122. கல்லால் நீழல் - பாடல் 3

திருவடிகளை புகழ வேண்டும்
122. கல்லால் நீழல் - பாடல் 3


பாடல் 3: 

    கல்லா நெஞ்சின்
    நில்லான் ஈசன்
    சொல்லதாரோடு
    அல்லோம் நாமே

விளக்கம்:

கல்லா நெஞ்சு என்ற தொடருக்கு சிவபெருமானின் பெருமைகளை அறியாத நெஞ்சம் என்று ஒரு பொருளும், கல் போன்று கடினமான நெஞ்சம் என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமாக உள்ளன. சிவபெருமானின் பெருமைகளை அறிந்து கொண்டு அவனது திருநாமங்களை சொல்லாதவர்களுடன் நாங்கள் சேர மாட்டோம் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு இவர் கூறுவது நமக்கு திருவாசகம் அச்சப்பத்து பதிகத்தின் பாடலை நினைவூட்டுகின்றது. 

    தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
    வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
    செறி தரு கழல்கள் ஏத்திச் சிறந்து இனிது இருக்க மாட்டா
    அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

உழுவை=புலி; கண்களின் வழியே நெருப்பினை உமிழும் புலிக்கும் தறியில் கட்டப்பட்டுள்ள யானைக்கும் அஞ்சாத தான் அஞ்சுவது பெருமானின் திருவடிகளை புகழ வேண்டும் என்ற அறிவு இல்லாதவர்களை என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். அவர்களைக் கண்டால் அடிகளார் அஞ்சுவது எதற்காக என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். அத்தகைய மனிதர்களுடன் பழகினால் தானும் அவர்களைப் போன்று மாறி, பெருமானை சிந்தியாது இருக்கும் நிலை ஏற்படுமோ என்ற பயம் தான் அவர்களை நினைத்து, அடிகளார் அச்சம் கொள்ள வைக்கின்றது. எனவே அவர்களுக்கு அஞ்சி அவர்களுடன் சேராமல் இருக்க வேண்டும் என்பதையே தனது கருத்தாக அடிகளார் இங்கே வெளிப்டுத்துகின்றார். இதே கருத்து தான் மேற்கண்ட பாடலில் திருஞான சம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இந்த திருவாசகப் பாடலில் பெருமானின் திருப்பாதங்களை புகழ்ந்து வணங்கினால் அதன் பயனாக ஆனந்தமும் அமைதியும் பெற்று சிறப்புடன் இனிதாக இருக்கலாம் என்றும் உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் இத்தகைய ஆனந்தமும் அமைதியும் பெற விரும்பாதவர்களை அறிவற்றவர்கள் என்று கூறுவது பொருத்தம் தானே.  

திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.16.9) திருஞானசம்பந்தர், பிரமனும் திருமாலும் சிவபெருமானின் பெருமைகளை கற்று அறியாதவர்களாக இருந்தனர் என்று கூறுகின்றார். தோற்றம்=படைப்பு; தோற்றம் கண்டான்=படைப்புத் தொழிலினைப் புரியும் பிரமன்; பொதுவாக ஞானசம்பந்தரின் பதிகத்தின் ஒன்பதாவது பாடல்கள் பிரமனும் திருமாலும் பெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்த காட்சியினை குறிப்பிடும் பாடல்களாக அமைந்துள்ளன. அந்த செய்தி இந்த பாடலில்  குறிப்பிடப்படவில்லை; எனினும், பொதுவாக ஞானசம்பந்தர் பின்பற்றும் பாணியினை உணர்ந்த நாம் அந்த செய்தியை இந்த பாடலும் உணர்த்துவதாகவே கொள்ள வேண்டும். நெடுமாலையும் பிரமனையும் கல்லாதவர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம், பெருமானின் பெருமையை அறியாததால், அவர்கள் இருவரும் பெருமானின் முழு உருவத்தைக் காண முடியாமல் திகைத்து நிற்க நேரிட்டது என்று அவர்களின் நிலைக்கு காரணத்தையும் நமக்கு சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பெருமானின் பெருமையை உணராமல் யார் பெரியவர் என்று தங்களுக்குள்ளே அவர்கள் இருவரும் வாதம் செய்து கொண்டிருந்த போது தானே பெருமான் அவர்களின் முன்னே நீண்ட நெடும் தழற்பிழம்பாக தோன்றினார் அல்லவா., கற்றன=தாங்கள் அறிந்த சிவபிரானின் புகழினை உணர்த்தும் பாடல்கள். கல்லாதவர்கள் திகைத்து நிற்க, கற்றவர்கள் பெருமானின் புகழினை பாடல்களாக பாடி வாழ்வினில் உயர்வினை அடையும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகத்துப் பொருட்கள் அனைத்திலும் பெருமான் கலந்து நிற்கும் தன்மை இந்த பாடலில் எல்லாமாம் எம் பெருமான் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.  

    சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும் 
    கல்லானைக் கற்றன சொல்லித் தொழுது ஓங்க
    வல்லார் நன் மாதவர் ஏத்து மணஞ்சேரி
    எல்லாமாம் எம் பெருமான் கழல் ஏத்துதுமே  

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் முதல் பாடலில் (6.5.1) சிவபெருமானின் பெருமைகளை கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை,. அவர்கள் பெறுகின்ற பலனின் அடிப்படையில், மிகவும் அழகாக அப்பர் பிரான் விளக்குகின்றார். சிவபெருமானின் திருநாமமாகிய பஞ்சாக்கர மந்திரத்தை அறிந்து உணர்ந்தவர்களையே, அப்பர் பிரான் கற்றார் என்று கருதுகின்றார். எஞ்சியோரை அவர் கல்லாதார் என்று கருதுகின்றார். கல்லாதார் காட்சிக்கு அரியாய் என்று பிரமனும் திருமாலும் பெருமானை அறிய முடியாமல் நின்ற நிலை உணர்த்தப் படுகின்றது. கல்லாதவர்கள் காண முடியாமல் நிற்கும் பெருமான் கற்றவர்களின் துயரங்களைக் களைபவனாக இருக்கும் நிலையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. வியன்=அகன்ற: அரணம்=கோட்டை: உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுடன் தொடர்பு கொண்டும், அனைத்து உயிர்களிலும் கலந்தும் சர்வ வியாபியாக, எங்கும் சிவபெருமான் நிறைந்து நிற்கும் தன்மை இந்த பதிகத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.  

    எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற
        இறைவா போற்றி
    கொல்லார் மழுவாட் படையாய் போற்றி கொல்லும்
        கூற்று ஒன்றை உதைத்தாய்  போற்றி
    கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை
        களைவாய் போற்றி
    வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல்
        விமலா போற்றி

செங்காட்டங்குடி தளத்தின் மீது அருளிய பதிகத்துப் பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். உற்றோரும்= உற்று+ஓரும், அடைந்து ஆராயும்; பொன்றி=அழிந்து; கல்லாதார்=இறைவனை இடைவிடாது தியானம் செய்யாமல் இருப்பவர்கள்;

    கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னைக் கற்றார்கள்
          உற்றோரும்  காதலானைப்
    பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று
          பொருசரம்  தொட்டானை
    நில்லாத நிணக் குரம்பைப் பிணக்கம் நீங்க நிறை தவத்தை
          அடியேற்கு நிறைவித்து  என்றும்
    செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைச் செங்காட்டங்குடி
          அதனில் காண்டேன்  நானே

தன்னை இடைவிடாது தியானிக்காமல் இருக்கும் மாந்தர்களின் மனதினை அணுகாதவனும், உயர்ந்த மெய்ந்நூல்களை தேர்ந்தெடுத்து ஆராய்ந்து அனுபவித்து படிக்கும் அடியார்களின் காதலனும், பிறர்க்கு துன்பங்கள் இழைக்கும் பொல்லாத நெறியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழிந்து விழுமாறு போருக்கு உகந்த அம்பினைத் தொட்டவனும், நிலையில்லாததும் புலாலால் போர்க்கப்பட்ட குடிசையும்,   நரை திரை மூப்பு பிணி இறப்பு ஆகிய மாற்றங்கள் நிகழ்வதும் ஆகிய உடலின் மீது அடியேன் வைத்திருந்த ஆசையை நீக்கியவனும், நிறைவான தவநெறியை மேற்கொள்ளும் வண்ணம் என்னை வழிநடத்தியவனும், வேறு எந்த நெறியையும் நாடாத வண்ணம் வேறு எந்த நெறிக்கும் புடை பெயர்ந்து செல்லாத வண்ணம், செம்மையான சிவநெறியில் என்னை செலுத்தியவனும் ஆகிய இறைவனை அடியேன் திருச்செங்காட்டங்குடி தலத்தில் கண்டேன் என்பதே அப்பர் பிரான் அருளிய மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரை. 

ஆலம்பொழில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.86.9) கல்லாத மூடர்களுக்கு நல்லவன் அல்லாதவனாக பெருமான் இருக்கும் நிலையை உணர்த்தும் அப்பர் பிரான், பொய்யேதும் இல்லாமல் மனதினில் வஞ்சனையை நீக்கி வழிபடும் அடியார்க்கு உண்மையாக இருப்பவன் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். கடுமையாக தவங்கள் செய்து, பறக்கும் தங்களது கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் தருணத்தில் மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தினை பெற்றவர் திரிபுரத்து அரக்கர்கள் என்பதை குறிக்கும் பொருட்டு, கடுந்தவத்தோர் என்று அப்பர் பிரான் அவர்களை குறிப்பிடுகின்றார். சாக்கியர்=புத்தர்; செய்யினார்=வயல்கள் நிறைந்த; எரி=அக்னித் தேவன்; கால்=வாயு தேவன். 
    

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத
          வன்மூடர்க்கு அல்லாதானைப்
    பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானைப் பூண்
            நாகம் நாணாகப் பொருப்பு             வில்லாக்
    கையினார் அம்பு எரி கால் ஈர்க்குக் கோலாக் கடுந்தவத்தோர்
            நெடும் புரங்கள் கனல்  வாய் வீழ்த்த
    செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம்பொழிலானை
             சிந்தி  நெஞ்சே          
 

பொழிப்புரை:  

தனது (பெருமானது) பெருமைகளை கற்று அறியாத மனிதர்களின் நெஞ்சத்தில் ஈசன் நிற்பதை தவிர்ப்பான்; எனவே அவனது திருநாமத்தைச் சொல்லாத மைந்தர்களுடன் நாம் சேர மாட்டோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com