பதிக்க=விளைவிக்க; உள் நீ=உள்ள ஆன்மாவாகிய நீ; கட்டு=வடிவமாகக் கட்டுண்டு பின்னர் வினைகளால் கட்டுண்டு; உரை=தேய்தல், தேய்ந்து=அழிதல்; பிறவியின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது; பிறவி உயிர் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக இருப்பதால், பிறவிக்கு காரணமாகிய விந்து நீர்களும் குற்றத்தின் விளைவாக கருதப்படுகின்றன. இரண்டாவது அடி; கழு=கழுவப்படும்; அது=ஆணவ மலமும் அதனுடன் கூடிய கன்ம மற்றும் மாயா மலங்களால் ஏற்படும் விளைவுகள்; பாதி என்ற சொல் பத்தி என்று குறுகியது; பாதி என்பது இங்கே பெருமானின் உடலில் பாதியாக உள்ள பிராட்டியின் அருளும் தன்மையை குறிப்பிடுகின்றது. பெருமானின் அருள் வடிவமாகத் தானே பிராட்டி கருதப் படுகின்றாள். கவுணி=தன்னுள்ளே அகப்படுத்திக் கொள்ளும் தன்மை; அன்கண்=ஆன்மாவிடத்து; துரை=இறைவர்; மூன்றாவது அடி: கழும்=மயக்கம்; அலம்=துன்பப்படுதல்; க=தலை; உணியன்=பலி ஏற்று உண்பவர்; கட்டு= விளக்கம்; உரை=உரைப்பொன் போன்று தூய்மையானவர்; நான்காவது அடி, முதுபதி= தொன்மையனா தலம்; கவுணியன்=திருஞான சம்பந்தரின் ஒரு பெயர்; கவுணிய கோத்திரத்தைச் சார்ந்தவர் என்பதால் வந்த பெயர்; காட்டு=கட்டு என்று குறுகியது; காட்டு= ஆன்மாக்களுக்கு உபதேசமாக காட்டிய பாடல்; உரை=உரைத்து பயன் அடைவீர்களாக; காட்டிய என்பதற்கு பெருமானுக்கு நிவேதனமாக சம்பந்தர் காட்டிய பாடல் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.  

பொழிப்புரை:

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலில் மிகுதிப் பட்ட குற்றங்களால் விளையும் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகிய விந்து நீர்களின் சேர்க்கையால் உண்டாகும் உடலுடன் கட்டுண்டு இருக்கும் உயிர்கள், தங்களது வினைகளால் தேய்ந்து முடிவில் ஒரு நாள் உடலினை இழக்கின்றன. இவ்வாறு பிறவி தோன்றி மறைகின்றது. கழுமலத்தின் தலைவராகிய இறைவர், தன்னில் பாதியாக உள்ள அருளின் வடிவமாக உள்ள பராசக்தியின் மூலம், ஆணவமலம் கன்மமலம் மற்றும் மாயாமலம் ஆகிய மலங்களின் சேர்க்கையால் ஏற்படும் விளைவுகளை தானே உள்வாங்கிக் கொண்டு அடியேனை ஆட்கொண்டுள்ளார். மாயாமலத்தின் கண் அகப்பட்டு பிறவியின் நோக்கத்தை அறிய முடியாமல் துன்பமடையும் உயிர்களுக்கு அமுதம் போன்று அரியதாக உள்ளவனும், விளக்கமாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவனும், பிரமனின் கபாலத்தில் பலி ஏற்பதற்காக உலகெங்கும் திரிபவனும் ஆகிய இறைவன், உயிர்களின் மீது மிகுந்த கருணை கொண்டுள்ளான். பண்டைய நாளிலிருந்து தொடர்ந்து இருந்து வரும் நகரமாகிய கழுமலம் நகரத்தின் தலைவனாக உள்ள பெருமானின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வழியிலும் ஆன்மாக்களுக்கு உபதேசமாக அமைந்த முறையிலும் சம்பந்தன் இயற்றிய பாடலை பலமுறை படித்து பெருமானின் அருள் பெற்று, உங்களது மலங்களை நீக்கிகொண்டு உய்வினை அடைவீர்களாக.        

முடிவுரை: 

பொருளாழம் மிகுந்த பாடலாயினும், ஓதுவதற்கு மிகவும் எளிமையான பாடல். நான்கு அடிகளும் ஒன்றே போல இருப்பதால் மனனம் செய்வதற்கும் மிகவும் எளிதான பாடல். இந்த பாடலுக்கு பொருத்தமாக கூறப்பட்டுள்ள வியாழக்குறிஞ்சி பண்ணும் மிகவும் எளிமையானது. மேலும் சிறப்பு வாய்ந்த சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களையும், முறையாக சொல்வதே புண்ணியம் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பதிகம் அந்த பன்னிரண்டு பெயர்களையும் நான்குமுறை நாம் ஓதும் வண்ணம் அமைந்துள்ளமையால், ஒதுவோர்க்கு பல மடங்கு பயன்கள் விளையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. இந்த பாடலை அடிக்கடி ஓதி, நமது பழைய வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு நிலையான பேரின்பம் அடைவதற்கு தகுதி உள்ளவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோமாக.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com