122. கல்லால் நீழல் - பாடல் 1

மாசில் வீணையும்
122. கல்லால் நீழல் - பாடல் 1

முன்னுரை:

திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்களில் இருக்குக்குறள் வகையைச் சார்ந்தவை மொத்தம் ஒன்பது பதிகங்கள். அவற்றுள் ஏழு பதிகங்கள் குறிஞ்சி பண்ணிலும் மற்ற இரண்டு பதிகங்கள் கொல்லி பண்ணிலும் அமைக்கப் பட்டுள்ளன. இந்த பதிகங்களில் எட்டு பதிகங்கள் பல தலத்து இறைவன் மீது பாடப்பட்டவை என்பதால் அந்த பதிகங்கள் எப்போது எந்த சூழ்நிலையில் பாடப்பட்டவை என்பதை பெரியபுராணப் பாடல்களிலிருந்து நாம் உணர முடிகின்றது. எஞ்சிய ஒரு பதிகம் பொது பதிகமாக அமைந்துள்ளது. இந்த பதிகம் எப்போது எந்த சூழ்நிலையில் பாடப்பட்டது என்பதை உணரும் வண்ணம் பெரிய புராணத்தில் குறிப்பு ஏதும் இல்லை. பல உரை ஆசிரியர்கள், இந்த பதிகம் தனது நான்காவது தல யாத்திரையை முடித்த பின்னர் சீர்காழியில் தங்கியிருந்த நாட்களில், அரனை உள்குவீர் என்று தொடங்கும் திருவிருக்குக்குறள் பதிகம் (1.90) பாடிய போது சம்பந்தர் பாடியது என்று கருதுகின்றனர். இந்த பதிகத்தின் பாடல்களில், சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் கனவிலும் கடவுளாக கருதலாகாது என்று உணர்த்தப் படுகின்றது.     

பாடல் 1:

    கல்லால் நீழல்
    அல்லாத் தேவை
    நல்லார் பேணார்
    அல்லோம் நாமே

விளக்கம்:

கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக்கடவுள் வடிவத்தில் அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எந்த தேவரையும் நல்லார் பேணார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நல்லார் என்பதற்கு உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.     
    
    பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான்
        மற்று இலேன் கண்டாய்
    செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை
        உறை சிவனே
    தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என
        நினைவனோ சொல்லாய்  
    மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று
       அருள் புரியாயே

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார்.  இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமானே ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.

    பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்
    சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே
    ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால் 
    வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே 

தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர், வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார். 

    மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
    மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
    ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
    வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.     

    ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே
  
பொழிப்புரை:  

கல்லால மரத்தின் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறநெறி உணர்த்திய தென்முகக் கடவுளாகிய சிவபெருமானை அன்றி மற்றொரு தெய்வத்தை, நல்லவர்களாகிய சான்றோர்கள் பேணார். நாமும் அத்தகைய நல்லவர்களை பின்பற்றி சிவபெருமானைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்தையும் போற்றாது, வணங்காது இருப்போமாக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com