121. அரனை உள்குவீர் - பாடல் 11

சிவநெறியே முக்தி
121. அரனை உள்குவீர் - பாடல் 11

பாடல் 11:

    தேரர் அமணரைச்
    சேர்வில் கொச்சை மன்
    நேரில் கழல் நினைத்து
    ஓரும் உள்ளமே

விளக்கம்:

மன்=மன்னன்; நேரில்=ஒப்பு அற்ற; ஓரும்=தியானிக்கும்; சேர்வில்=சேராத; ஓர்தல் என்ற சொல்லுக்கு ஆராய்தல் என்றும் பொருள். பெருமானே முழுமுதற்கடவுள் என்றும் சிவநெறியே முக்திக்கு அழைத்துச் செல்லும் நெறி என்றும் மற்ற நெறிகள் பிறவிக்கு காரணமாக இருப்பன என்றும் உள்ள உண்மை நிலையினை ஆராய்ந்து தெரிந்து கொண்டு பெருமானை எப்போதும் தியானித்தல் என்று பொருத்தமாக பொருள் கூறுவார்கள். முதலில் பெருமானை இகழ்ந்து பேசினும் தங்களது தவறுகளை உணர்ந்து வருந்திய பிரமன் மற்று திருமாலுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடலில். புத்தர்களையும் சமணர்களையும் பெருமான் சென்று சேரார் என்று கூறுகின்றார். இவர்கள் இருவரும் எப்போதும் பெருமானை பழிப்பதும், தாங்கள் செய்வது தவறு என்பதை உணராத நிலையில் இருப்பதுமே, பெருமான் அவர்களைச் சென்று சேராததன் காரணம் என்பதை மறைமுகமாக சம்பந்தர் உணர்த்துவது ரசிக்கத் தக்கது.    

பொழிப்புரை:

புத்தர்கள் மற்றும் சமணர்களை சென்று அணுகாதவனும், கொச்சைவயம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலத்தின் அரசனும் ஆகிய ஒப்பற்ற இறைவனின் திருவடிகளை நினைத்து அடியேனின் உள்ளம் தியானம் செய்கின்றது. 

பாடல் 12:

    தொழு மனத்தவர்
    கழுமலத்துறை
    பழுதில் சம்பந்தன்
    மொழிகள் பத்துமே

விளக்கம்:

பத்து=பற்றுக்கோடு; பழுதில்=குற்றமற்ற

பொழிப்புரை:

பெருமானைத் தொழுது உய்வினை அடையும் அடியார்கள் நிறைந்த கழுமலம் என்று அழைக்கப்படும் நகரில் உறைபவனும், குற்றமற்ற பாடல்களை பாடுவோனும் ஆகிய சம்பந்தனது பாடல்கள் உயிருக்கு பற்றுக்கோடாக விளங்குகின்றன.   

முடிவுரை:

முதல் பாடலில் பெருமானை துதித்து பாடுமாறு உலகத்தவரைத் தூண்டும் சம்பந்தர், இரண்டாவது பாடலில் பெருமானது திருவுருவத்தை நேரில் கண்டு பேணுமாறும், மூன்றாவது பாடலில் அவனே நமது தலைவன் என்று புரிந்து கொண்டு பணிந்து வணங்குமாறும், நான்காவது பாடலில் அவன் ஒருவனே என்றும் அழியாமல் நிலையாக இருப்பவன் என்றும் அறிந்து கொள்ளுமாறும் ஏழாவது பாடலில் இறைவனை தினமும் நினைத்து பணிந்து வணங்குமாறும், எட்டாவது பாடலில் அவனது திருநாமங்களை என்றும் மறவாது நினைக்குமாறும், பதினோராவது பாடலில் இறைவனின் ஒப்பற்ற திருவடிகளை நினைக்குமாறும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் மாற்று உரைக்கும் பொன் போன்று ஒப்பற்றவன் பெருமான் என்றும் ஆறாவது பாடலில் உமை அன்னையின் கணவன் என்றும், ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் இராவணன், பிரமன் மற்றும் திருமால் செய்த தவறுகளை மன்னித்து அவர்களுக்கு அருள் மழை பொழிந்ததை நினைவூட்டும் பெருமான், பதினோராவது பாடலில் பெருமான் தன்னை இகழ்ந்து பேசுவோரைச் சென்று சாரார் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்து பாடல்கள் நமக்கு பற்றுக்கோடாக இருந்து, சிவபெருமானின் தன்மைகளை புரிந்து கொண்டு அவனை  வணங்கி வாழ்வினில் உய்வினை அடைய உதவும் என்று சம்பந்தர் கூறுகின்றார். சம்பந்தர் காட்டிய வழியில் சென்று பெருமானை வணங்கி சிவநெறியில் நின்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக.          
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com