122. கல்லால் நீழல் - பாடல் 2

தெய்வமாகிய சிவபெருமான்
122. கல்லால் நீழல் - பாடல் 2


பாடல் 2:

    கொன்றை சூடி
    நின்ற தேவை
    அன்றி ஒன்று
    நன்று இலோமே

விளக்கம்:

நன்று=நன்மை விளைவிப்பது; இங்கே உயிருக்கு நன்மை விளைவிக்கக்கூடிய பொருள் சிவபெருமான் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி இடர்ப்படும் உயிர்கள் விரும்புவது, இந்த துன்பத்திலிருந்து விடுபட்டு நிலையான பேரின்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையினைத் தான். எனவே இந்த நிலை ஒன்று தான் உயிருக்கு நன்மை பயக்கக்கூடிய செயல். உயிர்களுக்கு முக்தி அளிக்கும் வல்லமை சிவபெருமான் ஒருவரைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதால் உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை வாய்ந்தவர் அவர் ஒருவர் தான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. 

இந்த பாடலில் கொன்றை மலர் சூட்டிக் கொண்டுள்ள தெய்வமாகிய சிவபெருமான் ஒருவரே உயிர்களுக்கு நன்மை பயப்பவர் என்று சம்பந்தர் கூறுவது சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகளை நினைவூட்டுகின்றது. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் சம்பந்தரால் நமக்கு உணர்த்தப்படுகின்றது.        

    மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப்
         பொய்கையில் புதுமலர்  கிழிய
    பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி கவுணியர்
         பெருமான்
    கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை
         ஞான சம்பந்தன தமிழ்  கொண்டு
    அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர்
        அருவினை இலரே 

கொன்றை மலர் பெருமானுக்கு மிகவும் உகந்த மலராகும். திருஞான சம்பந்தர் தனது பாடல்களில் பலவற்றிலும் கொன்றை மலரினை பெருமானுடன் இணைத்துப் பாடியுள்ளார். அந்த காரணம் பற்றியே திருஞானசம்பந்தரை தனது திருத்தொண்டத்தொகை பதிகத்தில் குறிப்பிடும் சுந்தரர் கொன்றை என்று பெருமானை குறிப்பிட்டு, நற்கொன்றையின் அடி அலால் பேணாத எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். 

பொழிப்புரை: 

கொன்றை மாலையினைச் சூடி நிற்கும் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் உயிர்களுக்கு வீடுபேறு அளித்து நன்மை செய்யும் தெய்வமாக நாங்கள் கருத மாட்டோம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com