118. யாமாமாநீ யாமாமா - பாடல் 3

ஐயிராவணம் என்ற யானையை
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 3


பாடல் 3:

    தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
    மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

விளக்கம்:

    தாவா மூவா தாசா காழீநாதா நீ யாமா மா
    மாமா யாநீ தாநாழீ கா சா தா வா மூ வாதா

தாவா=அழியாத, மூவா=மூப்பு அடையாத, தாசா=தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே; யாமா=யாமத்தில், நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்; மா=விலங்கு, இங்கே கயிலாயத்தில் உள்ள ஐயிராவணம் என்ற யானையை குறிக்கும். மாமா=மாண்பு மிகுந்தவனே, யாநீ=ஏறி வருபவன்; தாநாழீ=பக்தர்களுக்கு அருள் தருவதில் கடலை ஒத்தவன்; தான+ஆழி=தானம் அளிப்பதில் கடலைப் போன்று பரந்த மனதினை உடையவன்; கா=காப்பாற்றுவாய்; சா=இறப்பதிலிருந்து; இறப்பதலிருந்து காப்பாற்றுவாய் என்பதன் மூலம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று வேண்டுகின்றார். பிறந்த அனைவரும் ஒரு நாள் இறக்கத் தான் வேண்டும். இறப்பதை தவிர்க்க வேண்டும் என்று நாம் விரும்பினால், மறுபடி பிறப்பதையே தவிர்க்க வேண்டும் அல்லவா. காசா=இரத்தினம் போன்று ஒளி வீசுபவனே; தா=கேட்ட வரங்களை தா; வா=முன்னே எழுந்தருளி தரிசனம் தா; மூ=அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனே, வாதம் என்றால் காற்று என்று பொருள். வாதா நிலம், நீர், தீ. வாய். ஆகாயம் என்று ஐந்து பூதங்களாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்துகின்றார்.     

தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ நீக்கம், ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்ம நீக்கம், சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம் சிவபோகம் என்பன தச காரியங்கள் என்று ஒரு தொகுப்பாக அழைக்கப்படும். குருவருளால் ஞானத்தை கேட்டல் என்ற நிலையில் எல்லோருக்கும் நிட்டையாகிய சீவன் முக்தி நிலை வந்துவிடுவதில்லை. அதன் பின்னர் சிந்தித்தல், தெளிதல் நிகழ்ந்த பின்னரே அத்தகைய சீவன்முக்தி நிலை ஏற்படும். ஞானத்தின் மேற்கூறிய நான்கு படிநிலைகளையே வேறொரு வகையால் பகுத்து தசகாரியம் என்று     குறிப்பிடுவார்கள். இவை அனைத்தும் அறிவின் கண் நிகழும் நிலை வேறுபாடுகளே அன்றி உடற்கண் நிகழும் செயல்கள் அல்ல. மேற்கண்ட தசகாரிய நிலைகளில் தத்துவம், ஆன்மா, சிவம் என்ற மூன்று பொருட்கள் கூறப்பட்டிருப்பதை நாம் உணரலாம். இவை மூன்றும் பாசம், பசு, பதி அன்றே தவிர வேறல்ல.

ஆசிரியரின் உபதேசம் மற்றும் நூல்களின் துணை கொண்டு தமது அறிவுக்குப் பொருந்தும் வண்ணம் ஆராய்தலே சிந்தித்தல். அவ்வாறு சிந்திக்கும் போது முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும் நூல்களில் சொல்லிய வண்ணம் விளக்கமாக அறிந்து கொள்ளுதல் தத்துவரூபம் ஆகும். இந்த தத்துவங்கள் பொருந்துமா அல்லது பொருந்தாதா என்று ஆராய்தல் தத்துவ தரிசனமாகும். பின்னர் இந்த தத்துவங்கள் அனைத்தும் சடப் பொருட்கள் என்றும், இவை ஆன்மாவாகாது, ஆன்மா வேறு இந்த தத்துவங்கள் வேறு என்று உணர்தல் தத்துவசுத்தியாகும்.

தத்துவங்கள் அல்லது அவற்றின் கூட்டங்களோ ஆன்மா அல்ல என்றும் ஆன்மா வேறு என்றும் அறிதல் ஆன்ம தரிசனமாகும், ஆன்மாவின் இயல்பினை நூல்களில் சொல்லிய வண்ணம் அறிந்து கொள்ளுதல் ஆன்ம ரூபம். ஆன்மா தத்துவங்கள் போல் சடம் அல்ல எனினும் தனித்து நின்று அறிய இயலாது என்றும் ஆன்மாவிற்கு     எப்போதும் துணையாக உடன் நின்று உணர்த்தி வருவது இறைவனின் திருவருள்     என்றும் உணர்ந்து யான் எனது என்ற செருக்கு அற்று, எந்த செயலையும்     தனது செயல் அல்லது பிறர் செயல் என்ற எண்ணங்கள் அற்று இருப்பது ஆன்ம சுத்தியாகும்.  

சிவ பரம்பொருளின் பொது இயல்பு (ஐந்தொழில் படுத்துதல்) மற்றும் உண்மை  இயல்பு (எண்குணம் உடைமை) என்று நூல்களில் சொல்லியவாறு அறிந்து கொள்ளுதல் சிவரூபம். இந்த ரூபத்தை தனது அறிவினுக்கு பொருந்துமாறு ஆராய்தல் சிவதரிசனம். சிவபிரானின் இயல்பு அறிவினில் பொருந்தும்போதே, யான் எனது என்ற உணர்வு அற்று நிற்றலும், இதனால் எங்கும் எதிலும் சிவமயமாய் காட்சி காணுதலும், அந்த காட்சியால் சிவானந்த விளைவு ஏற்படுதலும், சிவதரிசனமாகும். சிவதரிசனம் வாய்த்த போது, பழைய வாசனையால் அவ்வப்போது யான் எனது என்ற எண்ணம் எழுந்தாலும், அந்த தற்போதத்தை, சீவபோதத்தை, சிவதரிசன முறையில் சிந்தித்து அடக்கி தன் செயலற்று சிவத்தில் ஒன்றி இருத்தலே உண்மை யோகம் எனப்படும் சிவயோகம் ஆகும். சிவயோகத்தில் திளைத்து இருக்கும்போது தோன்றும் சிவானந்தத்தை நுகர நுகர, சிவானந்தம்     பெருகி, ஆன்ம அறிவை விழுங்கிவிடும். ஆன்மபோதம் அறவே மூழ்கடிக்கப்பட்ட நிலையில் ஆன்மா தன்னையோ அல்லது பிறரையோ பிற பொருட்களையோ உணருவதில்லை. சொல்லற்ற, இரவு பகல் அற்ற, ஏதும் அற்ற இந்த நிலைக்கு மேல் ஆன்மா அடையவேண்டிய பயன் வேறு ஏதும் இல்லை. இந்த நிலை சிவபோதம் ஆகும். இந்த சிவானந்தத்தை இடையறாது அனுபவிக்க தடையாக உள்ள உடலும் நீங்கவே முக்திநிலை வாய்த்துவிடும்

பொழிப்புரை:

என்றும் அழிவடையாமாலும் மூப்பு அடையாமலும் இருக்கும் பெருமானாகிய நீ தசகாரியங்களால் உயிர்கள் சென்று அடையக் கூடியவனாக உள்ளாய்; சீர்காழி நகரின் தலைவனாக விளங்கும் நீ, ஊழிக்காலத்து இருளில் (நள்ளிருளில்) நட்டம் பயின்றாடும் நாதனாகத் திகழ்கின்றாய். அனைத்துச் சிறப்புகளும் உடைய நீ, ஐயிராவணம் என்று அழைக்கப்படும் சிறந்த யானையின் மீது ஏறி வருகின்றாய். அடியார்கள் விரும்பவதை கொடையாக தருவதில், கடலைப் போன்று பரந்த உள்ளம் கொண்டவனாக இருக்கும் நீ, என்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து காத்து அருள் புரிவாயாக. ஒளிவீசும் இரத்தினமாக திகழும் திருமேனியை உடையவனே, எனது முன்னே எழுந்தருளி நான் கேட்கும் வரங்கள் அனைத்தும் தருவாயாக என்று ஐம்பூதங்களின் வடிவமாக உள்ள இறைவனே நான் உன்னை வேண்டுகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com